பெண்கள் உலகம்

மெனோபாசுக்கு பிறகு எலும்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாவிட்டால்...

Published On 2023-03-06 06:30 GMT   |   Update On 2023-03-06 06:30 GMT
  • எலும்புகளின் ஆரோக்கியத்தை மெனோபாஸ் காலத்துக்குப் பின்பு பராமரிப்பது மிகவும் முக்கியம்.
  • எலும்புகளின் ஆரோக்கியத்திற்கான சில வழிகளை பார்ப்போம்...

மெனோபாஸ் வயது வந்துவிட்டது... இனிமேல் எதற்கு உடற்பயிற்சி எல்லாம்என்கிற எண்ணம் பல பெண்களுக்கும் உண்டு. ஆனால் அது தவறு. அத்தனை காலம் நீங்கள் உடற்பயிற்சியே செய்யாதவர் என்றாலும் மெனோபாஸ் நெருங்கும் போதாவது உடற்பயிற்சிகளை தொடங்க வேண்டியது அவசியம்.

வெயிட் பேரிங் பயிற்சிகள் என்பவற்றை உடற்பயிற்சி நிபுணரிடம் கேட்டு செய்ய ஆரம்பிக்கலாம்.ஒரே ஒரு பயிற்சியை மட்டும் செய்வதைவிட வேறு வேறு பயிற்சிகளை செய்வது உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் மேம்படுத்தும். வெயிட் பேரிங் (Weight bearing) மற்றும் தசைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகள் எல்லா வயதினருக்குமே மிக அவசியம். மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் காப்பதில் இந்த பயிற்சிகள் மிக மிக முக்கியமானவை.

எலும்புகளின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து மிக முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கூடியவரையில் உணவின் மூலமே கால்சியம் சேரும்படி பார்த்து கொள்ளுங்கள். கொழுப்பு குறைந்த பால் மற்றும் பால் பொருட்கள், மீன்களில் சார்டைன், சாலமன் போன்றவையும் கால்சியம் சத்து நிறைந்தவை. பிரோக்கோலி, கீரைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றிலும் கால்சியம் அதிகமுள்ளதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.

கால்சியம் சத்து மட்டும் சரியாக இருந்தால் போதாது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி சத்தும் மிக முக்கியம். அது போதுமான அளவில் இருந்தால்தான் கால்சியம் சத்து கிரகிக்கப்படும்.

முட்டை, ஈரல் போன்றவற்றில் வைட்டமின் டி இருக்கிறது. காலை மற்றும் மாலையில் இளம் வெயில் உடலில் படும்படி வாக்கிங் போகலாம், தோட்ட வேலை செய்யலாம். இதுவும் வைட்டமின் டி சத்தை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்படி தேவைப்பட்டால் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

பெரும்பாலான பெண்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் அடிக்கடி காஃபி மட்டுமே அருந்தி பசியாற்றி கொள்வதை பார்க்கிறோம். அதிகளவில் காஃபி குடிப்பதால் அதிலுள்ள கஃபைன், கால்சியம் கிரகிக்கப்படுவதைத் தடுத்துவிடும். காஃபி மட்டுமில்லை, கஃபைன் உள்ள எந்த பானமும் தவிர்க்கப்பட வேண்டும். மெனோபாசை நெருங்கும் பெண்கள் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

வயதாக ஆக உடற்பயிற்சியை தவிர்த்தீர்களானால் உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் பெரியளவில் பாதிக்கப்படும். சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி செய்வதை வாழ்க்கை முறையாக பின்பற்றினால் மெனோபாஸ் வயதில் எலும்புகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

உடற்பயிற்சிகள் செய்வது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். அதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வலிகள் தவிர்க்கப்படும். வயதாக ஆக நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைய தொடங்கும். அதன் தொடர்ச்சியாக உணவின் மூலம் உடலுக்குள் சேரும் ஊட்டச்சத்துகளின் அளவும் குறையும். குறிப்பாக மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு கால்சியமும், வைட்டமின் டியும் மிக முக்கியம். உணவு குறைவதால் இவை போதிய அளவு உடலுக்கு சேர்வதில்லை. உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருந்து, உடலை உறுதியாக வைக்கும்.

மெனோபாசுக்கு பிறகு உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறையும். அதன் தொடர்ச்சியாக எலும்புகள் வலுவிழப்பதும், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை வருவதும் சகஜமாக இருக்கும்.மெனோபாஸ் காலத்தில் பெண்கள் சந்திக்கிற பல பிரச்னைகளுக்கும் ஹெச்ஆர்டி எனப்படுகிற சிகிச்சை பலனளிக்கும். ஆனால் இதை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் முழுமையான ஆலோசனை பெற்றே, அவரவர் உடலுக்கு ஏற்றபடியான சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது.

எடை அதிகரிப்பு எப்படி எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக சொல்லப்படுகிறதோ அதே போல அதிக அளவில் எடையை குறைப்பதுகூட ஆரோக்கியமற்றதுதான். அதிலும் குறிப்பாக மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்கள் அளவுக்கதிகமான எடையை குறைப்பது அவர்களது எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.

வயதாவது மற்றும் எடைகுறைப்பு இரண்டும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட விரும்பும் பெண்கள் அதற்கு முன் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை பெற்றே செய்வது சிறந்தது.

Tags:    

Similar News