அழகுக் குறிப்புகள்

தங்க நகைகளில் நகாசு வேலைப்பாடு

Published On 2023-01-19 04:39 GMT   |   Update On 2023-01-19 04:39 GMT
  • நகாசு வேலைப்பாடு தென்னிந்தியாவில் இருந்து உருவானது என்று கூறப்படுகின்றது.
  • இந்த டிசைன்கள் அற்புதமாக, தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

தங்க நகைகளில் போல்கி வேலைப்பாடு, பச்சிகம் வேலைப்பாடு, மீனாகாரி வேலைப்பாடு,குந்தன் வேலைப்பாடு, ஜாடு வேலைப்பாடு, தந்த வேலைப்பாடு, ஆன்டிக் வேலைப்பாடு மற்றும் டெம்பிள் வேலைப்பாடு என பல வேலைப்பாடுகள் இருந்தாலும் நகாசு வேலைப்பாடு தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. சிக்கலான டிசைன்களை மிகவும் அழகாக நகைகளில் செதுக்கிக் கொண்டுவரும் வேலைப்பாடு நகாசு என்று அழைக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலும் கோவில் வடிவமைப்புகள், பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவை இடம்பெறுவதைப் பார்க்க முடியும். இவ்வகை நகாசு வேலைப்பாடு தென்னிந்தியாவில் இருந்து உருவானது என்று கூறப்படுகின்றது.இந்த வேலைப்பாட்டில் மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் வடிவங்களை மிகவும் தத்ரூபமாக கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு நகை வடிவமைப்பாளர் செயல்படுகிறார்கள்.

இந்த நகைகளைத் தயாரிப்பதில், ஒவ்வொரு படியும் மிகவும் நுட்பமானதாகக் கூறப்படுகிறது.அதாவது ஓவியம் வரைதல், செதுக்குதல், வேலைப்பாடு செய்தல், பின்னர் வேலைப்பாடு செய்தவற்றை முழுமையாக தாக்கல் செய்தல் போன்ற நான்கு படிகளை இந்த வேலைப்பாடு கொண்டிருக்கின்றது.

முதல் படியாக எந்த டிசைனில் நகை செய்ய வேண்டுமோ அந்த டிசைனை பேப்பர் மற்றும் தங்கத்தாளில் வரைகிறார்கள்.தங்கத் தாளில் வரைந்த பிறகு, முழு வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களைத் தெளிவாகக் காண்பிக்கும் வகையில் தங்கத்தாள் சுத்தியலால் அடிக்கப்படுகிறது (உதாரணமாக தெய்வங்களின் முகக் கோடு, கைகள் மற்றும் கால்களின் வளைவுகள், மாலை, பீடம் போன்ற முக்கிய அலங்காரங்களை தெளிவாக காண்பிக்கும் விதத்தில் சுத்தியலால் அடிக்கப்படுகிறது). தாளை சுத்தியலால் அடித்த பிறகு, அதன் உண்மையான தோற்றம் மற்றும் அதன் மாற்றம் ஆகியவை தோராயமாக தீர்மானிக்கப்படுகின்றது. மிகச்சிறந்த நகை வடிவமைப்பாளரால் மட்டுமே இதுபோன்ற நகாசு வேலைகளை மிகவும் சிறப்பாகவும்,கூர்மையாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் செய்து கொடுக்க முடியும்.

எந்தக் கலையையும் போலவே,இந்தக் கலையிலும் வடிவமைக்கப்படும் முகமானது நகையின் ஆன்மாவை உருவாக்குகிறது. நகாசு வேலைப் பாட்டில் முக அம்சங்களை முடிந்தவரை நன்றாக உருவாக்க வேண்டும் என்பதில் நகை வடிவமைப்பாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். மிகவும் திறமைவாய்ந்த, அனுபவம் நிறைந்த நகை வடிவமைப்பாளர்களால் மட்டுமே இந்த வேலைப்பாட்டை மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று கூறப்படுகின்றது. மகிழ்ச்சியான, கூர்மையான மற்றும் அழகான டிசைன்களின் வெளித்தோற்றம் அருமையாக வருவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் முயற்சிதான் நகைகளின் இறுதி மதிப்பை உயர்த்துகின்றது.

நகாசு வேலை முடிவடைந்த பிறகு, அடுத்தபடியாக அதிகப்படியாக இருக்கும் தங்கத் தாள்கள் கத்தரித்து அகற்றப்படுகின்றன. இவை கூறுவதற்கு எளிதாக இருந்தாலும் அவற்றைக் கத்தரிக்கும் பொழுது கவனமாக இல்லையென்றால் சிறிய தவறும் அதிகமாக முயற்சி எடுத்து சிறப்பாக செய்த வேலையை கெடுத்து விடக் கூடியதாக அமைந்து விடும்.

