இயற்கை அழகு

பெண்கள் விரும்பும் ஆடை அணிகலன்களை அழகாய் அடுக்க க்ளோசட் (Closet)

Update: 2023-03-25 04:57 GMT
  • பட்ஜெட்டிற்கு ஏற்ப கிளோசட்டின் வடிவமைப்பை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
  • அவரவரின் தேவைக்கு ஏற்ப பொருட்களின் எண்ணிக்கையும் வகைகளும் மாறுபடும்.

இன்றைய உலகில் ஒரு வீட்டில் இருக்கும் எல்லோருமே, அதாவது கணவன் மனைவி குழந்தைகள் என்று அனைவருமே, வெளியில் செல்பவராகவே இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வோராக இருந்தால் அவர்களின், வீட்டில் அணியும் உடைகள் வெளியில் அணியும் உடைகள் மற்றும் குழந்தைகளின் வீட்டில் அணியும் உடைகள் பள்ளிக்கு அணிந்து செல்லும் சீருடைகள் என்று வகை வகையாக துணிகளை வைக்க வேண்டிய சூழல். அடுத்து திருமண விழாக்கள், வரவேற்புகள், கெட்-டு-கெதர் பார்ட்டி என்று விழாக்களுக்கு அணிந்து செல்ல வேண்டிய ஆடம்பர ஆடைகள் ஒரு பக்கம்.

இந்த ஆடைகளுக்கு ஏற்ற அணிகலன்களும் காலணிகளும் தலை அலங்காரங்களும் என்று அவற்றிற்கும் ஓர் பட்டியல் உண்டு. இப்படி எல்லோருக்கும் எல்லாவற்றிற்குமாக நாம் ஓர் இடத்தை தேர்வு செய்து பொருட்களை அடுக்கி வைக்க வேண்டி உள்ளது. அந்த வகையில் க்ளோசட் (Closet), வார்ட்ரோப் என்று அழைக்கப்படும் அலமாரிகள் இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் அத்தியாவசியமாக அமைக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது அப்படி நாம் வீட்டிற்கு அமைக்கும் இந்த வார்ட்ரோப் அல்லது க்ளோசெட்களை எப்படி அமைக்க வேண்டும் எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை கீழ் வருமாறு பார்ப்போம்.

இடத்தை மற்றும் அளவை தேர்வு செய்வது:

நம் வீட்டில் அமைக்க விரும்பும் க்ளோசட்டை எங்கெங்கு அமைக்க விரும்புகிறோம் என்பதையும் அதன் அளவு எவ்வளவு என்பதையும் முதலில் திட்டமிட்டு கொள்ள வேண்டும். க்ளோசெட்டின் அளவில் எவ்வளவு பொருட்களை நாம் வைக்க முடியும் என்பதையும் முடிவு செய்து கொள்ள வேண்டும். குடும்ப நபர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் தேவையையும் மனதில் கொண்டு இந்த அளவை நாம் தேர்வு செய்து கொள்வது நல்லது.

வாழ்க்கை முறை:

ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் வேறு வேறானவை. சிலர் வீடு, அலுவலகம், எப்போதாவது விழாக்களுக்கு சென்று வருவது என்று இருப்பார்கள் மற்றும் சிலர் வாரத்தில் இரு நாட்களாவது கேளிக்கைகளுக்கும் விழாக்களுக்கும் வெளியில் சென்று வருவதற்கும் நேரத்தை செலவு செய்பவர்களாக இருப்பார்கள். எனவே அவரவரின் தேவைக்கு ஏற்ப பொருட்களின் எண்ணிக்கையும் வகைகளும் மாறுபடும். எனவே உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை முறை எப்படி என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப உங்கள் பொருட்களை அடக்கக்கூடிய அளவிற்கான க்ளோசட்டை திட்டமிடுவது நல்லது.

களோசெட்டிற்கான செலவு :

கிளோசெட் அமைக்க நீங்கள் ஒதுக்க விரும்பும் தொகையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப பொருட்களினால் ஆன க்ளோசட்டை அமைப்பது நல்லது. மரத்தினால் ஆன க்ளோசெட் மரத்தின் விலை மற்றும் கார்பெண்டர் கூலி என்று சற்றே விலை கூடுதலாக ஆகலாம். இதுவே பிளாஸ்டிக் பாலியூரிதேன் போன்ற செயற்கை பொருட்களால் ஆன களோசெட் எனும் போது அது ஆயத்த மாடல்களில் கிடைக்கும். இவற்றின் விலையும் குறைவாக இருப்பதோடு இதை நிர்மானிப்பதற்கான செலவும் குறைவாகவே இருக்கும். எனவே அவரவரின் பட்ஜெட்டிற்கு ஏற்ப கிளோசட்டின் வடிவமைப்பை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

கிளோசெட் டிசைன்கள்:

நெடுக்காக மேலே அடுக்கக் கூடியதாக கூரையின் மட்டத்திற்கு களோசெட்டை அமைத்துக் கொண்டு ஏழடி உயரம் வரையில் துணிகளை மற்றும் அணிகலன்களை அடுக்கி வைக்க கூடிய தட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். மீதி உள்ள பகுதியை லாப்ட் போன்று எப்போதாவது எடுக்கக்கூடிய பொருட்களை அடுக்கி வைக்க உபயோகித்துக் கொள்ளலாம். இவ்வாறு கிளோசெட் அமைக்கும் பொழுது இடத்தின் அளவும் நமக்கு குறைவாகவே தேவைப்படும். கிளோசெட்டின் உள்ளே துணிகளை ஹேங்கர் மூலம் தொங்க விடுவது நிறைய இடத்தை மிச்சப்படுத்த உதவும். இதே போல் க்ளோசட்டின் உள்ளே காலணிகளை வைக்க வேண்டும் என்றால் அதற்கான பிரத்தியேக ராக்குகளை அமைத்து அதில் காலணிகளை அடுக்கிக் கொள்ளலாம்.

சிறு பொருட்களை அதாவது உள்ளாடைகள் ஷால்கள் போன்ற சிறிய ஆடைகளையும் குட்டி குட்டி ஆபரணங்களையும் சிறு சிறு பெட்டிகள் அல்லது கூடைகளில் போட்டு ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் பொழுது இடம் மிச்சப்படுவதோடு பொருட்களும் சிந்தாமல் சிதறாமல் அடுக்கடுக்காய் அழகாய் காட்சியளிக்கும். க்ளோஸ் செட்டிங் உள்ளே அமைக்கக்கூடிய சிறு அறைகள் மற்றும் பொருட்களை சேமிக்கும் இடங்களை கம்பிகள் கொண்ட ராக்குகளாக அமைக்கும் பொழுது அடைச்சலாக தெரியாமல் பார்க்க எளிமையாகவும் அதே நேரத்தில் துணிகளை மற்றும் பொருட்களை காற்றோட்டமாக சேமிக்கவும் உதவும். கிளோசெட்டின் உள்ளே மடக்கி நீட்டிக்கொள்ளக்கூடிய ஹேங்கர்களை உபயோகிப்பது நன்மை பயக்கும். இவற்றை தேவைக்கேற்ப அதிகப்படுத்திக் கொள்வதும் தேவையில்லாத நேரங்களில் மடக்கி வைத்துக் கொள்வதும் இடத்தை சேமிக்க உதவும்.

Similar News