லைஃப்ஸ்டைல்

மழைக்கால வீட்டு பராமரிப்பு முறை

Published On 2016-08-30 02:28 GMT   |   Update On 2016-08-30 02:28 GMT
மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதற்குமுன் வீட்டின் உள் அலங்காரத்தில் சில எளிய திருத்தங்களை செய்துவிட வேண்டும்.
மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. மழை பெய்யும் நேரத்தில் வீட்டின் பால்கனியிலோ அல்லது ஜன்னலோரத்திலோ நின்றபடி காபி குடிப்பது அருமையான அனுபவமாக இருக்கலாம். ஆனால் அதற்குமுன் வீட்டின் உள் அலங்காரத்தில் சில எளிய திருத்தங்களை செய்துவிட வேண்டும். அப்போதுதான் மழைக்காலத்தின் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியும். அதற்கான ஆலோசனைகள் இவை.

குடைக்கும் கோட்டுக்கும் தனியிடம் :

வீட்டிற்குள் நுழையும் இடத்திலேயே மழை கோட் வைப்பதற்கான ஹாங்கர் பொருத்தப்பட வேண்டும். அப்போதுதான் மழை பெய்யும்போது நனைந்த கோட் அணிந்தபடி வீட்டுக்குள் நுழைவதை தவிர்க்க முடியும். மழை கோட் மற்றும் காலணிகளை வெளியிலேயே வைத்துவிட்டு அறைக்குள் நுழைவதால் தரை ஈரமாவதை தடுக்க முடியும். மேலும் வரவேற்பறையின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதும் குடைகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் குடையை தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

இயற்கையான வெளிச்சம் :

மழைக்காலத்தில் வீட்டிற்குள் இயற்கையான வெளிச்சம் அதிக அளவில் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இயற்கையான வெளிச்சமும் காற்றும் அறையில் உள்ள ஈரப்பதத்தின் அளவை குறைப்பதற்கு உதவும்.

பிரகாசமான நிறங்கள் :

மழைக்காலத்தில் கதவு மற்றும் ஜன்னல் திரைகளும் சோபா உறைகளும் பிரகாசமான நிறங்களைக் கொண்டதாக இருக்கட்டும். மங்கலான நிறங்களை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். பிரகாசமான நிறங்களைக் கொண்ட ஜன்னல் திரைகள், மழைக்காலத்தின் சோம்பலை அகற்றி மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

கூடுதல் மிதியடிகள் :


மழைக்காலத்தில் கார்பெட் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். தரையின் ஈரத்தை அவை ஈர்த்து வைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். மேலும் பருத்தி துணியால் ஆன மிதியடிகளை கொஞ்சம் கூடுதலான எண்ணிக்கையில் வைத்துக்கொள்வது மழைக்காலத்தை சமாளிப்பதற்கான எளிய வழி.

பருத்திக்கு பதிலாக பாலியஸ்டர் :

கதவு மற்றும் ஜன்னல் திரைகளுக்கு பருத்தி துணிவகைகளைப் பயன்படுத்தாமல் பாலியஸ்டர் அல்லது நைலான் துணிவகைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த துணிகள் ஈரமானால் எளிதில் உலரும் தன்மை வாய்ந்தவை. எனவே மழைக்காலத்தில் இவற்றைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

இயற்கையான நறுமணம் :

மழைக்காலத்தில் தரை, சுவர், கூரை என்று வீடு முழுவதுமே ஈரமாகிறது. அறைகளில் ஈர வாசத்தை போக்குவதற்கு இயற்கையான முறைகளை பின்பற்றலாம். வாசனை திரவியங்கள் கலந்த மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதால் அறை மணமாக இருக்கும். மேலும் ஆடைகள் வைக்கும் அலமாரிகளில் கற்பூரங்களை வைப்பதால் ஈர வாசத்தில் இருந்து ஆடைகளை பாதுகாக்க முடியும்.

Similar News