நகாசு வேலை செய்யப்பட்ட பகுதியைத் தவிர அதிகப்படியாக இருக்கும் தங்கத் தாள்கள் கத்தரித்து எடுக்கப்பட்ட பிறகு வடிவமைக்கப்பட்ட டிசைன் பகுதியின் பின்புறத்தை மூட வேண்டும். இல்லையென்றால் மிகவும் மெல்லிய தங்க தாளில் வடிவமைக்கப்பட்ட டிசைன் வளைந்து நெளிந்து போவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.பின்புறம் மூடக்கூடிய தங்கத் தாளின் தடிமன் டிசைன் செய்யப்பட்ட அளவிற்கு ஏற்ப மாறுபடும்.டிசைனின் பின்புறம் மூடுதல் முடிந்ததும், கரடுமுரடான விளிம்புகள் மென்மையாக்கப்பட்டு,இறுதியாக நகைகள் சுத்தம் செய்யப்பட்டு மெருகூட்டப்படும். அதைத் தொடர்ந்து நகைகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்க ஒரு சிறப்பான பழங்கால பாலிஷ் உபயோகப் படுத்தப்படுகின்றது.

மிகவும் நுட்பமான இந்த நகாசு வேலைப்பாட்டில் வரும் டாலர்கள் மிகவும் சிறப்பாகக் கூறப்படுகின்றன.இரண்டு மயில்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருப்பது போல் செய்யப்பட்டிருக்கும் டாலரில் கெம்ப்,வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்து நடுவில் பெரிய சான்ட் ஸ்டோன் வைத்து டாலரின் கீழ்ப்புறத்தில் சிறிய தங்க குண்டுகள் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது அபாரமாக இருக்கிறது.

கிருஷ்ண பகவான் குழல் ஊத அவரின் இருபுறமும் கோபியர்கள் நடனமாட பின்புறம் அகன்று விரிந்திருக்கும் மரம் அதனைச் சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்டு இருப்பதுபோல் செய்யப்பட்டிருக்கும் மனோகரி நகாசு வேலைப்பாடுடன் உருவாக்கப்பட்டிருக்கும் டாலரை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். மாங்காய் டிசைனின் நடுவில் தாமரை மலரில் அமர்ந்தவாறு லக்ஷ்மி வீற்றிருக்க அதனைச் சுற்றிலும் வண்ணக் கற்களாலான மயில்கள் தோகைகளை தொங்க விட்டது போல் அமர்ந்திருப்பது இந்த வேலைப்பாட்டின் சிறப்பிற்கு மற்றொரு உதாரணம்.

அன்னப்பறவையின் மேல் அம்மன் அமர்ந்திருப்பது போன்றும், லக்ஷ்மியின் பல்வேறு அம்சங்களையும் நகாசு வேலைப் பாட்டில் மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். திரிசங்கு ஆபரணம், கஜலட்சுமி நெக்லஸ், தூரிகா நெக்லஸ், கண்டி நகாசு நெக்லஸ், ஊசி நெக்லஸ், ஆதிரா காசு நெக்லஸ், சிந்தூரி கண்டி நெக்லஸ் ,ஸ்வர்ணமுகி நெக்லஸ், லக்ஷ்மி மாங்காய் நெக்லஸ், சந்தியாபரணம் போன்றவை நகாசு வேலைப்பாடுடன் செய்யப்படும் நெக்லஸ்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

கருடன் தோற்றத்தில் வரும் கை விரல் மோதிரம் மற்றும் சாரி பின்களும் நகாசு வேலைப்பாட்டில் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நகாசு வேலைப்பாட்டில் வரும் ஒட்டியாணங்களுக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு டிசைன்கள் மிகவும் அற்புதமாக, தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

கை வளையல்கள் என்று எடுத்துக்கொண்டால் அன்னப்பறவை, மயில், லட்சுமி, விநாயகர் என அனைத்தையும் மிகவும் அழகாக நகாசு வேலைப் பாட்டில் தங்கத்தில் கற்கள் பதித்து வடிவமைத்திருக்கிறார்கள். இத்தகைய வேலைப்பாட்டுடன் வரக்கூடிய இந்த நகைகளுக்கு முன்னால் வேறு எந்த நகையும் போட்டி போட முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த நகைகளின் வேலைப்பாடு மிகவும் அம்சமாக இருக்கின்றது.

கெம்பு கற்களைப் பதித்து செய்யப்பட்டிருக்கும் ஜிமிக்கிகள், பச்சை, நீலம் என கற்களைப் பதித்து செய்யப்பட்டிருக்கும் அருமையான வேலைப்பாட்டுடன் கூடிய நகாசு ஜிமிக்கிகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். இவை மட்டுமல்லாது நகாசு வேலைப்பாட்டுடன் வரும் நெக்லஸ்கள், ஹாரங்கள்,வங்கிகள் மற்றும் தலை அலங்கார நகைகளையும் பார்ப்பவர்கள் கட்டாயம் வாங்காமல் இருக்க மாட்டார்கள்.

மிகவும் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையையும் இது நகாசு வேலை என்று இன்றளவும் மக்கள் குறிப்பிடுவதைப் பார்க்க முடியும்.

Tags:    

Similar News