லைஃப்ஸ்டைல்
பயம் நமது பலவீனம்..

பயம் நமது பலவீனம்..

Published On 2020-04-02 05:10 GMT   |   Update On 2020-04-02 05:10 GMT
நம்மை பயம்கொள்ளவைக்கும் விஷயங்கள் உலகில் நிறைய நடக்கின்றன. விபத்து, மரணம் போன்றவை நமக்குள்ளே மிகுந்த அதிர்வலைகளை உருவாக்குகின்றன.
நம்மை பயம்கொள்ளவைக்கும் விஷயங்கள் உலகில் நிறைய நடக்கின்றன. விபத்து, மரணம் போன்றவை நமக்குள்ளே மிகுந்த அதிர்வலைகளை உருவாக்குகின்றன. விபத்து பற்றிய ஒரு காட்சியை நீங்கள் காலையில் டெலிவிஷனில் பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கே தெரியாமல் அது உங்கள் மனதில் பதிந்துவிடும். பின்பு நீங்கள் அதை மறந்துவிட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிவிடுவீர்கள்.

அன்று மாலை 6 மணிக்கு கணவரோடு சேர்ந்து விருந்து ஒன்றுக்கு செல்வது உங்கள் திட்டமாக இருக்கும். ‘சொன்ன நேரத்தில் கணவர் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிவிடுவார். அவரோடு விருந்துக்கு செல்ல வேண்டும்’ என்று, நீங்கள் அலங்காரத்தோடு காத்திருப்பீர்கள். கணவர், 6.30 மணி ஆகியும் வரவில்லை. காலையில் நினைவு படுத்தியபோது சரியாக ஐந்தரை மணிக்கே வந்துவிடுவதாக சொல்லிவிட்டு போயிருப்பார்.

ஏழு மணி ஆகியும் அவர் வந்து சேரவில்லை என்கிறபோது என்ன செய்வீர்கள்? அவரது செல்போனில் தொடர்பு கொள்வீர்கள். ‘சுவிட்ச் ஆப்’ என்று பதில் வருவதாக வைத்துக்கொள்வோம். எட்டு மணி ஆகும்போது அவர் மீது உங்களுக்கு கோபமும், எரிச்சலும் வரும். ‘இவர் இப்படித்தான் ஒருநாளும் நேரத்திற்கு வருவதில்லை. இன்று வரட்டும்.. இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன்’ என்று மனதுக்குள் திட்டிக்கொள்வீர்கள்.

அப்போது, அவர் இதுபோல் பலமுறை தாமதமாக வந்த ஒவ்வொரு சம்பவமும் உங்கள் நினைவுக்கு வரும். அந்த கோபத்தை குழந்தைகளிடம் காட்டிவிட்டு, அலங்காரத்தையும் கலைத்துவிட்டு, மணியை பார்க்கும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.

மீண்டும் போன் செய்வீர்கள். ‘சுவிட்ச் ஆப்’ என்பதே பதிலாக கிடைத்தால், உங்களுக்கு உடனே நினைவுக்கு எது வரும் தெரியுமா?

காலையிலே ஒரு விபத்து காட்சியை பார்த்தீர்கள் அல்லவா! அது நினைவுக்கு வந்துவிடும். கோபம், எரிச்சல் எல்லாம் மறைந்து பயம் உருவாகி, மனதில் பதிந்து கிடக்கும் அடுக்கடுக்கான விபத்து காட்சிகள் நினைவுக்கு வரும். ‘அவருக்கு வழியில் ஏதேனும் நடந்திருக்குமோ? அப்படி ஏதாவது நடந்துவிட்டால், என் நிலை என்ன ஆகும்? என் குழந்தைகள் நிலை என்ன ஆகும்?’ என்றெல்லாம் நினைத்து பயந்து அழத் தொடங்கிவிடுவீர்கள். கணவரின் அலுவலகத்திற்கும், அவருக்கு தெரிந்த நண்பர்களுக்கும் போன் செய்து பயத்தோடு விசாரிப்பீர்கள்.

இரவு 11 மணிக்கு கணவர் வந்து உங்கள் முன்னே வந்து சோகத்தோடு, சோர்வோடு நிற்பார். ‘தலைமை அதிகாரியோடு திடீரென்று சில மணி நேரம் பயணம் மேற்கொள்ளவேண்டிய தானது. அதை முடித்துவிட்டு வரும் வழியில் பெட்ரோல் தீர்ந்து, வண்டியை தள்ளிக்கொண்டே வந்தேன். இடையில் டிராபிக் போலீஸ்காரர் ஒருவர் தடுத்து நிறுத்தி, லைசென்சை கேட்டார். அவரிடம் வாக்குவாதம் செய்தேன்..’ என்று நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறிவிட்டு, ‘இப்போதுதான் போனை பார்த்தேன் ‘சார்ஜ்’ இறங்கி செயலிழந்து போயிருக்கிறது..’ என்று அவர் சொல்லும்போது, அவரை பார்க்க பரிதாபமாக இருக்கும்.

இதை மற்றவர்களிடம் சொன்னால், சராசரி விஷயமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால் நீங்களே மூன்று மணிநேரம் பயத்தில் உறைந்துபோயிருப்பீர்கள். அந்த பயத்திற்கு என்ன காரணம்? நீங்கள் காலையிலே பார்த்த விபத்து உங்கள் மனதிற்குள் பதிந்து கிடந்ததுதான் காரணம்.

பல நூறு கோடி மக்கள் வாழும் இந்த உலகத்தில் விபத்தும், மரணமும், நோயும் எங்கேயும், எப்போதும், ஏதாவது ஒரு விதத்தில் நடந்துகொண்டுதான் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை பார்த்துவிட்டதால், கணவருக்கும் அப்படி நடந்திருக்குமோ என்ற பயம் வந்துவிடுகிறது.

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கவேண்டுமோ அதுவும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது

எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்”

என்ற சக்தி வாய்ந்த வாசகங்களில் நம்பிக்கை வையுங்கள். ‘இதுவும் கடந்துபோகும்’ என்ற நம்பிக்கையோடு வாழுங்கள்.
Tags:    

Similar News