பெண்கள் மருத்துவம்
கர்ப்ப கால இரத்தக்கசிவு

கர்ப்பிணிகளுக்கு எப்போதெல்லாம் இரத்தக்கசிவு ஏற்படும்

Published On 2022-05-27 06:18 GMT   |   Update On 2022-05-27 06:18 GMT
இரத்தக்கசிவானது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒருசில காரணங்களால் ஏற்படக்கூடும். அதேப்போல் கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், இரத்தக்கசிவு ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் கஷ்டத்தையும் அனுபவிப்பார்கள். அதில் ஒன்று தான் இரத்தக்கசிவு ஏற்படுவது. பொதுவாக கர்ப்பிணிகளுக்கு இரத்தக்கசிவு ஏற்படக்கூடாது. இருப்பினும் சிலருக்கு சில காரணங்களால் கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படும். அதற்காக பயப்பட வேண்டாம். ஏனெனில் இரத்தக்கசிவானது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒருசில காரணங்களால் ஏற்படக்கூடும். அதேப்போல் கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், இரத்தக்கசிவு ஏற்படும். இங்கு கர்ப்பிணிகளுக்கு எப்போதெல்லாம் இரத்தக்கசிவு ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

கர்ப்பிணிகளின் கருப்பை வாயானது மிகவும் சென்சிடிவ்வாக இருந்தால், அப்போது லேசாக இரத்தக்கசிவு ஏற்படும். அதுவும் கர்ப்பமாக இருக்கும் போது உறவில் ஈடுபட்டால் இத்தகைய இரத்தக்கசிவு ஏற்படும்.

கருமுட்டையானது வளர்ந்து, கருப்பையில் பதியும் போது, கருப்பையில் நிறைந்துள்ள இரத்தமானது கசிய ஆரம்பிக்கும். இதன் காரணமாகத் தான் சிலருக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் லேசாக இரத்தக்கசிவு ஏற்படுகிறது.

நஞ்சுக்கொடியானது கருப்பை சுவரில் இருந்து முழுமையாகவோ அல்லது பாதியாகவோ தகர்ந்து காணப்பட்டால், அப்போதும் இரத்தக்கசிவு ஏற்படும். பொதுவாக இந்த நஞ்சுக்கொடி தகர்வானது பிரசவத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் அல்லது பிரசவம் நடைபெறும் போது ஏற்படும்.

கருமுட்டையானது கருப்பையில் வளராமல், வேறு இடங்களில் அதாவது கருமுட்டை குழாயில் வளர ஆரம்பித்தால், அப்போதும் இரத்தக்கசிவு ஏற்படும். அதுமட்டுமின்றி இந்த காரணத்தினால் இரத்தக்கசிவு வந்தால், அத்துடன் கடுமையான வலி மற்றும் பிடிப்புக்கள் அடிவயிற்றில் ஏற்படக்கூடும்.

நஞ்சுக்கொடியானது கருப்பை வாயை முழுமையாவோ அல்லது பாதியாகவோ உள்ளடக்கியிருந்தால், அளவுக்கு அதிகமாக இரத்தக்கசிவு ஏற்படும். இந்த நிலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், பெண்கள் தரையில் நேராக படுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த மாதிரியான சூழ்நிலையில் தாய் மற்றும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிசேரியன் செய்யக்கூடும்.
Tags:    

Similar News