லைஃப்ஸ்டைல்
மாறி வரும் வரதட்சணை சம்பிரதாயம்…

மாறி வரும் வரதட்சணை சம்பிரதாயம்…

Published On 2020-10-15 06:21 GMT   |   Update On 2020-10-15 06:21 GMT
இளைய தலைமுறையினரை பொருத்தமட்டில் பெண்கள் அழகாக இருக்க வேண்டும். நன்றாக சம்பாத்திக்க வேண்டும். தன்னுடன் நல்ல நட்பு வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
“விண்ணை நோக்கி எகிறிக் கொண்டு போகும் தங்கத்தின் விலையை பார்த்தால் என் பெண் மகளை நான் எப்படி திருமணம் செய்து கொடுக்கப் போகிறோனோ தெரிய வில்லை. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”, என்று நினைக்கும் பெற்றோர்களே, கவலைப்படாதீர்கள். இதேபோல் பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வது? என்று கலங்கும் புதுமணத் தம்பதிகளும் கவலை கொள்ளாதீங்க…!

உங்களுக்குத் தெரியுமா? நமது தாத்தா, பாட்டி காலத்தில் பெண்களுக்கு சீதனம் கொடுத்துதான் மாப்பிள்ளை வீட்டார் திருமணங்களை நடத்தினர். காலப்போக்கில் எப்படியோ மணப்பெண் வீட்டார், மாப்பிள்ளைகளுக்கு நகை, நட்டு, ரொக்கம் தரும் சூழ்நிலை உருவாகி விட்டது. இப்போது காலம் மெது,மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் காவல்துறை குற்றப் பதிவேடுகளில் வரதட்சணைக் கொடுமைகள் வெகுவாக குறைந்து விட்டன. சற்றே சமூகத்தை உற்றுப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். நடுத்தர வர்க்கத்தினரை பொறுத்தவரையில் முன்பு போல் மாப்பிள்ளை வீட்டார் அதிக அளவு வரதட்சணைகளை எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் அது.

பெரும்பாலான திருமணங்கள் “போட நினைப்பதை போடுங்கள்’” என்ற ஒரு வரிக் கோரிக்கையிலேயே நடந்து முடிகின்றன. இதற்கு காரணங்கள் இருக்கிறது. பெண்கள் முன்பைப் போல் இல்லை. அவர்களும் ஆண்களுக்கு நிகராக பி.ஈ., எம்.பி.ஏ.,எம்.பி.பி.எஸ் என உயர் படிப்பு படிக்க ஆரம்பிக்க விட்டார்கள். அவர்களும் வேலைக்கு போகிறார்கள். கை நிறைய சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஆண்களை பொறுத்தமட்டில் இன்றைய இளைய தலை முறையினர் அதிக வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை. இன்னும் இது பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள் பழைய காலத்து பெற்றோர்கள்தான். இளைய தலை முறையினரை பொருத்தமட்டில் பெண்கள் அழகாக இருக்க வேண்டும். நன்றாக சம்பாத்திக்க வேண்டும். தன்னுடன் நல்ல நட்பு வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்றைய இளைய தலை முறை ஆண்களும். பெண்களும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இது தவிர தமிழகத்தை பொறுத்தவரையில் ஆண்பால், பெண்பால் பிறப்பு விகிதாச்சார மாற்றமும் ஒரு காரணம் ஆகும். கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்..

இத்தகைய ஆண்- பெண் பிறப்பு விகித வேறுபாடு தவிர இன்றைய காலத்துப் பெண்கள் துணிச்சலாகப் புறப்பட்டு நகரத்தை நோக்கி படை எடுப்பதும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. படித்த கிராமத்து பட்டதாரிப் பெண்கள் இப்போது சென்னை, பெங்களூர். டெல்லி என முக்கிய நகரங்களுக்கு பணியாற்ற கிளம்பி இருப்பதும் ஒரு காரணமாகும். முன்பெல்லாம், திருமணங்கள் சொந்த பந்தத்திற்குள் அதிகம் நடந்தன. திருமணம் என்பது சொந்தக்காரர்களின் மிகப் பெரிய கவுரவ பிரச்னையாக இருந்தது. இதில் ஒவ்வொரு பெண்ணுக்கும் முறை மாப்பிள்ளை என்று ஒருவர் இருப்பார். அவர் எந்த நிலையில் இருந்தாலும் அவரைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும்.

இப்போது அப்படி இல்லை. மணமக்களை தேடுவது பரந்து விரிந்த விசயமாகி விட்டது. நிறையத் திருமணங்கள் இணயதள தேடுதல் வழியாக நடக்கத் தொடங்கி விட்டன. பெண் படித்து வேலைக்கு போனால் போதும் வரதட்சணை ஒரு பொருட்டல்ல என்ற நியதிக்கு மனணமகன் வீட்டார் வந்து விட்டார்கள். இதுவல்லாமல் திருமணத்தை அதிக செலவில்லாமலும், அதிக கூட்டமில்லாமலும் நடத்தும்படியாக “கொரோனா” ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது.

இதன் எதிரொலியாக வருகிற 2025 க்கு பிறகு நடை பெறும் திருமணங்களில் வரதட்சணை என்ற பேச்சுக்கு இடமே இருக்காது. மணமகன் வீட்டார்தான் மணமகளுக்கு பணம் கொடுத்து பெண்ணை பெற வேண்டியது இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
Tags:    

Similar News