செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2016-12-19 08:46 GMT   |   Update On 2016-12-23 11:25 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வார்தா புயல் பாதித்த பகுதிகளில் இன்று வரை பல இடங்களில் மின்சாரம் இல்லை. இன்னும் 2 நாட்களில் பணிகளை முடிக்கும் வகையில் அரசு சீரமைப்பை துரிதப்படுத்த வேண்டும்.

முக்கிய சாலைகளில் மட்டுமே நிலைமை சீரடைந்துள்ளது. மின் இணைப்பு வழங்க தேவையான உபகரணங்களை அரசே வாங்கிக் கொடுக்க வேண்டும். பொதுமக்களிடம் வசூலிப்பது அரசின் தவறான திட்டமிடுதலாகும்.

அரசு முழுமையான நிவாரணப் பணிகளை செய்யவில்லை.

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் கனவுத் திட்டம். மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் மீண்டும் உயிர்ப்பெற்றது போல சேது சமுத்திர திட்டமும் செயல்படுத்தப்பட வேண்டும். அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

புயல் பாதிப்புக்கு மத்தியக் குழு விரைவில் வந்து பார்வையிட்டு நிவாரண நிதி வழங்க வேண்டும். புயலுக்கு பலியான 18 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும்.

வார்தா புயலில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. வரும் காலத்தில் இயற்கை சூழலை பாதுகாக்க தேவையான அளவு மரங்கள் நட வேண்டும்.

குறிப்பாக பாரம்பரியமான உறுதியான மரங்களை நட வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 5 தடவை பதவி வகித்தவர். அவரது மறைவை அரசியல் ஆக்கக்கூடாது.

என்றாலும் அரசியல் கட்சிகளுக்கும், பொது மக்களுக்கும், சந்தேகங்கள் எழும்பி உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இந்த சந்தேகங்களை தெளிவுப்படுத்தும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. அதில் எந்தவித தவறும் இல்லை.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் 50 நாட்களில் பிரச்சினை சீரடையாது. சீர்செய்யும் மன நிலையில் மத்திய அரசு இல்லை.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

பேட்டியின்போது கோவை தங்கம், விடியல் சேகர், முனைவர்பாட்சா, அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News