லைஃப்ஸ்டைல்
பறிபோகும் வேலை வாய்ப்புகள்

பறிபோகும் வேலை வாய்ப்புகள்

Published On 2020-11-10 03:57 GMT   |   Update On 2020-11-10 03:57 GMT
புதிதாக படிப்பை முடித்து வருபவர்களைவிட முந்தைய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள், பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய மாற்றங்கள் பெரும் சவாலாக உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை வேலை வாய்ப்புகளில் முதன்மை இடம்பிடித்த திறன்கள் தற்போது காணாமல் போய் இருப்பதற்கு நாமே சாட்சி. அதேபோன்று தற்போது கல்வி பயில்வோர் வேலை வாய்ப்பு சந்தையில் கால் வைக்கும்போது இன்றுள்ள பணி வாய்ப்புகளில் பெரும்பாலானவை வழக்கொழிந்து போயிருக்கும். அல்லது அப்போதைய மாற்றங்களை செரித்துக்கொண்டு புதிய பரிமாணம் எடுத்திருக்கும்.

அதிகரிக்கும் தானியங்கி மயமாதல், செயற்கை நுண்ணறிவு போன்றவை மட்டுமன்றி அதன் நீட்சியாக முளைக்கும் புதிய நுட்பங்களாலும் இந்த திறன்களின் தேவை புதுப்புது வடிவெடுக்கும். படைப்பாற்றல், இடர்பாடுகளை தீர்த்தல், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான திறன்களுடன் புலன்சார் உயர் நுண்ணுணர்வும் முதன்மையாக தேவைப்படுகிறது.

இந்த திறன்களில் செயற்கை நுண்ணறிவு, எந்திரங்களால் முடியாதவற்றை செய்துமுடிப்பதற்கே மனித தேவை அதிகம் இருக்கும். எடுத்துக்காட்டுக்கு வங்கி ஒன்றின் குமாஸ்தா வேலையை கணினி மயமான எந்திரத்தால் செய்ய வைக்கலாம். ஆனால், அதே வங்கியின் மேலாளர் இருக்கையை எந்திரங்களால் இடம்பெயர்க்கவே முடியாது. ஒரு மேலாளரின் அன்றாடப் பணிகளை எளிதில் அனுமானிக்க முடியாததே அதற்கு காரணம். இதேபோல அலுவலகங்களின் பல்வேறு உதவியாளர்கள் பணியிடங்கள் காணாமல் போகும். ஆனால், நிர்வாகத்தை வழிநடத்தும் பணியிடங்கள் நிலையாக நீடிக்கும்.

உலக வங்கி அறிக்கை ஒன்றின்படி ஆட்டோமேஷன் வருகையால் பறிபோகும் இந்திய வேலை வாய்ப்புகள் 69 சதவீதமாக அதிகரிக்க உள்ளன. வாகன உற்பத்தி, மருந்து தயாரிப்பு, மென்பொருள் துறை ஆகியவை இந்த வரிசையில் முன்னிற்கின்றன. எனவே தொழில்துறை நிறுவனங்கள் தங்களது அடுத்தகட்ட ஆள் எடுப்புக்கு, ஆட்டோமேஷனால் நிரப்ப இயலாத தனித்திறன்களுக்கு முக்கியத்துவம் தர உள்ளன.

இந்த திறன்கள் புதியவர்களுக்கு மட்டுமல்ல. தற்போது பணியில் ஒட்டியிருப்பவர்களின் எதிர்காலத்தையும், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு உடன்படுவதை ஒட்டி நிறுவனங்கள் தீர்மானிக்க உள்ளன. மாறும் தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ற திறன் மேம்பாடு என்பது பணியாளர்களுக்கு தவிர்க்க முடியாதது. புதிதாக படிப்பை முடித்து வருபவர்களைவிட முந்தைய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள், பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த புதிய மாற்றங்கள் பெரும் சவாலாக உள்ளன. தங்களை தற்காத்துக்கொள்ள இவர்கள் திறன் மேம்பாடு மேற்கொள்வது அவசியமாகிறது. இதற்கு முதல்படியாக இருக்கும் திறன்களை பட்டை தீட்ட வேண்டும்.

ஒரு பணியாளர், வேலை தேடுபவர் புதிய மாற்றங்களுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்வதை, முந்தைய திறன்களை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ள முடியும். அதற்கு பழைய திறன்களையும், அதையொட்டிய அனுபவத்தையும் சேர்த்து தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் கூடுதல் திறன்களை மேம்படுத்திக்கொள்வது நல்லது. புதிய திறன்களை கற்றுக்கொள்வது என்றவுடன் நேற்று அறிமுகமான ஒரு தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள முயல்வதைவிட, அடிப்படை திறன்களின் நீட்சியாக புதியதை விரிவுபடுத்திக்கொள்ள முயலலாம். அதைத் தொடர்ந்து புதிய நுட்பங்களை பரிசீலிக்கலாம்.
Tags:    

Similar News