அழகுக் குறிப்புகள்
கோடைக்கு ஏற்ற உடை: மாஸ்க்கும் உஷ்ணமும்..

கோடைக்கு ஏற்ற உடை: மாஸ்க்கும் உஷ்ணமும்..

Published On 2022-05-11 08:30 GMT   |   Update On 2022-05-11 08:30 GMT
மாஸ்க் எதுவாக இருந்தாலும் வியர்வையும், உஷ்ணமும் அதிகமானால் சரும பிரச்சினைகள் தோன்றும். தளர்வான, இளம் நிறத்திலான ஆடைகள் கோடைக்கு ஏற்றது.
கோடைக்கு ஏற்ற உடை எது என்றுதான் முன்பெல்லாம் யோசிப்போம். இப்போது கோடைக்கு ஏற்ற மாஸ்க் எது என்று யோசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காட்டன் மாஸ்க் மற்றும் என்- 95 மாஸ்க் போன்றவையும் கோடைக்கு ஏற்றவைதான். ஏர்வால்வ் கொண்ட மாஸ்க்கும் அணியலாம். மாஸ்க் எதுவாக இருந்தாலும் வியர்வையும், உஷ்ணமும் அதிகமானால் சரும பிரச்சினைகள் தோன்றும்.

அதிக நேரம் மாஸ்க் அணிந்த நிலையில் இருப்பதால் முகத்தில் எண்ணெய்த்தன்மை அதிகரித்து, வியர்வை வடிந்து, தூசு படியும் நிலை ஏற்படும். இதனால் முகப்பரு தோன்றும். மாஸ்க் ஓரங்கள் சருமத்தோடு பதியும் பாகங்களில் சிவந்துபோகுதல், சொறி போன்றவையும் ஏற்படலாம். அதனால் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

கோடைகாலத்தில் உங்களோடு எப்போதும் இரண்டு மாஸ்க்குகளை வைத்திருங்கள். ஒன்றில் அதிகமாக வியர்வை பதிந்துவிட்டால், அடுத்ததை பயன்படுத்தவேண்டும். முகத்தில் சன்ஸ்கிரீன் அல்லது மாய்ஸ்சரைசர் பூசுவது நல்லது. அது சருமத்திற்கும்- மாஸ்க்குக்கும் இடையே ஒரு பாதுகாப்பு வேலி போன்று செயல்படும். மாஸ்க் அதிக நேரம் பயன்படுத்தும் சூழ்நிலை இருந்தால், இடைஇடையே முகத்தை கழுவிக்கொள்வது நல்லது.

தளர்வான, இளம் நிறத்திலான ஆடைகள் கோடைக்கு ஏற்றது. உள்ளாடைகள் இறுக்கிப்பிடிக்கும் பகுதியில் வியர்வை படிந்து பூஞ்சை ஏற்படலாம். அதிலே தொடர்ந்து வியர்வை உருவாகும்போது சொறி தோன்றும். உள்ளாடை, மேலாடை எதையும் இறுகிய நிலையில் அணியவேண்டாம். இரவில் உள்ளாடைகளை அகற்றிவிடலாம். சொறி ஏற்படும் இடத்தில் ஆன்டிபங்கல் பவுடர் போட்டுக்கொள்ளுங்கள். சரும பிரச்சினை அதிகரித்தால், சரும நோய் நிபுணரை சந்தித்து தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.

ஷூ அணியும் வழக்கம் கொண்டவர்களுக்கு கோடைகாலத்தில் விரல்களுக்கு இடையில் சொறி ஏற்படக்கூடும். வியர்வை தங்குவதால் பங்கஸ் உருவாகுவதே இதற்கு காரணம். ஆன்டி பங்கல் பவுடர், கிரீம் போன்றவைகளை இதற்கு பயன்படுத்தலாம். கோடைகாலத்தில் காட்டன் சாக்ஸ் அணிவது சிறந்தது.

அதிக அளவில் வியர்வை உருவாகுவதால் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு முடி உதிர்வு தோன்றும். வியர்வையில் பூஞ்சை வளர்ந்து, பொடுகு தோன்றுவதே அதற்கு காரணம். காட்டன் துணியால் தலையை மூடிக்கொண்டு அதற்கு மேல் ஹெல்மெட் அணிந்துகொள்வது நல்லது. ஹெல்மெட்டை கழற்றியதும் தலையை நன்றாக துவட்டிவிட்டு காற்றுபடும்படி செய்யவேண்டும். தலையில் அதிக வியர்வை படிவதால், வாரத்தில் இரண்டு நாட்கள் பொருத்தமான ஷாம்புவை பயன்படுத்தி கூந்தலை கழுவி சுத்தம் செய்யலாம். கோடை காலத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம்.
Tags:    

Similar News