லைஃப்ஸ்டைல்
கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்

கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்

Published On 2020-11-20 06:08 GMT   |   Update On 2020-11-20 06:08 GMT
உலகம் முழுக்க பெண்கள் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே கார் ஓட்டும் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படவும் செய்கிறார்கள்.
பெண்கள் தங்கள் சக்திக்கு மீறிய சில செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆண்கள் துணை இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்றும் சில ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பெண்கள் கார் ஓட்டுவதைகூட வினோதமாக பார்ப்பார்கள். கார் ஓட்டிச்செல்லும் பெண்கள் சிக்னலில் நின்றால் அவர்களை பார்த்து கிண்டலடிப்பது, அவர்களை தன் பக்கம் திசை திருப்பும் விதமாக தேவையின்றி ‘ஹார்ன்’ ஓசையை எழுப்புவது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவார்கள்.

இன்னொரு வகை ஆத்திரக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள், ‘இவங்களெல்லாம் கார் ஓட்ட வந்திட்டாங்க! நாடு உருப்பட்ட மாதிரிதான்’ என்று வயிற்றெரிச்சலை வெளிப்படுத்துவார்கள். அதை கேட்டு பெண்கள் ஆத்திரப்படக்கூடாது. சிரித்துக்கொண்டே கவனமாக கடந்துபோய்விடவேண்டும் அவ்வளவுதான். ஏன்என்றால் இப்படி பேசும் ஆண்கள் பெரும் பாலும் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

பெண்களால் இயக்கிச்செல்லப்படும் கார்களை ‘ஓவர் டேக்’ செய்வது, சிக்னலே போடாமல் வண்டியைத் திருப்புவது, திடீரென்று அதிர்ச்சியான சத்தத்தை எழுப்பி அவர்களை பயமுறுத்துவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். அவை அனைத்தும் சட்டவிரோதமானவை. இது பெண்களை தடுமாறச் செய்து அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

கார் ஓட்டும்போது மெல்லிய இசையைக் கேட்பது நல்லதுதான். அது கார் ஓட்டுவதை சுகமான அனுபவமாக்கும். ஆனால் அளவுக்கதிகமான சத்தத்தில் இசையை ஒலிக்கவைத்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வது போக்குவரத்தை பாதிக்கச் செய்யும் செயல்.

உலகம் முழுக்க பெண்கள் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே கார் ஓட்டும் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படவும் செய்கிறார்கள். உலகம் முழுக்க இது பற்றிய புகார்கள் இருப்பதால், சர்வதேச அளவில் இது தொடர்பான ஆய்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

ஜேக் பரூத் என்பவர் வாகனத்துறை சார்ந்த பத்திரிகையாளர். அமெரிக்காவை சேர்ந்த இவர் வாகன ஆராய்ச்சியாளராகவும் செயல்படுபவர். ஜேக் பரூத், ‘கார் ஓட்டும் பெண்களுக்கு, ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற கோணத்தில் ஆய்வு செய்து, தான் திரட்டிய தகவல்களை அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்பினார்.

ஜேக் பரூத் நடுத்தர வயது ஆண். இவர் கள ஆய்வுக்காக தன்னை பெண்போன்று மாற்றிக்கொண்டார். பெண்ணாக தோன்றினால்தான் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை உணரமுடியும் என்று அவர் கருதினார். மீசையை மழித்தார். கூந்தல் அலங்காரம் செய்துகொண் டார். பின்னால் இருந்தோ, ஓரத்தில் இருந்தோ பார்த்தால் பெண் போலவே காணப்பட்டார்.

பெண் தோற்றத்திலேயே காரை ஓட்டிக்கொண்டு சாலைகளில் வலம் வந்தார். அப்போது அவரை பெண்ணாக நினைத்துக்கொண்டு பல ஆண்கள் சேட்டை செய்திருக்கிறார்கள். இறுதியில் அவர் ஆண் என்பது தெரிந்ததும் அதிர்ந்து போய் நழுவிச்சென்றிருக்கிறார்கள்.

பெண் தோற்றத்தில் இருந்ததால் ஜேக்கிற்கு கசப்பான அனுபவங்கள் நிறைய கிடைத்திருக்கின்றன. பலர் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் ஓவர்டேக் செய்திருக்கிறார்கள். மோதுவதுபோல் காரை அருகில் ஓட்டிச்சென்று பயப்படவைத்திருக்கிறார்கள். தகாதவார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். அவரை வெறுப்பேற்றும் விதமாக சாலை விதிகளை மீறி நடந்துகொண்டிருக்கிறார்கள்.

அப்படி நடந்துகொண்ட பலரது கார் எண்களை சேகரித்து ஆதாரத்தோடு காவல் துறையில் புகார் செய்தார், ஜேக். விசாரிக்கப்பட்டு அவர்களுக்கெல்லாம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

தன்னுடைய நீண்ட கூந்தலை பறக்கவிட்டபடி நியூயார்க் நகரில் கார் ஓட்டிய அவரை பலரும் பெண் என்று நினைத்து வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்டது சுவாரசியமான சம்பவம். காரை பார்க்கிங் செய்ய உதவி செய்வதும், கார் கதவை திறந்து விடுவதும், சிக்னலில் கமெண்ட் அடிப்பதுமாக இருந்த ஆண்கள் அவர் ஆண் என்று தெரிந்ததும் அசடு வழிந்திருக்கிறார்கள். அது ஜேக்கிற்கு வேடிக்கையான அனுபவமாக இருந்திருக்கிறது. இதை எல்லாம் ருசிகரமாக விவரிக்கும் ஜேக் முத்தாய்ப்பாக சொல்லும் விஷயம் பெண்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ‘உண்மையை சொன் னால், ஆண்களைவிட பெண்களே சிறப்பாக கார் ஓட்டுகிறார்கள். அந்த பொறாமையால்தான் ஆண்கள், கார் ஓட்டும் பெண்களை கேலிசெய்கிறார்கள். அதனால் ஆண்களின் எதிர்ப்பை ஓரங்கட்டிவிட்டு பெண்கள் வழக்கம் போல் கவனமாக கார் ஓட்டிச்செல்லவேண்டியதுதான்’ என்கிறார், அவர். பெண்கள் பெருமைப்படக்கூடிய விஷயம்தான்!
Tags:    

Similar News