லைஃப்ஸ்டைல்
பெண்கள் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம்

பெண்கள் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம்

Published On 2020-05-16 03:15 GMT   |   Update On 2020-05-16 03:15 GMT
ஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்பு சத்து அதிகம் தேவைப்படுகிறது. பெண்கள் சாப்பிடும் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
உடலுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக இரும்புச்சத்து இருக்கிறது. உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்த சிவப்பணுக்களை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. மேலும் ஆற்றலை உற்பத்தி செய்யவும், செல்களின் சுவாசத்தை எளிதாக்கவும் துணைபுரிகிறது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்பு சத்து அதிகம் தேவைப்படுகிறது. பருவ வயதை எட்டிய பெண்ணுக்கு தினமும் 18 மில்லி கிராம் இரும்பு சத்து தேவையாக இருக்கிறது.

கர்ப்பகாலத்தில் இரும்பு சத்தின் தேவை 27 மில்லி கிராமாக அதிகரிக்கிறது. ஆனால் ஆணுக்கோ ஒரு நாளைக்கு 8 மில்லி கிராம் இரும்பு சத்துவே போதுமானது. ஆண்களை ஒப்பிடும்போது கர்ப்பகாலத்தில் மூன்று மடங்கு அதிகம் தேவைப்படுகிறது. அதனால் பெண்கள் சாப்பிடும் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். மாதவிடாய் சுழற்சியும், கர்ப்பமும்தான் இரும்பு சத்தின் தேவைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா கூறுகையில், “மாதவிடாய் சுழற்சி காரணமாக பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரத்தத்தை இழக்க வேண்டியிருக்கிறது. கர்ப்ப காலமும் இரும்பு சத்தின் தேவையை அதிகரிக்க செய்துவிடுகிறது. கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு ரத்தத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனை நிவர்த்தி செய்வதற்கு இரும்பு சத்து துணை புரிகிறது. பிரசவத்தின்போது எதிர்கொள்ளும் ரத்த இழப்பை ஈடு செய்ய இரும்பு சத்து தேவைப்படுகிறது. மாதவிடாய் காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரத்த இழப்பு உண்டாகும். அது உடலில் ஒட்டுமொத்த இரும்பு உள்ளடக்கத்தை பாதிக்கும். ரத்தத்தை மீண்டும் நிரப்புவதற்கு இரும்பு சத்து அதிகமாக தேவைப்படும். அதனால் பெண்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எப்போதும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்” என்கிறார்.

கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் உறவு பாலமாக விளங்கும் நஞ்சுக்கொடியை உருவாக்குவதற்கு இரும்பு சத்து உதவுகிறது. கருவில் இருக்கும்போதும், பிறந்த பிறகு ஆறு மாதங்கள் வரையும் அதன் வளர்ச்சியில் இரும்பு சத்து முக்கிய பங்கு வகிக்கும். உடலில் இரும்பு சத்து குறையும்போது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்கும். அதன் காரணமாக ரத்தசோகை ஏற்படக்கூடும். உடல் சோர்வும் உண்டாகும். பச்சை இலை காய்கறிகள், முட்டை, உலர்ந்த பழங்கள், நட்ஸ்கள், தானியங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், மீன் உள்ளிட்ட இரும்பு சத்து அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆண்களை காட்டிலும் பெண்கள் இரும்பு சத்தை விரைவாக இழந்துவிடுவார்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
Tags:    

Similar News