லைஃப்ஸ்டைல்
ஆஸ்டல் வாழ்க்கையில் பெண்கள் மறக்கக்கூடாதவை

ஆஸ்டல் வாழ்க்கையில் பெண்கள் மறக்கக்கூடாதவை

Published On 2021-10-28 02:39 GMT   |   Update On 2021-10-28 02:39 GMT
பொறுப்பாக சம்பளத்தை வாங்கி வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்பது போன்ற எத்தனையோ கடமைகளும், பொறுப்புகளும் ஆஸ்டலில் தங்கி வேலைபார்க்கும் பெண்களுக்கு இருக்கிறது.
பெண்கள் படிக்கும் காலத்திலும், அலுவலகங்களில் வேலைபார்க்கும் காலகட்டத்திலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்பத்தை விட்டு பிரிந்து, ஆஸ்டல்களில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது அங்கே அவர்களோடு தங்கும் தோழிகளைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகிறது.

கல்லூரி தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும், அலுவலக தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும் வெவ்வேறு மாதிரியானவை. கல்லூரி காலத்தில் பெற்றோரின் வருமானத்தில் ஆஸ்டல் வாழ்க்கை அமையும். அதில் விளையாட்டுத்தனமும், கலாட்டாவும் அமைந்திருக்கும். கல்வி கற்பது மட்டுமே பொறுப்பான ஒரு செயலாக இருப்பதால் அந்த காலகட்டம் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே இருக்கும். அதுமட்டுமின்றி சக மாணவிகளும் ஒத்த வயதுடையவர்கள் என்பதால் சிந்தனையும், செயலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால் பெருமளவு பிரச்சினை ஏற்படாமலே அவர்களது கல்லூரி ஆஸ்டல் வாழ்க்கை முடிந்துவிடும்.

ஆஸ்டலில் தங்கியிருந்து வேலைபார்க்கச் செல்வது அப்படியானதல்ல. பல்வேறு சூழலில் இருந்து வரும் பல பருவத்தினர் அங்கே ஒன்றிணைவார்கள். அங்கு தங்கியிருக்கும் எல்லா பெண்களுக்குமே பல்வேறு குடும்ப பொறுப்புகளும், கடமைகளும் இருக்கும். ‘பாதுகாப்பாக தங்கியிருக்கவேண்டும். கவனமாக வேலைக்குச் சென்று திரும்பவேண்டும். சரியான உணவுகளை சாப்பிட்டு உடல் நலனை பராமரிக்க வேண்டும்.

பொறுப்பாக சம்பளத்தை வாங்கி வீட்டிற்கு அனுப்பவேண்டும்’ என்பது போன்ற எத்தனையோ கடமைகளும், பொறுப்புகளும் ஆஸ்டலில் தங்கி வேலைபார்க்கும் பெண்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் அவர்களோடு அறையில் உடன் தங்கியிருக்கும் தோழிகள், தொந்தரவு தர ஆரம்பித்துவிட்டால், அது கவலைக்குரிய விஷயமாகிவிடும்.

கூடுமானவரை விலை உயர்ந்த பொருட்களை உங்களோடு வைத்துக் கொள்ளாதீர்கள். தொலைந்தால் யாரையும் கேட்கமுடியாது. கேட்டால் சண்டை வருமே தவிர பொருள் வராது.

உடன் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு தக்கபடி நடந்துகொள்ளுங்கள்.

உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை உங்கள் அறை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டும் சொல்லுங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் மாத்திரை மருந்துகளை மற்றவர் களுக்கு கொடுக்காதீர்கள். அது சில நேரங்களில் நீங்களே எதிர்பாராத விதத்தில் கொலைக்கு சமமாகிவிடும்.

கூடுமானவரை மற்றவர்களை வேலை வாங்காதீர்கள். உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள்.

எல்லோருக்குமாக சேர்த்து மற்றவர்கள் வேலை செய்யும்போது, கூடுமானவரை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

மனதில் எதையாவது வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் சிடுசிடுப்பாக நடந்துகொள்ளாதீர்கள். முடிந்த அளவு புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் வலம் வாருங்கள்.

அவசர தேவைக்கு பணம் கொடுத்து உதவுங்கள். ஆனால் ஞாபகமாக திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி குறைகூறி உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

Tags:    

Similar News