பெண்கள் உலகம்
பாலியல் வன்கொடுமை

பெண்களின் எண்ணிக்கை உயர்வும்.. குறையாத பாலியல் வன்கொடுமையும்..

Published On 2022-01-10 03:29 GMT   |   Update On 2022-01-10 03:29 GMT
தெருக்கள், வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு பல ஆண்டுகளாக கவலையளிக்கும் பிரச்சினையாகவே உள்ளது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
16 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்படிருப்பதாக அந்த புள்ளி விவர தகவல் சுட்டிக் காட்டுகிறது. நாடு முழுவதும் தினசரி 77 முதல் 88 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின்றன.

இந்த புள்ளி விவரங்கள் பெண்களின் பாதுகாப்பு பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள். சமீபத்தில் வெளியான ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின்படி பாலின விகிதத்தில் முதன்முறையாக பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதாவது ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் உள்ளனர். பாலின விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இப்படி மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. 2019-ம் ஆண்டில் ஒரே நாளில் மட்டும் 88 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 32,033 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

தெருக்கள், வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு பல ஆண்டுகளாக கவலையளிக்கும் பிரச்சினையாகவே உள்ளது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

2013-ம் ஆண்டு, 22 வயதான பெண் பத்திரிக்கையாளர் ஐந்து பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். மும்பையில் பயன்பாட்டில் இல்லாத மில் வளாகத்தில் பெண் ஒருவர் ஆண்கள் சிலரால் கற்பழிக்கப்பட்டார். இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஆனால் பின்னர் அதை ரத்து செய்தது.

2020-ம் ஆண்டில், ஹத்ராஸில் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை இறுதிச் சடங்கில் பங்கேற்க விடாமல் உடலை போலீசார் எரித்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு அவர்கள்தான் காரணம் என்ற ரீதியில் பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது கவலை அளிக்கும் விஷயம் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

நம் நாட்டில் தண்டனை விகிதம் 30 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இது அநீதி இழைக்கப்பட்ட பெண் களுக்கு நீதி வழங்கும் விஷயத்தில் சட்டம், காவல் துறையின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. ஒரு பெண் துன்புறுத்தப்பட்டாலோ அல்லது பலாத்காரம் செய்யப்பட்டாலோ புகார் கொடுப்பதற்கு தயங்கும் நிலையும் நீடிக்கிறது.

பாதிக்கப்பட்டவரின் பெயர் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று அறிவித்தாலும் குடும்ப கவுரவத்தை கருத்தில் கொண்டு புகார் கொடுக்க யோசிப்பதும் குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும். அரசும், சமூகமும் இதனை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்தை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்.
Tags:    

Similar News