பெண்கள் உலகம்
திருமணமான பெண் தனது காதல் அனுபவங்களை கணவரிடம் பகிர்ந்துகொண்டால்...

திருமணமான பெண் தனது காதல் அனுபவங்களை கணவரிடம் பகிர்ந்துகொண்டால்...

Published On 2022-05-02 04:23 GMT   |   Update On 2022-05-02 04:23 GMT
புதிதாக திருமணமான பெண் தனது காதல் அனுபவங்களை ருசிகரமாக கணவரிடம் பகிர்ந்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை இனிக்குமா? கசக்குமா? என்று அறிந்து கொள்ளலாம்.
காதல் என்பது இயற்கையானது. இருபாலருக்கும் பொதுவானது. காதல் குற்றமில்லை. ஆனால் அது முறையான, ஒழுக்கமான காதலாக இல்லாமல் போனால் அது குற்றம். காதலை பற்றிய செய்தியாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் பலரும் அதை விரும்பி கவனிப்பதற்கு காரணம், அவர்களுக்குள்ளும் காதல் உணர்வு இருந்துகொண்டிருப்பதுதான். காதல் அனைவருக்குமே ஈடுபாட்டைத்தரும் விஷயம் என்றாலும், ‘எனக்கும் முன்பு காதல் இருந்தது..’ என்று, புதிதாக திருமணமான பெண் தனது காதல் அனுபவங்களை ருசிகரமாக கணவரிடம் பகிர்ந்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை இனிக்குமா? கசக்குமா?

எல்லா ஆண்களும் காதலை புனிதமாக மதிப்பதில்லை. பல ஆண்கள், பெண்களால் ஏமாற்றப்பட்டிருக்கவும் செய்கிறார்கள். அதனால் புதுப் பெண்ணின் மனநிலையில் இருந்து தான், புதுமாப்பிள்ளையும் காதலை அணுகுவார் என்று கூற முடியாது. அவர் மனைவியின் காதலை எதிர்மறையாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பே அதிகம். அதனால் தங்கள் பழைய காதலை பெண்கள் புதிய கணவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவர்களது மணவாழ்க்கைக்கு, பழைய காதல் அனுபவம் எந்த விதத்திலும் பலனளிக்காது.

ஒருவேளை கணவர் ‘நாம் புதிதாக வாழ்க்கையில் இணைந்திருக்கிறோம். நமக்குள் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் மனந்திறந்து பேசுவோம்’ என்று கூறி, மனைவியிடம் பழைய விஷயங்களை கிளறினால் என்ன செய்வது?

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது பெண்கள் புத்தி சாலித்தனமாக நடந்துகொள்ள முன் வரவேண்டும். உங்களுக்கு இப்போது 25 வயது என்று வைத்துக்கொண்டால், ஐந்து வயதில் இருந்து, திருமணத்திற்கு முந்தைய நாள் வரை நடந்த அனைத்து விஷயங்களும் உங்கள் நினைவில் இருந்துகொண்டிருக்கும். அனைத்தையும் அப்படியே கணவரிடம் ஒப்பிக்காமல், உங்கள் மணவாழ்க்கைக்கு எந்த சம்பவங்கள் எல்லாம் சிறப்பு சேர்க்குமோ அதை மட்டும் கணவரிடம் சொல்லுங்கள். பிரச் சினையை உருவாக்கும் எந்த விஷயத்தையும் உங்கள் கணவரிடம் சொல்லவேண்டாம். உங்களுக்கு பழைய காதல் அனுபவம் இருந்தால், அதை அப்படியே கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுங்கள்.

அதே நேரத்தில் திருமணத்திற்கு பின்பு தம்பதிகளிடம் புதிய ரகசியங்கள் தோன்றக்கூடாது. திருமணத்திற்கு முன்பு இருவரும் தனி மனிதர்கள். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கைத்துணை என்ற நிலைக்கு வந்துவிடுவீர்கள். அதனால் அதன் பிறகு தனிப்பட்ட ரகசியங்களுக்கு இடமில்லை. ஒழுக்கம், நம்பிக்கை, உண்மை போன்றவைகளை இருவருமே கடைப்பிடிக்கவேண்டும்.

சில தம்பதிகள் முதலிரவிலே தேவையற்ற கதைகளை பேசி, மனக் கசப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள். முதலிரவில் மனம்விட்டுப்பேசுவோம் என்று கூறிக்கொண்டு, நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்த ஒரு ஜோடி, ஒரு கட்டத்தில் பேசுவதற்கு வேறு எந்த விஷயமும் இல்லாத நிலையில் பழைய காதல் அனுபவங்களைப்பற்றி பேசத் தொடங்கி விட்டது. மனைவி சொன்ன காதல் அனுபவங்களை அன்று சிரித்தபடி ஜீரணித்துக்கொண்ட புதுமாப்பிள்ளை பின்பு, மனைவியின் பழைய காதலை பற்றி பலவிதமாக சிந்தித்து குழம்பிப்போய் ஒரு கட்டத்தில் அவள் மீது சந்தேகம்கொள்ளவும் தொடங்கிவிட்டார்.

இன்னொரு பெண் மிக உஷாராக இருந்துகொண்டு தனது காதல் அனுபவம் எதையும் சொல்லவில்லை. ஆனால் தனது கணவனின் காதல் அனுபவங்களை ஆவலாக கேட்டாள். அவனும் தன்னை நவீன மன்மதனாக கருதிக்கொண்டு தன்னை பற்றி சொல்ல, அந்த பேச்சு எல்லை மீறிபோய்விட்டது. உடனே அவள் ‘பெண்கள் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு மோசமான ஆளா?’ என்று கேட்டு, பெரும் பிரச்சினையை உருவாக்கிவிட்டாள். சிறிது காலம் அவர்கள் பிரிந்திருக்கவேண்டிய சூழ்நிலையும் உருவாகிவிட்டது. அதனால் திருமண வாழ்க்கையில் இணையும் ஆணும்-பெண்ணும் பழைய காதல் விஷயங்களை பற்றி பேசவே கூடாது.

மனித மனங்கள் விசித்திரமானவை. முதல் நாள் ஒரு விஷயத்தை சரி என்று சொல்லும். மறுநாளே வேறுவிதமாக சிந்தித்து, அதே விஷயத்தை தவறு என்று சொல்லவைத்துவிடும். ரோட்டில் யாரோ ஒருவருக்கு ஆலோசனை சொல்லும்போது ‘சரிதான்’ என்று சொல்லும் அதே மனது வீட்டில் அதே சம்பவம் நடக்கும்போது அதை ‘தப்பென்று’ கூறி கண்டிக்கும். அதனால் தேவையற்ற விஷயங்களை கணவன், மனைவி இருவருமே பேசக்கூடாது.
Tags:    

Similar News