லைஃப்ஸ்டைல்
பெண்கள் விரும்பும் தங்கமான முதலீடு

பெண்கள் விரும்பும் தங்கமான முதலீடு

Published On 2020-08-24 04:48 GMT   |   Update On 2020-08-24 04:48 GMT
தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்க விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் மற்ற முதலீடுகளை விட தங்கத்தில் முதலீடு செய்வதில் வேறு சில நன்மைகளும் இருக்கிறது.
கடந்த 6 மாதத்திற்கு முன்னால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தற்போது நல்ல லாபத்தை அடைந்துள்ளனர். இப்போது பலரின் கேள்வி தொடர்ந்து தங்க விலை உயர்ந்து கொண்டிருக்குமா? என்பதுதான். வணிகர்கள் தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது லாபம் தரும் என்று சொல்லுகின்றனர்.

அதிகம்பேர் தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்க விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் மற்ற முதலீடுகளை விட தங்கத்தில் முதலீடு செய்வதில் வேறு சில நன்மைகளும் இருக்கிறது. அதாவது மற்ற முதலீடுகள் என்பது நம் பணம் முதலீடாக மட்டும் இருக்கும். சந்தைக்கு ஏற்ப நமது முதலீடு லாபம் கொடுக்கவும் அல்லது லாபம் கிடைக்காமலும் போகலாம். மற்றவகை முதலீடுகளில் நாம் முதலீடு செய்த பணம் முதலீடாக மட்டும்தான் இருக்கும். அதைப் அனுபவிக்க முடியாது. ஆனால் தங்க நகைகள் வாங்கி வைப்போம் என்றால் விலை ஏறும்போது நம்முடைய முதலீட்டின் மதிப்பு கூடுகின்றது. அதே நேரத்தில் நாம் விரும்பும் போதெல்லாம் நம்முடைய தங்க நகைகளை அணிந்து மகிழவும் செய்யலாம்.

கடந்த பல வருடங்களில் தங்க நகை பெரிய அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது இல்லை. இதுகூட தங்க நகைகளில் முதலீடு செய்பவர்களை ஊக்குவிக்கும் காரணியாக உள்ளது.

மற்ற முதலீட்டை விட தங்கத்தில் முதலீடு செய்வதை மக்கள் விரும்புவது, கையில் தங்கம் இருப்பது, பணம் கையில் இருப்பது போன்றதாகும் என்பதால். இன்னும் சொல்லப்போனால் கரன்சி நோட்டுகளை விட தங்கம் கையில் இருப்பது பலவகையில் பாதுகாப்பானது என மக்கள் நம்புகின்றனர்.

முன்பு தங்க நகை வாங்கும்போது செய்கூலி சேதாரம் என்று அதிக அளவிற்கு பணம் செலவாகும். தற்போது இவை பெரிய அளவிற்கு குறைந்துவிட்டன. ஒரு சில நுணுக்கமான வேலைப்பாடுகளை உடைய பாரம்பரிய தங்க நகைகளில் மட்டும்தான் சற்றே அதிகமான சேதாரம் மதிப்பிடப்படுகிறது. மேலும் நவீன டிசைன்களில் பலவகையான தங்க ஆபரணங்கள் நாளுக்கு நாள் மக்களை கவரும் வண்ணம் சந்தையில் அறிமுகமாகின்றன இவையும் தங்க நகை வாங்க மக்களை தூண்டுகின்றது.

மேலும் தங்க நகை கையிருப்பில் உள்ள போது நமக்கு அவசர பண தேவை ஏற்பட்டால் வங்கிகளில் தங்க நகை பெயரில் அடமானம் வைத்து கடன் பெற முடியும். அதிகமான தேவை உள்ளதென்றால் தங்க நகைகளை அன்றைய தங்கத்தின் விலையில் சுலபமாக விற்று பணம் பெற முடியும்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதுமே தங்கமான முதலீடுதான்.
Tags:    

Similar News