பெண்கள் உலகம்
பாலியல் சீண்டல்கள்

பெண்களுக்கு பொது இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்கள்

Published On 2022-04-01 07:26 GMT   |   Update On 2022-04-01 07:26 GMT
பெண்களுக்கு பொது இடங்களிலோ, பயணங்களிலோ, அலுவலகங்களிலோ பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டிருக்கும். இதை வெளியில் சொல்லும் போது பெண்களை அடங்கிப்போகும்படி கூறுவது, பாலியல் சீண்டல் செய்பவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது.
* `தெரியாமல் அவனது கை உன்மேல்பட்டிருக்கும். அதற்காக கூச்சல்போட்டுக் கொண்டிருக்காதே..' ** `நடந்தது நடந்துப்போச்சு.. இனி அதை யாரிடமும் சொல்லாதே.. சொன்னால் நமக்குத்தான் அசிங்கம்..' *** `அதை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடு. இது வெளியே தெரிந்தால் உனது எதிர்காலம் பாதிக்கப்படும்..'

- இப்படிப்பட்ட பேச்சு, இளம் பெண்களை கொண்ட பல வீடுகளிலும் எதிரொலிக்கும். அந்த பெண்களுக்கு பொது இடங்களிலோ, பயணங்களிலோ, அலுவலகங்களிலோ பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டிருக்கும். அதை ஆவேசத்துடனோ, கண்ணீருடனோ தாயிடம் கூறும்போது அவர், மேலே சொன்ன உபதேசங்களில் ஏதாவது ஒன்றை கூறி மகளை அமைதிப்படுத்துவார். ஆனால் பெண்களை இப்படி அடங்கிப்போகும்படி கூறுவது, பாலியல் சீண்டல் செய்பவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. இதில் மவுனம் தவிர்க்கப்படவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்கள்- அதை எதிர்கொண்ட முறைகள் பற்றி பெண்களில் சிலர் மனந்திறந்து சொல்கிறார்கள்:

ரஹ்னா மன்சூர் ஷெபின்
மைத்ரேயி (ஆன்லைன் கன்டென்ட் ரைட்டர்): நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டம். அன்று அரசாங்க பஸ்சில் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தேன். பஸ்சின் நடுப்பகுதி இருக்கையில்தான் அமர இடம் கிடைத்தது. முன்னும், பின்னும் கூட்டம். நான் இறங்கவேண்டிய இடம் வந்ததும், எழுந்து முன்னோக்கி சென்றேன். அப்போது ஒரு கை என் தோள் மீது விழுந்தது. பின்பு கீழ்நோக்கி இறங்கியது.

முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், உடனே சுதாரித்துக்கொண்டு அந்த கையைப் பிடித்து இறுக்கி முறுக்கினேன். அவனது முகத்திற்கு நேராகப்பார்த்து திட்டவும் செய்தேன். அதன் பிறகு நான் கூட்டமாக இருக்கும் பஸ்களில் ஏறுவதில்லை. ஏறும் பஸ்சிலும் பாதுகாப்பாக முன்பகுதியில் போய் நின்றுகொள்வேன். இப்போது அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கையில் `ஓரளவாவது எதிர்வினையாற்றினோம்' என்று என்னையே நான் ஆறுதல்படுத்திக்கொள்வேன். நமக்கு பாலியல் சீண்டல்கள் ஏற்படும்போது நாம் மவுனமாக இருந்துவிடக்கூடாது.

ரபீயா ஷெரின் (பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவி): பள்ளிப் பருவத்தில் நடந்ததை முதலில் சொல்கிறேன். பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்புவதற்காக நானும், என் தோழிகளும் பஸ் நிலையம் வந்து காத்திருந்தோம். திடீரென்று எங்கள் பின்னால் ஒருவர் கடந்து போவது தெரிந்தது. அப்போது என் தோழிகளில் ஒருத்தி அழுதுகொண்டிருந்தாள். என்னவென்று கேட்டபோது அவள் பதில் சொல்லாமல் அழுதாள். அப்போது அருகில் நின்றிருந்த பெண் ஒருவர், அந்த நபர் அவளது நெஞ்சில் பலமாக கைவைத்துவிட்டு சென்றதாக சொன்னார். அப்போது எனக்கு 17 வயது. அந்த நாயை பிடியுங்கள் என்று கூறிக்கொண்டே வேகமாக அவனை நோக்கி ஓடினேன். அதற்குள் நாலைந்து பேர் சேர்ந்து பிடித்தார்கள். பின்பு அங்கே நின்றிருந்த போக்குவரத்து போலீசிடம் அவனை ஒப்படைத்தோம்.

பாலியல் சீண்டலுக்கு உள்ளான தோழி அப்போது அங்கே வந்தாள். `அவன் என்னை பிடிக்கவில்லை. தொடத்தான் செய்தான்' என்று கூறிக்கொண்டு வேகமாக அவனை ஒரு அடி அடித்தாள். அவள் தனது வீட்டில் அதை சொன்னபோது `நமக்கு ஏற்பட்ட பாதிப்பை பொது இடத்தில்வைத்து சொன்னால் நமது பெயர்தான் கெட்டுப்போகும்' என்றார்களாம். என் தாயாரிடம் அதை சொன்னபோது, ‘நீங்களெல்லாம் சேர்ந்து கூடுதலாக அவனுக்கு நாலைந்து அடிகொடுத்திருக்கலாமே’ என்றார்.

