லைஃப்ஸ்டைல்
மாமியார்- மருமகள் உறவை சிக்கலாக்கும் விஷயங்கள்

மாமியார்- மருமகள் உறவை சிக்கலாக்கும் விஷயங்கள்

Published On 2021-04-09 03:20 GMT   |   Update On 2021-04-09 03:20 GMT
எல்லாமே மாறிவரும் சூழலில் இந்த மாமியார் மருமகள் உறவை சுமுகமாக மாற்ற முடியாதா என்ன? வாங்க உறவுகள் மேம்பட கொஞ்சம் மாத்தியும் யோசிக்கலாம். அதற்காக இதோ சில டிப்ஸ்...
சமூகத்தில் பெண்களுக்கு பிறந்த வீடு நாற்றங்காலாய் இருந்து புகுந்த வீடு என்பது வளர்ந்து செழிக்கும் விளை நிலமாகிறது. மாமியார்- மருமகள் உறவை சிக்கலாக்கும் விஷயங்களே காலங்காலமாய் சுற்றியிருப்பவர்களாலும், சமூக ஊடகங்களாலும் கற்பிக்கப்படுகிறது. எல்லாமே மாறிவரும் சூழலில் இந்த மாமியார் மருமகள் உறவை சுமுகமாக மாற்ற முடியாதா என்ன? வாங்க உறவுகள் மேம்பட கொஞ்சம் மாத்தியும் யோசிக்கலாம். அதற்காக இதோ சில டிப்ஸ்...

வாரத்தில் ஒரு நாளாவது கணவரின் குடும்ப உறுப்பினருடன் இணைந்து அவர்களின் கல்யாண வாழ்க்கையையும் இனிமையான நிறைவுகளையும் அசைபோட வையுங்கள். அதில் இடையிடையே சில பாராட்டுகளையும் மனம் பண்படுத்தாத கிண்டல்களையும் கடந்து போன நகைக்சுவையான நிகழ்வுகளையும் தெரிவியுங்கள்.

கிடைக்கும் வாய்ப்பில் பழைமையான விஷயங்கள் பற்றி தெரிந்து கொண்டால் அதை போற்றும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள. பழமையிலிருந்து புதுமையையும் பார்க்கலாம் என நயமாக தெரியப்படுத்துங்கள்.

திருமணமானவுடன் கணவருடன் இணைந்து நேரத்தை செலவிட நினைப்பதில் தவறில்லை. ஆனால் வீட்டிலுள்ள பெரியவர்களுடன் இணைந்து அவுட்டிங் போக வேண்டும். திருமணத்திற்கு முன் தன் மகனுடன்  இணைந்து நேரத்தை செலவிட்ட பெற்றோர் தனிமையை உணரலாம். சில நேரங்களில் குடும்பத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் இருக்கும். அவ்வப்போது அவர்களுடன் இணைந்து விடுமுறை நாட்களில் நீண்ட தூர நடைப்பயிற்சி, மலைப்பிரதேசம், இயற்கை சூழல் நிறைந்த இடங்களுக்கு செல்லுங்கள்.

தொலைக்காட்சி, அலைபேசி போன்ற சாதனங்களில் பொழுதுபோக்கு அம்சங்களில் பலரும் தங்கள் நேரத்தை செலவிட்டு குடும்ப உறவுகளை இழக்கின்றனர். வாரம் ஒரு முறையாவது இவற்றுக்கு விடுமுறை கொடுத்து குடும்ப உறுப்பினர்களின் முகத்தை நேராக பார்த்து உரையாடுவதையும், சிறிய விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

உங்கள் மாமியாருக்கும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் இருவரும் இணைந்து புதிய வகுப்புகளுக்கு செல்லுங்கள். இருவரும் நண்பர்களை போல் மனம் விட்டுப்பேசுங்கள். நிறை, குறைகளை தெரிந்து கொண்டு சரி செய்யக்கற்றுக்கொள்ளுங்கள்.

காலம் காலமாக தொடர்ந்து வரும் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு மாற்றி யோசித்தால் எந்த உறவும் இனிமையாக மாறும். இதில் மாமியார்- மருமகள் உறவு மட்டும் விதிவிலக்கா, என்ன?
Tags:    

Similar News