லைஃப்ஸ்டைல்
பிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர 5 ஐடியாக்கள்

பிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர 5 ஐடியாக்கள்

Published On 2020-11-23 07:23 GMT   |   Update On 2020-11-23 07:23 GMT
‘பிரேக் அப்’- ஆண் பெண் உறவுகளில் சந்திக்க கூடாதது. நீங்கள் காரணமில்லாத நிலையில் ஒரு உறவு பிரேக் ஆகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வர 5 ஐடியாக்களை பார்க்கலாம்.
‘பிரேக் அப்’- ஆண் பெண் உறவுகளில் சந்திக்க கூடாதது. அதிலிருந்து தப்பிக்க பொறுமை, புரிதல், உங்கள் நிலையை பரிவுடன் துணைக்கு புரிய வைத்தல் என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து ஒரு பிரிவு நடைபெறும்போது ‘நாம் காரணம் இல்லை’ என்கிற மனநிலையோடு வெளியேறுபவர்கள்தான் அதிக மன உளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாகிறார்கள். நீங்கள் காரணமில்லாத நிலையில் ஒரு உறவு பிரேக் ஆகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வர 5 ஐடியாக்களை பார்க்கலாம்.

பயணம்

பயணத்தை போல உங்கள் மனக்காயத்தினை ஆற்றும் மருந்து வேறொன்றுமில்லை. உடனடியாக உங்கள் வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பயணத்தை தொடங்கலாம், ஆனால் தனியாக. தொலை தூரத்தில் இருக்கும் நண்பரை தேடியோ அல்லது உங்களுக்கு பிடித்தமான, போகவேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்த இடத்திற்கோ பயணம் செய்யலாம்.

வேலை

பயணம் முடிந்து வந்தபின் உங்கள் மனதுக்கு மிகவும் பிடித்த வேலை அல்லது உங்களுக்கு சவால் விடுக்கும் வேலைகளில் ஈடுபடலாம். முழுக்க முழுக்க உங்கள் கவனம் தேவைப்படும் வேலையாக அது இருந்தால் இன்னும் நல்லது. இது போன்று பிரேக் அப்களில் இருந்து வெளியே வர பிடித்தமான வேலையை தேர்வு செய்து அதில் ஈடுபட்டவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாறியுள்ளார்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்றால் சாதாரணமான பயிற்சிகள் இல்லை. கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. ஓட்டம் என்றால் வழக்கமாக நீங்கள் ஓடுவதை விட இரண்டுமடங்கு அதிகம் ஓடுவது. ஜிம் போகும் பழக்கம் இருந்தால் பயிற்சியின் நேரத்தை கூட்டுவது என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘நீச்சல்’ நிச்சயமாக பிரேக்-அப் மீட்கும் மாமருந்து என்றே சொல்லலாம். வேலை முடித்த பிறகு செய்யும் உடற்பயிற்சிகள் உங்களுக்கும் மனதுக்கும் அதிக பலனை அளிக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பேச்சு

இதில் இரண்டு வித நன்மைகள் இருக்கிறது. பிரேக் அப் சூழல் ஏன் ஏற்பட்டது என உங்களின் மனதுக்கு நெருக்கமான நண்பருடன் பேசலாம். வழக்கமாய் அதிகம் பேசாத நபராக நீங்கள் இருக்கும் போது இந்த பேச்சு தெரபி மிகப்பெரிய பயன் கொடுக்கும். உங்கள் தரப்பு நியாயத்தை, உங்களின் மனக்காயத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்வதில்தான் மனதை வெல்லும் வழி இருக்கிறது. அதிகம் பேசும் நபராக இருந்தால் இதற்கு எதிர்பதமாக உங்கள் பேச்சுக்களை மிகவும் சுருக்கிக்கொள்ளுங்கள். ஆம்! அப்போதுதான் உங்கள் மனதுடன் நீங்கள் பேசிக்கொள்வீர்கள். இந்த இரு வேறு குணங்கள் கொண்டவர்கள் எதிர்பதமான ஒன்றை கடைப்பிடிக்கும் போது பெரிய மாற்றத்தை உணரலாம்.

நம்புங்கள்

வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை மட்டுமல்ல, அன்பின் மீதான நம்பிக்கையையும் எந்த சூழலிலும் கைவிட்டு விடாதீர்கள். ஒரு வலி மிகுந்த பிரிவிலிருந்து நீங்கள் வெளியே வந்திருப்பது தோற்றுப்போய் அல்ல, இன்னும் இன்னும் உங்களை நேசிக்கும் மனிதரை சந்திக்கத்தான் என நம்புங்கள். காரணம் ‘அன்பு’ என்பதை எந்த சூழலிலும் நீங்கள் தவிர்க்கவே முடியாது.
Tags:    

Similar News