லைஃப்ஸ்டைல்

பணக்காரர் ஆக 5 சூத்திரங்கள்

Published On 2019-01-28 03:07 GMT   |   Update On 2019-01-28 03:07 GMT
பணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? அந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
‘பணக்காரர்’ என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு நம் அனைவருக்குமே ஆசைதான். ஆனால் பணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? அந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

இதோ...

1. தூண்டுதலைத் தாண்டுங்கள்

‘இது எனக்கு இப்போதே வேண்டும்’ என்ற ஆசைத் தூண்டுதலை உங்களால் புறக்கணிக்க முடிந்தால், பணம் சம்பாதித்தலில் உள்ள முதல் தடையை வெற்றிகரமாகக் கடந்துவிடலாம். உடனடி மனநிறைவு என்பது குறுகிய காலத்துக்கு பெரிதாகத் தோன்றினாலும், அதைக் கட்டுப்படுத்தவில்லை எனில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சோதனையான காலத்தில் உதவும் அல்லது நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் உங்களின் சொத்து மதிப்பும் உயரும்.

2. சிறந்தவராக மாற முயலுங்கள்


உங்கள் பணியில் அல்லது தொழிலில் சிறந்தவராக மாறப் போதுமான அளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள் என்றால், உங்களின் வருமானம் ஈட்டும் திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். விருப்பமானவற்றை இடைவிடாமல் செய்வதன் மூலம், சந்தேகங்கள், போராட்டங்கள், நிராகரிப்பு இன்றிச் சிறப்பான பலன்களைப் பெறமுடியும். நீங்கள் செய்வதைச் சிறப்பாகச் செய்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.



3. கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்

பணத்தைச் செலவழிக்கும்போது சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறீர்களா? உங்கள் அவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை, தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையில் வைப்பது அவரவர் முடிவே. அவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும், ஆடம்பரத்தைத் தவிர்க்கும் எளிய வாழ்க்கை எல்லோருக்கும் ஏற்றது. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தல், அடிக்கடி வெளியில் உணவருந்துவதைக் குறைத்தல், ஆடை, அணிகலன்களுக்கான செலவைக் கட்டுக்குள் வைத்தல் போன்றவை அதிகப் பணம் சேமிக்க வழிவகுக்கும்.

4. நிதித் திட்டமிடல் அவசியம்

பணத்தைச் சேமிக்கும், செலவழிக்கும் வழிகள் குறித்த நிதித் திட்டமிடல் முக்கியம். உங்கள் பணத்தைச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யும் சரியான திட்டத்தின் மூலம்தான் பணக்காரர் ஆகும் பயணம் தொடங்கும். நல்ல பொருளாதாரத் திட்டத்துக்கான முதல் அடி, சிறந்த நிதித் திட்டமிடல்தான். ஒவ்வொரு செலவையும் வகைப்படுத்துதல் மற்றும் உங்களின் தேவைகள் மீதான செலவுகளை மாதமாதம் மதிப்பிடுதல் போன்றவை குறைவாகச் செலவு செய்யவும், அதிகமாகச் சேமிக்கவும் உதவும். நமது வருமானம், செலவுகள் பற்றிய தெளிவான பார்வை நமக்கு இருந்தால், ‘பட்ஜெட்’டில் வராத தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது எளிது.

5. முதலீட்டுக்கு முக்கியத்துவம்

பணக்காரராக இருப்பது என்பது ஒருவருடைய திறமை, அதிர்ஷ்டம், வாரிசுரிமை போன்றவற்றை மட்டும் பொறுத்ததல்ல. கையில் உள்ள பணத்தை தொடர்ந்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்து வருவதும் முக்கியம். வளமாக உள்ள பலரும் கூட சரியாக முதலீடு செய்யத் தெரியாமல் பணத்தை முடக்கிப் போட்டிருக்கிறார்கள் அல்லது தப்பான ஆலோசனைகளைக் கேட்டு தவறான முதலீடுகளில் பணத்தைப் போட்டு இழக்கிறார்கள். முதலீடு செய்வதற்கு பெருந்தொகை தேவை என்று எண்ணத் தேவையில்லை. சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு ஏற்ப, எஸ்.ஐ.பி. எனப்படும் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் போன்றவற்றில் சிறுதொகையை தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலே நாளடைவில் பணக்காரர் ஆகிவிடலாம்.
Tags:    

Similar News