லைஃப்ஸ்டைல்
ஒரு தலை காதல்

ஒரு தலை காதலால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

Published On 2020-12-01 08:14 GMT   |   Update On 2020-12-01 08:14 GMT
காதல் அன்பால் நிறைந்தது. அது ஒரு போதும் யாரையும் அழிக்காது. அதனால் ஒருதலை காதல் என்றாலும், காதல் தோல்வி என்றாலும் விருப்பம் இல்லாவிட்டால் விலகிச்சென்றுவிடவேண்டும்.
காதல் உன்னதமானது. ஆனால் ஒருதலை காதல் ஆபத்தானது. காதலுக்கு மதமும், ஜாதியும் விரோதியாக இருந்தாலும் அதிக ஆபத்தை தரும் எதிரி ஒருதலை காதல்தான்! மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஒருதலை காதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கத்தான் செய்கின்றன. அதனால் அதில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் நிர்கதியாகின்றன. அதை தொடர்ந்து பல்வேறுவிதமான மன உளைச்சலுக்கும், சமூக சிக்கல்களுக்கும் அந்த குடும்பங்கள் இரையாகின்றன. ஒருதலை காதலுக்காக சிலர் படிப்பையும், உயிரையும் விட்டு விடுவது உச்சகட்ட அறியாமை.

காதல் உண்மையானது என்றால், அதை நிரூபிக்க அமைதியாக காத்திருக்கவேண்டும். நியாயமான முறையில் போராட வேண்டும். அப்படியும் ஏற்காவிட்டால் விட்டுவிட வேண்டும். பதிலுக்கு கொடூரமான செயலில் ஈடுபடக்கூடாது. ஒரு பெண் தனது காதலை ஏற்றுக்கொள்ளாதபோது, அதை ஆண் அமைதியாக ஏற்றுக்கொண்டு ஒதுங்கிவிடவேண்டும். மாறாக அவள் தன்னை அலட்சியப்படுத்திவிட்டாள் என்று கருதும்போதுதான் அது வன்ம உணர்வை தூண்டுகிறது. அதுதான் தாழ்வுமனப்பான்மையை தோற்றுவித்து, வெறியை உருவாக்குகிறது.

பெண்கள் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக ஒருவர் தன்னிடம் பேசும்போதும், பழகும்போதும் அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும். நட்பாக மட்டுமே இருந்தால் ஆபத்தில்லை. வேறு மாதிரியான எண்ணங் கள் மனதில் இருப்பதாக தோன்றினால், விழிப்பாகி விடவேண்டும். ‘அதெல்லாம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று கருதாமல், ‘நீங்கள் என்னோடு நட்போடு மட்டும்தான் பழகவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்’ என்று முதலிலே கூறிவிடுங்கள்.

ஒருதலை காதல் பிரச்சினை தோன்றும்போது, பெற்றோரிடம் அதை கூறலாமா? கூடாதா? என்ற சிந்தனை பெண்களிடம் ஏற்படுகிறது. பெற்றோர்களிடம் சொல்லத்தான் வேண்டும். ஆனால் பெற்றோர் உடனே உணர்ச்சிவசப்பட்டோ, பயப்பட்டோ அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிவிடக்கூடாது. மென்மையாக கையாண்டு, மகளுக்கு பாதுகாப்பும், தைரியமும் கொடுக்கும் விதத்தில் நடந்துகொள்ளவேண்டும்.

மாணவிகள், சக மாணவர்களுடன் எப்படி பழகவேண்டும்? நட்பின் எல்லை என்ன? என்பதை எல்லாம் பாடத்திட்டம் போல் எங்கும் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்களாக அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டு விடுகிறார்கள். பெற்றோர்களும் பக்குவமாக அதை மகள்களுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. ‘எல்லாம் தெரிந்த மகளுக்கு இதுவும் தெரியும்’ என்று விட்டுவிடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் மாணவிகளுக்கு இந்த விஷயத்தில் கைகொடுப்பது ஊடகங்கள்தான். அன்றாட நாட்டு நடப்புகளை அவர்கள் பத்திரிகைகள் வாயிலாக படிக்கத் தொடங்கிவிட்டால், இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று புரிந்துகொள்வார்கள்.

பெண், ஆணிடம் பழகும்போது அவர் ஒருதலை காதலோடு தன்னை அணுகும் சூழ்நிலை உருவாகலாம் என்பதை நினைவில் வைத்திருங்கள். அதனால் தொடக்கத்தில் இருந்தே நெருங்காமலும், விலகாமலும் ‘நான் எல்லோரிடமும் இப்படித்தான் நட்போடு பழகுவேன்’ என்பதை சுட்டிக்காட்டிவிடுங்கள். தெரிந்த இளைஞராக இருந்தாலும், அறிமுகமற்ற இளைஞராக இருந்தாலும் அவர்களுக்கு ஆபத்து என்றால் உதவுங்கள். உதவிக்கு அவர்கள் நன்றி சொல்வதோடு அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுங்கள். ‘உதவியதற்கு அவர்மீது கொண்டிருக்கும் காதல் காரணம்’ என்று அவர் கருதிக் கொள்ள வாய்ப்புகொடுத்துவிடாதீர்கள்.

காதல் பற்றியோ, கல்யாணம் பற்றியோ பேசக்கூடிய சூழ்நிலை ஏற்படும்போது அவைகளை பற்றி பேசாமலே தவிர்க்கவேண்டியதில்லை. அத்தகைய பேச்சை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, ‘காதலுக்கு இப்போது இடமில்லை’ என்று தெளிவாக கூறிவிடுங்கள். பெண்கள் சுய நலத்திற்காக இளைஞர்களை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. உங்கள் குடும்ப விஷயங்களிலும், அந்தரங்க விஷயங்களிலும் அவர்களை தலையிட அனுமதிக்கும்போது, நீங்கள் அவரை காதலிப்பதாக அவர் புரிந்துகொள்ளக்கூடும். அதுவே பிற்காலத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

பரிசுகளுக்கும், பண உதவிகளுக்கும், பொழுதுபோக்குகளுக்கும் ஆண்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். ஒரு பெண் தன்னிடம் மனம் விட்டுபேசினாலே அது காதல்தான் என்று ஆண்களும் தப்பாக புரிந்துகொள்ளக்கூடாது.

காதல் அன்பால் நிறைந்தது. அது ஒரு போதும் யாரையும் அழிக்காது. அதனால் ஒருதலை காதல் என்றாலும், காதல் தோல்வி என்றாலும் விருப்பம் இல்லாவிட்டால் விலகிச்சென்றுவிடவேண்டும்.
Tags:    

Similar News