இன்னொரு முறை பஸ் பயணத்தில் நான் இருக்கையில் அமர்ந்து போனில் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவன் பின்னால் இருந்து என்னை கால் விரலால் சீண்டினான். பொறுத்துப்பார்த்த நான் பின்பு பொறுமையிழந்து தட்டிக்கேட்டேன். உடனே பதிலுக்கு அவன் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டினான். பின்பு நான் எழுந்து நின்று பயணித்தேன். அதன் பின்பும் அந்த நபர் என்னை தொடர்ந்து திட்ட, நானும் பதிலுக்கு திட்டினேன். அப்போது சக பயணிகள் `இருவரும் கீழே இறங்கி சண்டைபோடுங்கள்' என்றார்கள்.

நான் இறங்கி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சக பயணிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதில்லை. அவரவரே பார்த்துக்கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்துவிடுகிறார்கள். இப்போது நான் இங்கிலாந்தில் படித்துக்கொண்டே வேலை பார்க்கிறேன். நள்ளிரவிலும் தனியாக அங்குள்ள அரசு பஸ்களில் பயணிக்கிறேன். இதுவரை எனக்கு அங்கு எந்த கசப்பான அனுபவமும் ஏற்பட்டதில்லை.

அனார்கலி (நடிகை): நான் படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை டெல்லிக்கு ரெயிலில் சென்றுகொண்டிருந்தேன். எங்கள் பெட்டியில் இருந்த நபர் ஒருவர் என்னை பார்த்தபடி மிகவும் அருவறுக்கத்தக்க விதத்தில் அசிங்கமாக நடந்துகொண்டார். நான் உடனே என்னோடு இருந்தவர்களிடம் அதனை சொன்னேன். அவனோ தான் உடல்நலமில்லாதவன் என்றும் தனது உறுப்புப்பகுதியில் ஆபரேஷன் செய்திருப்பதால் அதை பார்த்தேன் என்றெல்லாம் ஏதேதோ சொன்னான். ஆனாலும் நாங்கள் அவனை கடுமையாக எச்சரித்து அனுப்பினோம்.

லெட்டிஷா (பாடகி): எனக்கு அப்போது 10,12 வயது. குடும்பத்தினரோடு சேர்ந்து விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். உணவருந்த மேல் மாடிக்கு சென்றபோது ஒரு கை என் பின் பகுதியை தொட்டது. நான் உடனே திரும்பியதும், இரண்டு பேர் அங்கிருந்து ஓடி மறைவதை பார்த்தேன்.

அந்த செயல் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்தது. ஓடிப்போய் என் அம்மாவின் கையை பற்றிக்கொண்டேன். அப்போது என் வாயில் இருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. பெருஞ்சுமை என் உடல் மீது ஏறியது போல் இருந்தது. சில நாட்கள் கடந்த பின்புதான் பெற்றோரிடமே அந்த சம்பவத்தை என்னால் சொல்ல முடிந்தது.

கடந்த ஆண்டும் இதுபோல் இன்னொரு சம்பவம் நடந்தது. அப்போது அந்த இடத்தில் இருந்து அகன்று, தனியாக போய் நின்றுகொண்டேன். ஏன் அதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை என்ற கேள்வியை எனக்குள்ளே நான் கேட்டபோது, `அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி பதிலடி கொடுப்பது என்பதை நமக்கு யாரும் சொல்லித்தரவில்லை' என்பதுதான் பதிலாய் தெரிந்தது. அது போன்ற பாலியல் சீண்டல்களை கண்டுங்காணாமலும் சென்றுவிடவேண்டும் என்றுதான் சமூகம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. ஆவேசம் கொள்ளவும், தேவைப்படும் சூழ்நிலைகளில் கோபம் கொள்ளவும் நமக்கு கற்றுத்தரவில்லை.

ரஹ்னா மன்சூர் ஷெபின் (ஆங்கிலப் பாட ஆசிரியை): கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நான் பயணிக்கும் பஸ்களில் பெரும்பாலும் கூட்டம் அதிகமிருக்கும். ஒரு பஸ்சின் நடத்துனர் என்னை வருடினார். அவர் திட்டமிட்டே அவ்வாறு நடந்துகொண்டார் என்பது எனக்கு புரிந்தது. கூட்டத்தை பயன்படுத்தி தவறாக நடந்துகொள்ள முயற்சிப்பதை அறிந்ததும் முதலில் பதற்றத்திற்கு உள்ளாகியதால் எதிர்ப்பு தெரிவிக்க இயலவில்லை. நான் அமைதியாக இருந்ததும் அவர் மீண்டும் வருடினார். நான் உடனே பலமாக தாக்கினேன். அதை பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து பயணி `இது அவசியமான உதைதான்.. நல்ல காரியம் செய்தாய்' என்றார்.

அன்று எனக்கு புது தைரியம் கிடைத்தது போலிருந்தது. அதை மற்ற பெண்களுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறேன். பதிலடி கொடுப்பதற்கான சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூகத்திற்கு நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். முன்பு தனக்கு நடந்த பாலியல் சீண்டலை ஒரு பெண் தாமதமாக சொல்ல முன்வரும்போது அவளை பார்வையாலோ, வார்த்தைகளாலோ காயப்படுத்தக்கூடாது. சமூகம் அவளுக்கு பக்கபலமாக நிற்கவேண்டும்.
Tags:    

Similar News