அழகுக் குறிப்புகள்

பகுதிநேர தொழிலுக்கு ஏற்ற சாக்லேட் லிப்ஸ்டிக் எவ்வாறு தயாரிப்பது?

Published On 2023-10-04 08:25 GMT   |   Update On 2023-10-04 08:25 GMT
  • உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.
  • லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

உதடுகளுக்கு அழகு சேர்க்கும் 'லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ரசாயனம் கலக்காமல், முழுவதும் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இல்லத்தரசிகள் இத்தகைய லிப்ஸ்டிக் தயாரிப்பை பகுதிநேர தொழிலாக மேற்கொள்ள முடியும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்...

சாக்லெட் லிப்ஸ்டிக் தயாரிக்க தேவையான பொருட்கள்:

கோகோ பவுடர்- ஒரு ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்- 1/2 ஸ்பூன்

தேன்மெழுகு (துருவியது)- 1/4 ஸ்பூன்

லாவண்டர் எண்ணெய்- 2 துளிகள்

செய்முறை:

ஒரு சிறிய கிண்ணத்தில் கோகோ பவுடரை போட்டு, அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்மெழுகு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். கோகோ பவுடர் இருக்கும் கிண்ணத்தை அதன் உள்ளே வைக்க வேண்டும். தண்ணீரின் வெப்பத்தால் கிண்ணத்தில் இருக்கும் கலவை உருக ஆரம்பிக்கும். முழுவதுமாக உருகியதும் அதில் லாவண்டர் எண்ணெய்யை ஊற்றி கலக்க வேண்டும்.

இந்த கலவையை ஒரு லிப்ஸ்டிக் குப்பியில் மாற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். அரை மணிநேரம் கழித்து வெளியே எடுத்தால் அந்த கலவை லிப்ஸ்டிக் வடிவில் கடினமாகி இருக்கும். அதன் முனையை லேசாக கைவிரலால் ஷேப் செய்து விடுங்கள். இப்போது சாக்லெட் லிப்ஸ்டிக் தயார். இதனை ஆறு மாதம் வரை பயன்படுத்த முடியும்.

சந்தைப்படுத்தும் முறை:

சாக்லெட் லிப்ஸ்டிக்' தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளிலேயே கிடைக்கும். முதலில் சிறிய அளவில் தயாரித்து தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி அதன் நிறை குறைகளை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு உங்களுடைய தோழிகள் வட்டத்தில் கொடுத்து அவர்களுடைய பின்னூட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

அதன்பிறகு தன்னம்பிக்கையுடன் சந்தைப்படுத்துங்கள். உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும் அழகு நிலையங்கள், பொட்டீக், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் இலவச சாம்பிள் அளித்து உங்கள் பிராண்ட் பெயரை பிரபலப்படுத்தலாம். சமூகவலை தளங்களிலும் காட்சிப்படுத்தலாம்.

Tags:    

Similar News