பெண்கள் உலகம்
வீட்டை அழகாக்க ‘ஷோகேஸ்’களில் என்ன வைக்கலாம்?

வீட்டை அழகாக்க ‘ஷோகேஸ்’களில் என்ன வைக்கலாம்?

Published On 2022-02-23 12:28 IST   |   Update On 2022-02-23 12:28:00 IST
ஷோகேஸில் உங்கள் புகழைப்பரப்பும் விருதுகள், பதக்கங்கள் போன்றவற்றை வைப்பதன் மூலம், அதனை பார்ப்பவர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் ஏற்படும்.
தற்போது கட்டப்படும் பெரும்பாலான வீடுகளில், ஹால் பகுதிகளில் ‘ஷோகேஸ்’ உள்ளது. இவற்றில் பல வகைகள் உள்ளன. தேக்கு மரத்தினால் செய்யப்படும் ‘ஷோகேஸ்’ பார்ப்பதற்கு அழகாகவும், கலைநயத்தோடும் காணப்படும். மேலும் கான்கிரீட், கண்ணாடி, பி.வி.சி மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு வெளிப்புறம் மரம் அல்லது அலுமினிய பிரேம்கள் போடப்பட்ட ‘ஷோகேஸ்’கள் இன்று பயன்பாட்டில் உள்ளன.

ஷோகேஸில் பொருட்கள் வைக்க மற்றும் பராமரிக்க சில ஆலோசனைகள்:

ஷோகேஸ்களில் நாம் வைக்கும் பொருளின் மூலம் வீட்டை மேலும் அழகூட்ட முடியும். சரியான இடத்தை தேர்வு செய்து, சரியான பொருட்களை அதில் வைப்பதன் மூலம், குறைந்த பட்ஜெட்டில் வீட்டின் அழகை மேம்படுத்தலாம்.

சுவற்றின் நிறத்திற்கு ஏற்ப ஷோகேஸ்சின் வண்ணமும் சரியான விதத்தில்  அமைய வேண்டும். ஷோகேஸில் வைக்கும் பொருட்களில் பூச்சிகள் கூடுகள் கட்டாமல் இருப்பதற்காக, ‘பாச்சா உருண்டையை’ அதனுள் போட்டு வைப்பது நல்லது.

சிறந்த பூச்சிக்கொல்லியை தேர்வு செய்து பயன்படுத்துவதன் மூலம்  சிலந்தி, பல்லி போன்றவற்றினால் ஏற்படக்கூடிய  பாதிப்புகளில் இருந்து பொருட்களை எளிதாகப் பாதுகாக்கலாம்.

ஷோகேஸில் உங்கள் புகழைப்பரப்பும் விருதுகள், பதக்கங்கள் போன்றவற்றை வைப்பதன் மூலம், அதனை பார்ப்பவர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் ஏற்படும்.

அதுபோலவே குடும்ப படங்களை குறிப்பாக ஷோகேஸ்சின் மேல் பகுதியில் தெளிவாக தெரியும்படி வைக்க வேண்டும்.

அரிதாக எவருக்கும் கிடைக்காத பொருட்களை சேகரித்து வைத்திருந்தால், அந்த பொருட்களைக் கூட ஷோகேஸில் வைத்து அலங்கரிக்கலாம்.

தையல் கலை மற்றும் பேஷன் டிசைனிங்கில் ஆர்வம் உள்ளவர்கள், ஷோகேஸில் வைக்கக்கூடிய பொம்மைகளுக்கு சிறுசிறு துணிகளைத் தைத்து அணிவிக்கலாம். இதன் மூலம் உங்களது கலைநயம் வெளிப்படுவதோடு, ஷோகேஸிற்கு கூடுதல் அழகைத் தரும்.

பூ ஜாடிகளை ஷோகேஸ்சின் இரண்டு ஓரங்களிலும் வைக்கலாம். அதில் இருக்கும் பூக்களின் நிறம் ஷோகேஸில் பூசியிருக்கும் நிறத்தைப்போல் இல்லாமல், வேறுபட்ட நிறத்தினைக் கொண்டு இருந்தால் கூடுதல் அழகைத் தரும்.

வாரம் ஒருமுறை கண்ணாடி துடைக்கும் ‘பிரஷ்’ மூலம் ஷோகேஸ் வெளிப்பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை உள்ளே வைத்துள்ள பொருட்களை சுத்தமாக துடைக்க வேண்டும்.

Similar News