பெண்கள் உலகம்
ஆண்களுடனான உறவில் பெண்களின் ‘புதிய பார்வை’

ஆண்களுடனான உறவில் பெண்களின் ‘புதிய பார்வை’

Published On 2022-01-07 07:25 GMT   |   Update On 2022-01-07 07:25 GMT
ஆண்-பெண் உறவு என்பது காலத்தின் கட்டாயம். கல்வி நிலையங்கள், வேலை பார்க்கும் இடங்கள் மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் அது தொடரவேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆண்- பெண் உறவுகளில் சமீபகாலங்களில் பெரும் மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. அதை சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான மாற்றமாக எடுத்துக்கொள்வதா அல்லது பின்னடைவாக எடுத்துக்கொள்வதா என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

ஆண்-பெண் உறவு என்பது காலத்தின் கட்டாயம். கல்வி நிலையங்கள், வேலை பார்க்கும் இடங்கள் மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் அது தொடரவேண்டிய அவசியம் இருக்கிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடங்களில் நட்பு பாராட்ட வேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நட்பு, பெண்ணுக்கு திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு மாதிரியாகவும், திருமணமான பின்பு இன்னொரு மாதிரியாகவும் பார்க்கப்படுகிறது. “திருமணமானாலும், திருமணமாகாவிட்டாலும் நட்பு எப்போதும் நட்புதான். அதில் ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால் மற்றவர்களின் பார்வையில்தான் அது வித்தியாசமாகப்படுகிறது” என்பது திருமணமான பெண்களின் கருத்தாக இருக்கிறது.

“பழைய காலத்திலும் ஒன்றாக வேலை செய்யும் ஆண்- பெண்களிடம் அந்த நட்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் அதைப் பற்றி வெளிப்படையாக பேசிக்கொள்ளமாட்டார்கள். இப்போது வெளிப்படையாக பேசும் சுதந்திரம் பெண்களுக்கு இருக்கிறது. நானும், என்னோடு வேலை பார்க்கும் ஆசிரியரும் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஐஸ் கிரீம் பார்லருக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வருகிறோம். யாரும் அதை பிரச்சினைக்குரியதாக எடுத்துக்கொள்வதில்லை. ஒருசிலர் அதை இன்னொரு மாதிரியாகத்தான் பேசுகிறார்கள். நாங்கள் அதை ஒரு பிரச்சினையாக கருதுவதில்லை” என்கிறார் பள்ளி ஆசிரியை ஷீலா. அவருக்கு 40 வயது.

கால் சென்டரில் வேலைபார்க்கும் 30 வயது பெண் ரஞ்சனி, “வேலைக்காக வெளியே செல்லும் பெண்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுடன் நட்பு இருந்தே ஆகவேண்டும். வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று விட்டாலே ஆண்கள் மத்தியில்தான் இருந்தாகவேண்டும். பெரும்பகுதி நேரத்தை அங்குதான் செலவிடுகிறோம்.

சுக துக்கம் அனைத்தையும் அங்கே அவர்களோடு பங்கிட்டுத்தான் ஆகவேண்டியதிருக்கிறது. நானும், என் கணவரும் மனதொத்த மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால் எனக்கு ஒரு நண்பன் உண்டு. எனக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அவன்தான் உடனே நினைவுக்கு வருவான். அவனோடு பேசினால்தான் எனக்கு நிம்மதி வரும். அந்த நட்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது” என்று சொல்கிறார். அந்த நண்பரை பற்றி தன் கணவருக்கு தெரியும் என்றும், தங்களுக்குள் தவறான உறவு ஒருபோதும் இருந்ததில்லை என்றும் ரஞ்சனி சொல்கிறார்.

புனேயை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஆர்த்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவரது ஆண் நண்பர்கள் வட்டம் மிக பெரியது. “எனக்கு இணையதள நண்பர்கள் எண்ணிக்கை அதிகம். அதில் நெருக்கமான நண்பர்கள் சிலர் உண்டு. ஆனால் உண்மையான நண்பர் என்ற கணக்கில் நான் ஒரே ஒருவரைத்தான் வைத்திருக்கிறேன். அவன் என் கல்லூரித் தோழன். அவனும் இரண்டு குழந்தைகளின் தந்தை. அவனை நான் என் கணவருக்கும் அறிமுகம் செய்துவைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சந்திப்போம். நிறைய நிறைய பேசுவோம். அதன் மூலம் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைக்கும்” என்கிறார்.

மும்பையை சேர்ந்த பேஷன் டிசைனர் நந்திதா, “ஆண்- நட்பு பற்றி பேச என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஆண்களை நான் ஒரு தனி பாலினம் போல் கருதவில்லை. அவர்களோடு பேச, பயணிக்க, வேலை செய்ய, பொழுதைச் செலவிட எனக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை. எனக்குத் தெரிந்து சில ஆண்கள்தான் என்னிடம் பேசப்பழக தயங்குகிறார்கள். திருமணம் என்பது ஆண் நட்பிற்கு தடையில்லை. நல்ல ஆண் நண்பர்கள் கிடைத்தால், அவர்கள் ஆலோசனைப்படி கல்யாண வாழ்க்கையையும் சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம்” என்கிறார்.

