லைஃப்ஸ்டைல்
கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன்

கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன்

Published On 2020-04-28 08:23 GMT   |   Update On 2020-04-28 08:23 GMT
சிலருக்கு கர்ப்பப்பையில் தீர்க்க முடியாத கோளாறுகள் இருந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவது கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் (Uterus transplantation).
“மனித இனத்தின் உற்பத்தி மையமாகவும், தாய்மையின் சின்னமாகவும் விளங்குவது, கர்ப்பப்பை! ஆனால் சில பெண்கள் கர்ப்பப்பை இல்லாமலே பிறக்கிறார்கள். சிலருக்கு கர்ப்பப்பை இருந்தாலும், முழு வளர்ச்சி பெறுவதில்லை. வேறு சிலருக்கு கர்ப்பப்பையில் தீர்க்க முடியாத கோளாறுகள் இருந்துகொண்டிருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளை கொண்டவர்கள், திருமணமாகி கணவரோடு தாம்பத்ய உறவு வைத்துக்கொண்டிருந்தாலும் குழந்தையின்மையால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவது கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் (Uterus transplantation).

இதயம், ஈரல், கிட்னி போன்றவைகளை தானம் பெற்று உடலில் இணைப்பதுபோல் இப்போது கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. இது குழந்தையின்மைக்கான நவீன மருத்துவத்தில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. ஏன்என்றால் சோதனைக்குழாயில் கருவை உருவாக்கினாலும் அது குழந்தையாக வளர கர்ப்பப்பை தேவைப்படுகிறது. கர்ப்பப்பைக்கு மாற்றாக எதுவுமே இல்லை என்பதால், கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் மருத்துவத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது முழு தகுதிக்கூடிய கர்ப்பப்பை அமைந்திருக்காதவர்களில் ஒரு பகுதியினர் வாடகைத்தாய் முறையை விரும்புகிறார்கள். அந்த பெண், தனது கர்ப்பப்பைக்கு பதிலாக, இன்னொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார். தனது கணவரது உயிரணு, தனது கருமுட்டை இரண்டையும் பரிசோதனை குழாய் முறையில் இணைத்து கருவாக்கி, வாடகைத்தாயின் கர்ப்பப்பைக்குள் அதை செலுத்தி, வளர்த்து பிரசவிக்கிறார்.
இந்த முறையில் பெரும்பாலானவர்கள் திருப்தியடைந்துவிடுகிறார்கள். திருப்தியடையாமல் தன் கர்ப்பப்பை மூலமே தனது குழந்தை வளரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ‘கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனை’ தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த ஆபரேஷனுக்கான ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் பல வருடங்களாக நடந்துகொண்டிருந்தன. கடந்த நூற்றாண்டின் இறுதியில்தான் இதில் நம்பிக்கையை உருவாக்கும் ஒளிக்கீற்றுகள் உருவாகின. முதலில் இந்த மாற்று ஆபரேஷனை சில பிராணிகளிடம் செய்தார்கள். அது வெற்றிகரமாக அமைந்தது.

அதை தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் போட்டிபோட்டு பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனை செய்ய நேரடியாக களத்தில் இறங்கின. 2002-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பையை தானமாக பெற்று தேவைப்பட்ட இன்னொரு பெண்ணுக்கு பொருத்தினார்கள். புரட்சிகரமான இந்த ஆபரேஷனில் திடீர் பின்னடைவு ஒன்று 79-வது நாள் ஏற்பட்டது. இன்பெக்ஷன் மூலமான தவிர்க்க முடியாத காரணத்தால், இணைக்கப்பட்ட கர்ப்பப்பை மீண்டும் எடுத்து மாற்ற வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதனால் அது தோல்வி அடைந்த முயற்சியாக கருதப்பட்டது.

அந்த தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதாவது 46 வயதான பெண்ணிடம் இருந்து எடுத்து, 26 வயதான பெண்ணுக்கு பொருத்தினார்கள். இந்த 20 வயது இடைவெளி தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.

அடுத்து, குறைபாடுகளை களைந்து இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து கொண்ட தாய்மார்கள் அரங்கேற்றியது, சுவீடன். 2011-ல் அங்கு முதல் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் நடந்தது. 2014-ல் மாற்று கர்ப்பப்பை மூலம் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு ஆங்காங்கே சில நாடுகள் இந்த ஆபரேஷனில் வெற்றி கண்டிருக்கின்றன. இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 15 குழந்தைகள் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் வாயிலாக பிறந்திருப்பதாக தெரியவருகிறது.
Tags:    

Similar News