அழகுக் குறிப்புகள்

நீல ஒளி சருமத்தையும் பாதிக்கும்

Published On 2022-09-16 07:09 GMT   |   Update On 2022-09-16 07:09 GMT
  • விரைவில் வயதான தோற்றத்தை எதிர்கொள்ள நேரிடும்.
  • கொலோஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களை இழக்க நேரிடும்.

நீல ஒளியின் பயன்பாட்டை குறைப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

* மின்னணு சாதனங்களின் திரையை அதிக நேரம் பார்ப்பது கண்கள், சருமத்தை பாதிப்பதோடு தூக்க சுழற்சிக்கும் இடையூறை உண்டாக்கும். அதனால் திரையில் செலவிடும் நேரத்தை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும்.

* மின்னணு சாதனங்களை படுக்கை அறைக்குள் கொண்டு செல்லும் வழக்கத்தை தவிருங்கள். தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக செல்போன், லேப்டாப் பார்ப்பதை தவிருங்கள்.

* இரவில் செல்போனை உபயோகப்படுத்துவதாக இருந்தால் 'நைட் மோட்' எனப்படும் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அது நீல ஒளியின் வெளிப்பாட்டை குறைக்கும்.

* சருமத்திற்கு சன்ஸ்கிரீன் உபயோகிப்பதும் நல்லது. அது நீல ஒளி உள்பட தீங்கு விளைவிக்கும் அனைத்து கதிர்வீச்சுகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்கும்.

செல்போன், கம்ப்யூட்டர், டி.வி., லேப்டாப் போன்ற திரையில் இருந்து வெளிப்படும் 'புளூ லைட்' எனப்படும் நீல ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவை சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்கிறது, புதிய ஆராய்ச்சி. அந்த நீல ஒளி சரும நிறமிகளை பாதிப்பதோடு விரைவில் வயதான தோற்றத்துக்கு வழிவகுத்துவிடும் என்றும் எச்சரிக்கிறது.

தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதற்கு ஏற்ப, மின்னணு சாதனங்கள் வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டன. காலையில் வாட்ஸ் ஆப்பில் தகவல் பகிர்வது தொடங்கி இரவில் தூங்க செல்வதற்கு முன்பு வரை சமூகவலைத்தளங்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டன. கொரோனா பரவலால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளும், ஆன்லைன் கல்வி முறையும் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்திவிட்டன.

இந்த சாதனங்கள் நீல ஒளியை உமிழ்வதால் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் இருந்து வெளிப்படும் நீல ஒளி சருமத்தில் ஆழமாக ஊடுருவி பாதிப்பை அதிகப்படுத்திவிடக்கூடும். மேலும் கொலோஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களை இழக்க நேரிடும். அதன் காரணமாக முன்கூட்டியே வயதாகும் தோற்றத்தை எதிர்கொள்ள நேரிடும்.

கொலோஜன் என்பது மனித உடலில் அதிகமாக காணப்படும் புரதமாகும். அதுபோல் எலாஸ்டின் என்பது தசைகள் சுருங்கி விரிவடையும் பகுதிகளில் காணப்படும் புரதமாகும். இந்த இரண்டு புரதங்களின் உற்பத்தியும், செயல்பாடும் தடைபடும்போது விரைவில் வயதான தோற்றத்தை எதிர்கொள்ள நேரிடும்.

நீல ஒளி சரும நிறத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும். இரவில் நீல ஒளியை வெளிப்படுத்தும் சாதனங்களை பயன்படுத்துவது உடலின் உயிர் கடிகார செயல்பாட்டை சீர்குலைத்து தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்திவிடும். ஒருசில சரும பிரச்சினைகளை இரவில் இயற்கையாகவே சரி செய்யும் செயல்முறை உடலில் நடைபெறும். அந்த செயல்முறையும் பாதிப்புக்குள்ளாகும். கண்களுக்கு அருகில் கருவளையம் தோன்றும். அது வயதான தோற்றத்துக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக அமையும்.

Tags:    

Similar News