அழகுக் குறிப்புகள்

நீளமான கூந்தலை பராமரிப்பதற்கான எளிய வழிமுறைகள்...

Published On 2022-09-23 07:24 GMT   |   Update On 2022-09-23 07:24 GMT
  • தலைக்கு குளித்தபின்பு தலைமுடிக்கு கண்டிஷனர் உபயோகிப்பது அவசியம்.
  • நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.

நீண்ட, பளபளப்பான கூந்தல் பல பெண்களின் விருப்பமாகும். இத்தகைய கூந்தலைக்கொண்ட பெண்கள், அதை முறையாக பராமரிப்பது முக்கியம். அதற்காக பயன்படுத்தும் ஷாம்பு முதல் சீப்பு வரை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.

* நீண்ட கூந்தலைக் கொண்டவர்கள் குறுகிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தும்போது முடி உடையக்கூடும். அதற்கு பதிலாக 'பிரஷ்' போன்ற அமைப்புடைய சீப்பை உபயோகித்து முடி உடையாமல், சேதம் அடையாமல் காக்கலாம்.

* இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக வாரி பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது. தலைமுடியை விரித்தவாறு தூங்கும்போது தலையணை மற்றும் மெத்தைகளில் முடி உராய்ந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

* நீளமான கூந்தலை சுத்தமாக பராமரிப்பது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறை ரசாயனங்கள் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இதன்மூலம் முடி உதிர்தல் மற்றும் சேதம் அடைதலைத் தடுக்கலாம்.

* நீளமான தலைமுடி மென்மையாக இருக்கும். அது கடினமான துணிகளுடன் உராயும் பொழுது சேதமடையும். இதைத் தவிர்க்க 'சாட்டின்' போன்ற மென்மையான துணியால் ஆன தலையணை உறையை உபயோகிப்பது நன்று.

* முடியின் வேர்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலையில் அவ்வப்போது எண்ணெய் பூசி மென்மையாக மசாஜ் செய்வது முக்கியம். குறைந்தது பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்ல பலன் தரும்.

* அனைத்து வகையான தலைமுடியிலும் வெடிப்பு ஏற்படுவது இயல்பானது. ஆகையால், அவ்வப்போது கூந்தலின் நுனிப்பகுதியை வெட்டி விட வேண்டும். இதனால் முடி சேதமடைவதைத் தடுக்க முடியும்.

* தலைக்கு குளித்தபின்பு தலைமுடிக்கு கண்டிஷனர் உபயோகிப்பது அவசியம். இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட கண்டிஷனர் பயன்படுத்துங்கள். கூந்தலை உலர வைப்பதற்கு டிரையர் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்.

* நீளமான முடியை சிக்கலின்றி வைத்திருப்பது பராமரிப்பு முறைகளில் முதன்மையானது. சிக்கெடுக்கும்போது முனைகளில் இருந்து தொடங்கி, படிப்படியாகவும், மெதுவாகவும் மேல்நோக்கிச் செல்லுங்கள். ஈரமான கூந்தலை சீப்பு கொண்டு வாரி சிக்கெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர், கைகளால் மெதுவாக நீவிவிட்டபடி சிக்கல்களை பிரிப்பது நல்லது. மேலும், தலைமுடியில் உள்ள ஈரத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற 'மைக்ரோ பைபர்' டவல்களை உபயோகிக்கலாம்.

Tags:    

Similar News