பெண்கள் உலகம்
பட்ஜெட்டுக்கு ஏற்ற பண்டிகை கால பரிசுப் பொருட்கள்

பட்ஜெட்டுக்கு ஏற்ற பண்டிகை கால பரிசுப் பொருட்கள்

Published On 2021-12-28 02:33 GMT   |   Update On 2021-12-28 09:20 GMT
பெரியவர்களுக்கு, உடல் மற்றும் மன நலனில் அக்கறை செலுத்த உதவும் வகையில் பொருட்களை பரிசாக அளித்தால் உபயோகமானதாக இருக்கும்.
பரிசுகளைப் பகிர்ந்துகொள்வது, கொடுப்பவருக்கும்-பெறுபவருக்கும் இனிமையான நினைவுகளை ஏற்படுத்தும். பிறந்தநாள், திருமண நாள், காதல் நினைவு, பண்டிகை காலம் என பரிசுகள் கொடுப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அதிலும், பண்டிகை காலங்களில் பகிரப்படும் பரிசுகளால் உறவுகளும், நட்புகளும் மேலும் உறுதியாகும்.

இத்தகைய பரிசுகளைத் தேர்ந்தெடுத்து வாங்கும்போது, அவை நமது பொருளாதாரத்துக்கு ஏற்றதாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் முக்கியமானது. அதற்கான ஆலோசனைகள் இங்கே...

தீர்மானித்தல்:

யாருக்கு பரிசு கொடுக்கப் போகிறோம்? என்ன காரணத்துக்காக கொடுக்கிறோம் என்பதை முதலில் தீர்மானியுங்கள். அதற்கு ஏற்றதுபோல உங்கள் பட்ஜெட்டை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். நீங்கள் மட்டும் தனியாக இதற்கு செலவிடுகிறீர்களா? அல்லது நண்பர்கள், உறவினர்களும் இதில் கலந்து கொள்கிறார்களா? என்பதை கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப திட்டமிட வேண்டும். இதன் மூலம் பண விரயத்தைத் தடுக்கலாம்.

பணம் ஒதுக்குதல்:

பண்டிகை காலத்தில் பரிசுகள், புது பொருட்கள், உடைகள் போன்றவை வாங்குவதற்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒதுக்கி வைப்பது நல்லது. இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் சிறு தொகையை வங்கிக் கணக்கில் சேமித்து வரலாம். இதன் மூலம், கடைசி நேரத்தில் பணப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

நிர்ணயித்தல்:

யாருக்கு? எதற்காக கொடுக்க போகிறோம்? என்பதை மனதில் கொண்டு, பரிசுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது பரிசை பெறுபவருக்கு உபயோகமானதாகவும், நல்ல நினைவுகளை கொடுக்கும்படியாகவும் இருக்கும்.

பரிசுகளை வாங்குவது போலவே, அதை அழகான முறையில் உரியவரிடம் கொடுப்பதும் முக்கியமானது.

தேர்ந்தெடுத்தல்:

யாருக்கு பரிசு கொடுக்கப் போகிறீர்களோ, அவர்களின் ரசனை குறித்து தெரிந்து வைத்திருப்பது நல்லது. எந்த வயதில் இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ன தேவை? போன்ற விஷயங்களையும் கவனியுங்கள். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்விக்குப் பயன்படும் வகையிலான பொருட்களைப் பரிசாக வழங்கலாம்.

பெரியவர்களுக்கு, உடல் மற்றும் மன நலனில் அக்கறை செலுத்த உதவும் வகையில் பொருட்களை பரிசாக அளித்தால் உபயோகமானதாக இருக்கும்.

வாங்குதல்:

என்ன பரிசுப் பொருள் வாங்குவது என்று தீர்மானித்த பின்பு, அதில் சிறந்தது எது என பாருங்கள். ஏனெனில் பரிசுகள் மகிழ்ச்சிக்கும், நினைவுக்குமானது. அத்தகைய பரிசுகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுப்பதற்காக கவனம் செலுத்துவதில் தவறில்லை.

பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், ஆன்லைன் தளங்கள் போன்றவற்றின் மூலம் தரமான பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம்.
Tags:    

Similar News