பெண்கள் உலகம்

தற்கொலையை தடுப்பதில் சமுதாயத்தின் பங்களிப்பு

Published On 2023-01-31 04:08 GMT   |   Update On 2023-01-31 04:08 GMT
  • தற்கொலை சம்பவங்கள் கண்டிப்பாக தடுக்கக்கூடியவைதான்.
  • தனிமையைத் தவிர்ப்பதும் நல்லது.

ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.

அதேநேரம் தற்கொலை என்பது ஒரு பிரச்சினையை மறப்பதற்கோ, மாற்றுவதற்கோ உள்ள தீர்வு கிடையாது.

அது இன்னொரு பிரச்சினையின் ஆரம்பம் என்பதை வளர்இளம் பருவத்தினர் மனதில் கொள்ள வேண்டும். தற்கொலை சம்பவங்கள் கண்டிப்பாக தடுக்கக்கூடியவைதான். ஏற்கனவே கூறியதுபோல ஆபத்தான மனநிலையில் உள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை தர வேண்டும். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் தற்கொலை எண்ணத்தை, நடத்திப்பார்க்கும் முயற்சியாக மாற்றத் தூண்டும். உதாரணமாக எறும்பு பொடி, பூச்சிக்கொல்லிகள், மாத்திரைகள் போன்றவை இப்படிப்பட்ட மனநிலை நபர்களின் பார்வையில் படாமல் வைத்திருப்பது அவசியம்.

கொடைக்கானலில் உள்ள தற்கொலை முனையில் தடுப்புவேலிகள் அமைத்த பின்பு, அங்கு அது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. லண்டன் தேம்ஸ் நதியின் மேலுள்ள பாலத்தில் தடுப்பு சுவர்கள் உயர்த்தி கட்டிய பின்பு, அங்கு தற்கொலை சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மது மனநிம்மதிக்கான மருந்தல்ல. சமீபகாலமாக எந்தக் காரணமும் இல்லாமலேயே மது தரும் போதையில், தற்கொலைக்கு முயன்றவர்கள் ஏராளம். மதுவும் தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் பொருள்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடைசி கட்டத்தில் கிடைக்கும், ஒரு சிறிய ஆலோசனை கூட தற்கொலை முயற்சியை தடுக்கும். எனவே, அதைப்பற்றிய லேசான எண்ணங்கள் எட்டிப் பார்த்தால்கூட நம்பிக்கைக்கு உரியவர்களிடம் அதைப்பற்றி பகிர்ந்துவிடுவது நல்லது. இதுபோன்ற நேரத்தில் தனிமையைத் தவிர்ப்பதும் நல்லது. மனநல மருத்துவரின் ஆலோசனைகள் சரியான நேரத்தில் கிடைத்தால், பல தற்கொலை முயற்சிகள் தடுக்கப்படும். இது போன்றவர்களுக்கு உதவுவதற்காக, தற்கொலைத் தடுப்பு அவசர உதவி மையங்கள் நிறைய செயல்படுகின்றன. மொத்தத்தில், தற்கொலைகளை தடுப்பதில் சமுதாயத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பது நிதர்சனமான உண்மை.

Tags:    

Similar News