லைஃப்ஸ்டைல்
கீரி, பாம்பு போல முட்டி மோதிக்கொள்ளும் தம்பதிகள்

கீரி, பாம்பு போல முட்டி மோதிக்கொள்ளும் தம்பதிகள்: நாட்டாமைகளாக மாறிய மாமனார்-மாமியார்

Published On 2020-04-27 03:03 GMT   |   Update On 2020-04-27 03:03 GMT
கீரி, பாம்பு போல தம்பதிகள் சிலர் முட்டி மோதிக்கொள்கிறார்கள். அவர்களை நாட்டாமைகளாக மாறிய மாமனார்-மாமியார் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குடும்பம் என்பது ஒரு தேர் போன்றது. இந்த தேரில் ஒரு சக்கரம் கணவனாவும், மற்றொரு சக்கரம் மனைவியாகவும் இருக்கிறார்கள். கணவன்-மனைவி என்ற 2 சக்கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தால் மட்டுமே வாழ்க்கை சக்கரம் லட்சிய பாதையை அடையும். 2 சக்கரங்களும் வேறு வேறு திசை நோக்கி பயணித்தால் தேர் இருக்கும் இடத்தில் இருந்து இம்மி அளவு கூட நகர முடியாது. மாறாக கவிழும் சூழ்நிலை தான் ஏற்படும். இந்தநிலையில் நின்று கொண்டுதான் இப்போது சிலர் தவிக்கிறார்கள்.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். எந்திரமயமான வாழ்க்கை சூழலில் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு எப்போதும் அவசரம், அவசரமாக வேலைக்கு கிளம்புபவர்கள் ஊரடங்கு தங்களுக்கு கிடைத்த வரமாக கருதி, குடும்பத்தினரோடு உற்சாகமாக உறவாடி வருகிறார்கள். ஆனால் சிலரோ ஊரடங்கு எப்போது முடியும், வீட்டு சிறையில் இருந்து பீனிக்ஸ் பறவைப்போல எப்போது உயிர்த்தெழலாம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஆரம்பக்கட்டத்தில் சில தம்பதியினர் திருமணமான முதல் சில ஆண்டுகளில் இருப்பதைப்போன்று இறக்கை கட்டி பறந்தார்கள். சமையல் வேலை, துணி துவைத்தல், வீடுகளை சுத்தம் செய்தல் என பல்வேறு வேலைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். ஆனாலும் இந்த மகிழ்ச்சி ஊரடங்கின் முதல் பாதியிலேயே சிலருக்கு முடிந்தது. ஆனால் வேறு சிலருக்கு ஊரடங்கின் 2-ம் பாதியில் நிறைவடைந்துவிட்டது.

சேர்த்து வைத்திருந்த பணம் கரைய, கரைய பாசமும் கரைந்துவிட்டது. வெயில் பட்ட பின்னர் கரையும் ஐஸ்கிரீம் போல உருகிவிட்டது. ஒரு வகையான சலிப்பு காரணமாக கீரியும், பாம்பும் போல எடுத்ததற்கெல்லாம் இப்போது சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். முகம் பார்த்து பேசுவதை தவிர்த்து, ஒதுங்கி செல்கிறார்கள்.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, அவர்களுக்கு எல்லை இல்லாத துன்பத்தை வாரி இறைத்திருக்கிறது. சில வீடுகளில் குடும்ப தலைவிகளும், குடும்ப தலைவர்களும் முட்டி, மோதி வருகிறார்கள். பாதிக்கப்படும் பெண்கள், கணவன் மீது போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்து வருகிறார்கள். இதனுடைய விளைவாகத்தான் பெண்களை தாக்குபவர்கள் மீது உரிய புகார் கொடுத்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல மனைவிகளால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், சொந்த வீட்டிலேயே உணவுக்காக கை ஏந்தும் நிலை இருப்பதாகவும் கூறி பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். இதேபோல புகார் தெரிவிக்கும் படலம் இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. அதாவது சில பெண்கள், போலீசாரிடமும், தங்களுடைய தாய் வீட்டிலும், மாமனார், மாமியாரிடமும் கணவன் மீது புகார்களை அள்ளி தெளித்து வருகிறார்கள்.

இதேபோல சில ஆண்கள் தங்களுடைய மனைவியின் பெற்றோரிடமும் புகார்களை கூறி வருகிறார்கள். பரஸ்பரம் தெரிவிக்கும் இந்த புகார்களை போலீசார் தீர்த்து வைத்து வருகிறார்கள். இதேபோல தம்பதியர்களின் மாமனார்-மாமியார்களும் புகார்களை சமரசம் செய்து, தீர்ப்பு வழங்கும் நாட்டாமைகளை மாறிவருகிறார்கள். தப்பு செய்தவர்களை கண்டித்தும் வருகிறார்கள். இருந்தபோதிலும் சில தம்பதிகளிடம் இன்னும் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இதனால் ஊரடங்கு நிறைவடைந்ததும், தொடர்ந்து மன உளைச்சலில் இருக்கும் சில தம்பதியினருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கவேண்டும் என்று மனநல டாக்டர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரடங்கு தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தில் மட்டுமின்றி, குடும்ப உறவுக்கும் சில தருணங்களில் உலை வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
Tags:    

Similar News