லைஃப்ஸ்டைல்
பெரிமெனோபாஸ் சமயத்தில் பெண்கள் செய்யவேண்டிய பரிசோதனைகள்

பெரிமெனோபாஸ் சமயத்தில் பெண்கள் செய்யவேண்டிய பரிசோதனைகள்

Published On 2020-01-08 06:32 GMT   |   Update On 2020-01-08 06:32 GMT
பெரிமெனோபாஸ் என்பது என்ன? அந்தக் காலகட்டத்தில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்களின் வாழ்வில், மாதவிடாயின் தொடக்க காலமான பூப்பெய்தலைவிடவும், மாதவிடாய் நின்று போகும் மெனோபாஸ் காலம் அதிமுக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். காரணம், மெனோபாஸின்போது, பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிக அளவில் ஏற்படும். இந்த மாற்றங்கள் யாவும் சினைப்பை, கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.

மெனோபாஸ் என்றில்லை, அதற்கு முன்பே, அதாவது பெரிமெனோபாஸ் (Perimenopause) காலத்திலேயே பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பெரிமெனோபாஸ் என்பது என்ன? அந்தக் காலகட்டத்தில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்? என்று பார்க்கலாம்.

``பெரிமெனோபாஸ் என்பது, மெனோபாஸுக்கு முந்தைய நிலை. மெனோபாஸ் 50 வயதில் ஒரு பெண்ணுக்கு ஏற்படப்போகிறது என்றால், 46 வயதிலிருந்தே, மாதவிடாய் இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வது என அவருக்கு சுழற்சியில் சீரற்ற தன்மை உண்டாகும்.

இதுதான் பெரிமெனோபாஸ். இந்த நேரத்தில் உடல் திடீரென சூடாவது அல்லது சில்லிடுவது, இரவில் அதிகம் வியர்ப்பது, தலைமுடி தொடர்பான பிரச்னைகள் போன்ற மாற்றங்களெல்லாம் ஏற்படும். பெரும்பாலும் 45 முதல் 55 வயதில்தான் மெனோபாஸ் தொடங்கும் என்பதால், நாற்பதுகளின் தொடக்கத்திலேயே ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் அதிக கவனமாக இருக்கத் தொடங்கிவிட வேண்டும். அந்த வகையில், நாற்பதைத் தாண்டிய பெண்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளுக்கான பட்டியல் இதோ...

* சினைப்பை புற்றுநோயை வரும் முன் கண்டறிய உதவும் ட்யூமர் மார்க்கர்ஸ் எனப்படும் சி.ஏ.125 (Tumor Marker test CA 125) ஸ்கிரீனிங் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள் குறித்த ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள, அல்ட்ரா சோனோகிராம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

* கர்ப்பப்பை, கர்ப்பப்பைவாய், எண்டோமெட்ரியல், மலக்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களைக் கண்டறிவதற்கான பயாப்ஸிகளான பேப் ஸ்மியர் (Pap smear), கால்போஸ்கோபி (Colposcopy), பிப்பெல் டெஸ்ட் (Pipelle Test), மேமோகிராம் போன்றவற்றைச் செய்து கொள்ள வேண்டும்.

* அதிகபட்சமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்துகொள்ள வேண்டும். மருத்துவப் பிரச்னைகளுக்கான ஏதேனும் குடும்பப் பின்னணி இருப்பவர்கள், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்துகொள்ள வேண்டும்.

* திடீரென உடல் எடை அளவுக்கதிமாக அதிகரிப்பது மற்றும் அடிவயிறுப்பகுதி பெரிதாவது, உடன் அடிவயிற்றில் தீவிர வலி போன்றவை யாவும் பெண்கள் உதாசீனப்படுத்தும் மிகமுக்கியமான அறிகுறிகள். பெரும்பாலும் இவையாவும் நீர்க்கட்டியைக் குறிக்கும். பல பெண்கள் தொப்பை, சாதாரண வலி என்றெல்லாம் நினைத்து இவற்றைக் கடந்துவிடுகின்றனர். ஆனால் நீர்க்கட்டிகளை முதல் நிலையிலேயே கண்டறியவில்லையெனில், அவை புற்றுநோய்க்கட்டிகளாக மாறக்கூட வாய்ப்புள்ளது. ஆக, அப்படித் தெரியவருபவர்கள் சினைப்பைக்கான பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

* மூட்டுவலி, நடப்பதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் வைட்டமின் டி3-க்கான பரிசோதனைகளைச் செய்து, எலும்பு ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொள்ளவும். தேவைப்படும்பட்சத்தில், எலும்பு அடர்த்திக்கான எக்ஸ்ரே பரிசோதனையையும் மேற்கொள்ளலாம்.

* நாற்பதுகளைத் தாண்டும்போது பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் அதிகம் இருக்கும் என்பதால், தைராய்டு பரிசோதனைகள் செய்வது கட்டாயம்.

* இதய ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொள்ள, ஈ.சி.ஜி செய்யவும்.

* உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவரும் வருடம் ஒருமுறை சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள் போன்றவற்றுக்கான பரிசோதனைகள் செய்யவும்.
Tags:    

Similar News