கொச்சியை சேர்ந்த ஓவியர் இந்திரா ஆண்- பெண் நட்பை ஆழமாகவே அலசு கிறார். “ஆண்- பெண் நட்பு பற்றி நான் மற்றவர்களைப்போல் மேலோட்டமாக மட்டும் பேசவிரும்புவதில்லை. ஒரு பெண் பத்து நண்பர் களிடம் பழகுகிறாள் என்றால், யாராவது ஒருவரிடம் செக்ஸ் ரீதியான ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும். ஒருவேளை அதுபோல் எதிர் தரப்பில் அந்த ஆணுக்கும் ஏற்படும். அப்போதுதான் இருவருக்குள்ளும் சொல்லக்கூடிய, சொல்லமுடியாத சில மாற்றங்கள் ஏற்படும். காதல்வசப்படுவார்கள்.

இது இருவருக்கும் திருமணமாகவில்லை என்றால் சாதாரணமானதுதான். யாராவது ஒருவருக்கு திருமணமாகி இருந்தாலோ அசாதாரணமாகிவிடுகிறது. பெண்கள், தோழிகளிடம் என்னவேண்டும் என்றாலும் பேசலாம்- ஆண் நண்பர்களிடம் அவ்வாறெல்லாம் பேச முடியாது என்கிறார்கள். நான் என் ஆண் நண்பர்களிடம் எதை வேண்டுமானாலும் பேசுவேன். எந்த தயக்கமும் எனக்கு இருப்பதில்லை. அதுபோல்தான் அவர்கள் எதை வேண்டுமானாலும் என்னிடம் பேசுவார்கள். ஆண்- பெண் உறவின் வெற்றி என்பது மிக பக்குவமான விஷயம். அதை பதற்றத்தோடு அணுகக்கூடாது. அதில் பாலியல் சிக் கலையும் ஏற்படுத்தக்கூடாது” என்கிறார், அவர்.

டெல்லியை சேர்ந்த 37 வயது ஷாலினி இன்னொரு கோணத்தில் ஆண் நட்பை பற்றி பேசுகிறார்..

“நான் 10 வயதில் இருந்து ஆண் நண்பர்களோடு பழகுகிறேன். அது 20 வயது வரை குழப்பமாகத்தான் இருந்தது. அதனால் சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. தொந்தரவுகளையும் அனுபவித்தேன். ஆனால் எனது திரு மணத்திற்கு பிறகுதான் நட்பில் எனக்கு புதிய எல்லை பிறந்தது. நட்பின் எல்லா பரிமாணங் களையும் நான் உணர்ந்திருக்கிறேன். உணர்ச்சிவசப்படாமல் பக்குவமாக அந்த நண்பர்களோடு நான் பழகிக்கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு பின்புதான் ஆண்களுடனான எனது நட்பு ஆழமாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. ஆண் நண்பர்களின் அருமை திரு மணத்திற்கு பிறகுதான் தெரிகிறது..” என் கிறார்.

அதிக ஆண் நண்பர்கள் இருந்தால் எத்தகைய பிரச்சினை ஏற்படும் என்பது பற்றி சென்னையைச் சேர்ந்த ஷில்பா சொல்கிறார்:

“நிறைய ஆண் நண்பர்களை வைத்துக்கொள்ளக்கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களை வைத்துக்கொண்டால், ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் நட்பை பராமரிக்கவேண்டியதிருக்கிறது. காரணம், ஒருவரிடம் பேசினால் இன்னொருவருக்கு பிடிப்பதில்லை. ‘என்னை ஏன் மறந்தாய்?’ என்று கேட்டு டென்ஷன் ஆக்கிவிடுவார். எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஆளை விடுங்கப்பா என்று ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு குட்பை சொல்லிவிட்டேன். இன்னொரு ஆண் நண்பர், எனக்கு திருமணமானதும், எதற்கெடுத்தாலும் ஆலோசனை சொல்லத் தொடங்கினார்.

ஒருகட்டத்தில் அது எனக்கும்- என் கணவருக்கும் இடையேயான அந்தரங்கத்தில் நுழைவதுபோல் ஆனது. அதன் பிறகு படிப்படியாக அவரது நட்பில் இருந்து விடுதலைபெற்றேன். பெண்கள் திருமணத்திற்கு தயாராகும்போதே ஆண் நண்பர்களை படிப்படியாக குறைத்துவிடவேண்டும். பக்குவமானவராக, திறந்தமனதோடு இருக்கும் ஒரு நண்பரை மட்டும் காலம் முழுக்க பராமரிக்கவேண்டும். அவர் நமது குடும்ப உறவுக்குள் மூக்கை நுழைக்காதவராகவும் இருக்கவேண்டும்” என்கிறார்.

எல்லாம் சரிதான். ஆனால் திருமணத்திற்கு பிந்தைய ஆண்- பெண் உறவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன!
Tags:    

Similar News