லைஃப்ஸ்டைல்

நட்பை நேசிப்போம்

Published On 2019-05-22 08:42 GMT   |   Update On 2019-05-22 08:42 GMT
உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்.
நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை 50 ஆண்டுகள் கழித்து இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர். உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் ஆனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது.

பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான். வீட்டுக்கு எல்லை உண்டு, ஊருக்கு எல்லை உண்டு, நாட்டுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது.

ஒரே பள்ளியில் படித்தவர்கள், ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஒரே பேருந்து, ஒரே ரெயிலில் பயணம் செய்பவர்கள், ஒரே உணவகத்தில் சாப்பிடுபவர்கள், ஒரே டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், ஒரே அறையில் தங்குபவர்கள் என பல்வேறு நிலைகளில் நட்பு உருவாகலாம். “நீ உலகின் அதிபதியாய் இருப்பினும் ஒரு நண்பன் இல்லாவிடில் ஏழை தான்,” என யங் என்ற அறிஞர் கூறுகிறார்.

பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ, மதிய உணவு இடைவெளியில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது அவரவர் வீட்டு உணவுகள் அடுத்தவர் தட்டுக்கு பரிமாறப்படும். அங்கே பரிமாறப்படுவது உணவுகள் மட்டுமல்ல, இருதயங்களும் தான். பொதுவாக வேறுபாடுகளை களையும் விஸ்வரூப விருட்சம் தான் நட்பு.

நட்பு என்பது மின் விசிறியல்ல. இயற்கை காற்று, அதற்கு மின்தடையே வராது. என்ன தான் நமக்கு பிரச்சினை என்றாலும், அதை மனதுக்குள்ளே பூட்டி வைத்தால், அது நம்மை நோய் பாதிப்புக்கு கொண்டு போய் விட்டு விடும். ஏனெனில் தாய், தந்தையிடம் பேச அளவு உண்டு. உறவினர்களிடம் பேச அளவு உண்டு. காதலியிடம் பேச அளவு உண்டு. ஆனால் இருதயத்தின் ஆழத்தில் உள்ள உண்மைகளை ஒளிக்காமல் ஒருவன் பேசுவது தன் நண்பனிடம் மட்டும் தான்.

உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான். தாய், தந்தையை விட நம் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே.உயிர் காப்பான் தோழன் என்பார்கள். தன் உயிரை கொடுத்தாவது நண்பன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று போராடுவது நட்பு. அதனால் தான் நட்பை ஒரு சக்தி வாய்ந்த மருந்து என்கிறார்கள்.

திருக்குறளில் நட்பின் மேன்மையை திருவள்ளுவரும், நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் அருமையாக விளக்குகிறார். நட்பு என்பது முகம் பார்த்து பழகுவதல்ல. அது இருதயம் கலந்து பழகுவது. உதட்டிலிருந்து பேசும் பேச்சுக்களால் நீடிப்பதல்ல, உள்ளத்தில் இருந்து வரும் ஆழமான வார்த்தைகளால் நீடிப்பது.

நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். தீயநட்பு தேய்பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து பின்னர் மறைந்து போகும். எனவே நல்ல நட்பை நேசிப்போம்.
Tags:    

Similar News