லைஃப்ஸ்டைல்

தையல் பயிற்சி பெற ஆர்வம் காட்டும் பெண்கள்

Published On 2019-04-01 03:30 GMT   |   Update On 2019-04-01 03:30 GMT
தையல் பயிற்சி பெற பெண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி கொண்டிருக்கிறார்கள். தையல் பயிற்சி பெற்று தங்களது வீடுகளில் தையல் எந்திரங்களை வாங்கி ஆடைகளை தைத்து வருமானம் ஈட்டுகிறார்கள்.
ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை என்பது ஒரு இடத்தில் மட்டுமே தயாரிக்கப்படுவதில்லை. ஜாப் ஒர்க் செய்வதற்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இதில் தையல் என்பது பின்னலாடை தயாரிப்பில் இன்றிமையாத ஒன்றாகும். பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்கு செல்கிற தொழிலாளர்கள் வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள். தொடர்ந்து அவர்களுக்கு ஏற்கனவே வேலை செய்கிற தொழிலாளர்கள் பயிற்சி வழங்குகிறார்கள். இதன் மூலம் தொழிலை பழகிக்கொள்கிறார்கள்.

திருப்பூரில் ஆண்களை போலவே பெண்களும் பலர் வேலை செய்து வருகிறார்கள். வீடுகளில் இருந்தபடி துணிகளுக்கு பிசிறு எடுப்பது என்பது உள்பட பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது தையல் பயிற்சி பெற பெண்கள் பலர் ஆர்வம் காட்டி கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூரில் வேலை வாய்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். வீடுகளில் இருந்தபடியே வீட்டு வேலைகளை கவனித்து விட்டு, பின்னலாடை துறை சார்ந்த ஜாப் ஒர்க்குகளையும் பல பெண்கள் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

தொழில் தொடங்குகிறவர்கள் பலர் வங்கிகளில் கடன் தொகைகளை பெற்றுக்கொண்டு தான் தொழில் தொடங்குகிறார்கள். இதன் பின்னர் தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து அந்த கடனை அடைக்கிறார்கள். தற்போது பெண் தொழில்முனைவோருக்கு பல்வேறு கடன் திட்டங்கள் உள்ளது. இந்த கடன் திட்டங்கள் மூலமாக பலரும் வங்கிகளில் கடன் பெற்று நிறுவனங்களை தொடங்கி வருகிறார்கள்.

இதில் பெரும்பாலான பெண் தொழில்முனைவோர்கள் தையல் பயிற்சி நிலையங்களை அமைக்கிறார்கள். இந்த பயிற்சி நிலையங்களுக்கும் பயிற்சி பெற பல பெண்கள் ஆர்வமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பெண்கள் தையல் பயிற்சி பெற்று விட்டு தங்களது வீடுகளில் தையல் எந்திரங்களை வாங்கி ஆடைகளை தைக்கிறார்கள். பின்னலாடை தொழிலும் வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே பின்னலாடை தொழிலில் விரைவில் பெண் தொழில்முனைவோர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
Tags:    

Similar News