அழகுக் குறிப்புகள்

வீட்டில் உள்ள பொருட்களே போதும்...நகத்தை சேதப்படுத்தாமல் நகப்பூச்சை நீக்கலாம்...

Published On 2023-01-27 06:21 GMT   |   Update On 2023-01-27 06:21 GMT
  • நகப்பூச்சை நீக்க நெயில் பாலிஷ் ரிமூவரை உபயோகிப்பார்கள்.
  • இது நகத்திலும், அதைச் சுற்றியுள்ள சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும்.

கைவிரல்களுக்கு மகுடமாக இருப்பது நகங்கள். அவற்றை பராமரிப்பதில் பெண்கள் தனி ஆர்வம் காட்டுவார்கள். அணியும் ஆடைகளுக்கு ஏற்ற நிறத்தில் நகங்களுக்கு சாயம் பூசுவார்கள். அதை நீக்குவதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் எனும் ரசாயனத்தை உபயோகிப்பார்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நகங்களிலும், அதைச் சுற்றியுள்ள சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும். இதைத் தவிர்த்து, எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நகங்களின் பளபளப்பை சேதப்படுத்தாமல் நகப்பூச்சை நீக்க முடியும். அதற்கான வழிகள் இங்கே...

எலுமிச்சை: எலுமிச்சையில் இருக்கும் அமில மூலக்கூறுகள் நகப்பூச்சுக்குள் ஊடுருவும் தன்மை கொண்டது. சில துளிகள் எலுமிச்சை சாறினை நகங்களில் விட்டு தேய்ப்பதன் மூலம் நகப்பூச்சை நீக்க முடியும். எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சோப் அல்லது வினிகர் கலந்தும் பயன்படுத்தலாம்.

பற்பசை: பற்பசையில் எத்தில் அசிடேட் எனும் ரசாயன கலவை உள்ளது. இது நெயில் பாலிஷ் ரிமூவர் தயாரிப்பிலும் பயன்படுகிறது. சிறிதளவு பற்பசையை எடுத்து நகங்களில் தடவி, ஐந்து நிமிடம் கழித்து மெதுவாக துடைத்து எடுப்பதன் மூலம் நகப்பூச்சை எளிதாக நீக்க முடியும்.

சானிடைசர்: சானிடைசர் தற்போது அனைவரது வீட்டிலும் பயன்படுத்துகிறோம். அதை நகப்பூச்சை நீக்குவதற்கும் உபயோகிக்கலாம். நகங்களின் மீது சிறிதளவு சானிடைசரை தெளித்து பஞ்சு கொண்டு துடைத்து எடுக்கலாம்.

ஹேர் ஸ்பிரே: நெயில் பாலிஷ் ரிமூவருக்கு பதிலாக ஹேர் ஸ்பிரேவையும் பயன்படுத்த முடியும். கிண்ணத்தில் சிறிதளவு ஹேர் ஸ்பிரேவை ஊற்றி அதில் பஞ்சினை நனைத்து, நகங்களை அழுத்தி துடைப்பதன் மூலம் நகப்பூச்சை நீக்கலாம். டியோடரண்டும் இதற்கு உதவும்.

வாசனை திரவியம்: டிஷ்யூ பேப்பர் அல்லது பஞ்சில் சிறிது வாசனை திரவியத்தை தெளித்து அதைக் கொண்டு நகங்களை அழுத்தித் துடைப்பதன் மூலமும் நகப்பூச்சை நீக்க முடியும்.

வெந்நீர் மற்றும் சோப்பு: வெந்நீரில் சிறிதளவு சோப்பைக் கலந்து அதில் நகங்களை சிறிதுநேரம் வைத்திருங்கள். பின்னர் நகவெட்டியில் உள்ள தேய்ப்பானை பயன்படுத்தி நகப்பூச்சை நீக்கலாம்.

நகங்களுக்கான பராமரிப்புகளை தினமும் செய்ய வேண்டுமா?

உங்கள் நகங்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் அவற்றை சுத்தம் செய்து மாய்ஸ்சுரைசர் பூச வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை டிரிம் செய்ய வேண்டும்.

நகங்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லி பூசலாமா?

நகங்கள் வறண்டு போவதைத் தடுக்க தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை நகங்களின் மீது பூசலாம்.

கர்ப்பிணி பெண்கள் நகப்பூச்சு பூசலாமா?

உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு உண்டாக்கும் ரசாயனக் கலவைகள் சேர்க்காத நகச்சாயங்களை பயன்படுத்தலாம்.

நகங்களை கடிப்பது அவற்றுக்கு சேதம் ஏற்படுத்துமா?

நகம் கடித்தல் சுகாதாரம் இல்லாத பழக்கமாகும். இது நடத்தைக் கோளாறாகக்கூட இருக்கலாம். நகக்கணுக்கள் பாதிக்கப்படும்போது நகத்தின் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம்.

Tags:    

Similar News