லைஃப்ஸ்டைல்
குடும்பத் தலைவிகளின் சுமையை குறைத்த கொரோனா

குடும்பத் தலைவிகளின் சுமையை குறைத்த கொரோனா

Published On 2020-09-17 02:37 GMT   |   Update On 2020-09-17 02:37 GMT
விடுமுறை நாட்களில் கணவர் வீட்டு வேலைகளில் உதவி செய்வதில்லை என்ற மனக்குறை நெடுங்காலமாக குடும்பத் தலைவிகள் மத்தியில் இருக்கிறது.
விடுமுறை நாட்களில் கணவர் வீட்டு வேலைகளில் உதவி செய்வதில்லை என்ற மனக்குறை நெடுங்காலமாக குடும்பத் தலைவிகள் மத்தியில் இருக்கிறது. கொரோனா அந்த குறையை ஓரளவு போக்கவைத்துவிட்டது என்றே சொல்லலாம். பெரும்பாலான கணவர்மார்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அதன் மூலம் பொழுதை போக்கவும் செய்கிறார்கள். வாரம் ஒருமுறையாவது சில வேலைகளை குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து செய்வது வீட்டு தூய்மைக்கு வித்திடும். உறவுக்குள் இணக்கத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் வேலைகளை பிரித்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்ய வைக்க வேண்டும். அப்போதுதான் சலிப்பு ஏற்படாமல் வேலைகளை மன நிறைவுடன் செய்து முடிப்பார்கள்.

கடைசியாக குளிக்கும் நபர் குளியலறையை சுத்தம் செய்வது, செல்லப்பிராணிகளை நேசிப்பவர் அதனை குளிப்பாட்டுவது, சாப்பிட்ட தட்டுகளை அவர்களே கழுவுவது போன்ற செயல்பாடுகள் மூலம் குடும்ப தலைவியின் சுமையை குறைக்கலாம்.

மாடியின் தரைத்தளம், படிக்கட்டுக்களை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். வீட்டு உறுப்பினர்களை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய சொல்வது வேலைப்பளுவை குறைக்கும்.

வாரந்தோறும் ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு துப்புரவு பணியை தேர்ந்தெடுக்கலாம். தொலைக்காட்சி திரை, ரிமோட்டை சுத்தம் செய்வது, மின் விசிறி, பிரிட்ஜ், வாசிங் மெஷினை துடைப்பது என பணிகளை பிரித்துக்கொள்ளலாம். இவற்றை செய்துமுடிக்க அரைமணி நேஇரத்திற்கு மேல் ஆகாது. குடும்பத் தலைவியின் வேலைப்பளுவும் குறையும்.

எல்லா பொருட்களையும் வைப்பதற்கு பிரத்யேகமாக ஒரு இடத்தை தேர்வு செய்துகொள்வது நல்லது. செய்தி தாள், வீட்டு சாவி, பீரோல் சாவி, டி.வி ரிமோட், வாகன சாவிகள் போன்றவற்றை குறிப்பிட்ட இடத்தில் வைத்தால் அநாவசியமாக தேட வேண்டி இருக்காது. வீட்டில் உள்ள அனைவரும் அதன்படி செயல்படுவதை உறுதி செய்து கொள்ளவும் வேண்டும்.

ஒவ்வொரு முறையும் அறையை விட்டு வெளியேறும்போது ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தால் ஒழுங்கு படுத்திவைக்க பழகிக்கொள்ள வேண்டும். தேவையற்ற குப்பைகள் கிடந்தால் அப்புறப்படுத்திவிட வேண்டும். அது அறையை அழகாக்கும். குடும்பத் தலைவிக்கும் சிரமத்தை கொடுக்காது.

என்ன சமையல் செய்வது என்று சிந்திப்பது குடும்பத் தலைவிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தும். சுழற்சி முறையில் குடும்ப உறுப்பினர்கள் சமையல் குறிப்புகளை கொடுப்பது அவர்களை ஆர்வமுடன் சமைக்கவைக்கும்.

வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்தால் சமையல் பாத்திரங்கள் அதிகமாக பரிமாறப்படும். அவற்றை துலக்குவது குடும்பத்தலைவிகளுக்கு சிரமமாக இருக்கும். அப்போது உதவி செய்வது அவர்களின் வேலைப்பளுவை குறைக்கும்.

தூங்கி எழுந்ததும் அவரவர் படுக்கை விரிப்புகளை சுருட்டி அதற்குரிய இடத்தில் வைப்பதும் நல்ல பழக்கவழக்கமாகும். உடை வைக்கும் அலமாரியை சுத்தமாக பராமரிக்கவும் வேண்டும். துணி துவைக்காவிட்டாலும் அலமாரியில் அவரவர் உடைகளை நேர்த்தியாக மடித்துவைத்து எடுக்க பழகினாலே போதும். குடும்பத்தலைவிகள் நிம்மதி பெருமூச்சுவிடுவார்கள்.
Tags:    

Similar News