லைஃப்ஸ்டைல்

பெண்களின் நட்பு எதுவரை

Published On 2016-04-11 06:48 GMT   |   Update On 2016-04-11 06:48 GMT
பல சமயங்களில், பெற்றோரையும் உற்றாரையும் விட நண்பர்களின் வார்த்தைகள் அதிகமாக மதிக்கப்படுகிறது.
இதிகாச காலம் முதல் இக்காலம் வரை, நட்பு பெரிதாகப் போற்றப்படுகிறது. நட்பு என்ற உறவைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுகிறோம். பல சமயங்களில், பெற்றோரையும் உற்றாரையும் விட நண்பர்களின் வார்த்தைகள் அதிகமாக மதிக்கப்படுகிறது. நண்பர்களின் ஊக்கத்தால் சவால்களை எதிர்த்து வெற்றி கண்டவர் பலர். அதே நேரத்தில், தவறான நட்பு ஒருவரை அதள பாதாளத்தில் தள்ளும் அபாயமும் இருக்கிறது.

நண்பருடைய பேச்சு மட்டுமல்லாது, அவர் உடல் மொழியிலிருந்தோ, நடவடிக்கையிலிருந்தோ, கண்களிலிருந்தோ கூட அவர் உண்மையானவரா என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

ஆண்கள் தங்கள் சிறு வயது நட்பை பெரியவர்கள் ஆன பின்பும் தொடர்கிறார்கள். பெண்களோ, திருமணம், குடும்பம், பொறுப்புகள் போன்றவற்றுக்கு பிரதானமான இடம் தந்து விடுவதில், நட்பு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஆனால் தோழிகள் நமக்குப் பக்கபலமாக இருக்கக் கூடியவர்கள். அப்படி ஊக்கமாகவும் பக்கபலமாகவும் இருக்கக்கூடிய பள்ளி, கல்லூரிக் கால நட்பைத் தவறவிடாமல் பாதுகாப்பது முக்கியம்.

ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு தன் தோழிகளோடு நட்பைத் தொடர்வதில்லை என்பது உண்மை தான். அதனால் அவள் சில நல்ல விஷயங்களைத் தவற விடுகிறாள் என்பதும் உண்மை தான். ஆனால் பெண் மிகவும் கெட்டிகாரியாக இருப்பதால், அவளுக்கு புது நட்பை உருவாக்கிக் கொள்வதும் அதன் மூலம் வளர்வதும் சுலபமாகிறது. பழைய நட்பின் மூலம் மட்டும் தான் ஒருவர் நல்லவற்றைக் கற்க முடியும் என்பதில்லையே! பல வருடங்களாக நட்பைத் தொடர்வது மூலம் மட்டுமே ஓர் ஆணுக்கு அது சாதகமாகவும் பக்கலபலமாகவும் அமைகிறதென்று சொல்லிவிட முடியாது.

ஆண்களுக்கு சந்தர்ப்பம் அதிகம் இருந்த போதிலும், பெண்களுக்குக் குடும்பப் பொறுப்புகள் அதிகம் என்ற போதிலும், தன்னைச் சுற்றி இருப்பவர்களில், மற்றும் உறவினர்களில் எப்படி நட்பு வட்டத்தைப் பெரிது படுத்துவது என்பது ஒரு பெண்ணுக்கு மிக நன்றாகத் தெரியும் என்பதால் தன்னைச் சுற்றி சுலபமாக நல்ல உறவுமுறைகளை வளர்க்கிறாள். தனக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதால். ஆண்களைப் போல் நட்பில்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை. அதுமட்டுமல்லாமல், கணினியில் இணையதளம் மூலம் பழைய காலத் தோழிகளோடு மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதற்கும் நீங்கள் முனையலாம்.

ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு வருவது இயற்கை. அதே நேரத்தில் இளம் வயதில் அவர்களுக்கிருக்கும் மனமுதிர்ச்சி குறைவு. இதனால் அவர்கள் தேர்ந்தெடுப்பது நல்ல நட்பா அல்லது தகாத நட்பா என்று உணரும் பக்குவம் அவர்களுக்குக் குறைவு. இதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு, மிக சாதுர்யமாக, நல்ல நட்பின் முக்கியத்துவத்தை, வளரும் போதே அவர்களுக்குப் புகுத்த வேண்டும்.

ஆண் பெண் நட்பென்பது அந்த இருவர் மட்டும் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல, இருவரது குடும்பங்களும் சம்மந்தப்பட்ட விஷயம். குடும்பம் பிள்ளைகளுக்கு சரியான வளரும் சூழ்நிலையை அளிக்க முற்படும்போது, அவர்கள் சரி - தவறு என்று பாகுபடுத்தும் பக்குவத்தை இயற்கையாகப் பெறுகிறார்கள்.

Similar News