அழகுக் குறிப்புகள்
வேட்டி அணிவோம்... பாரம்பரியம் காப்போம்...

இன்று சர்வதேச வேட்டி தினம்: வேட்டி அணிவோம்... பாரம்பரியம் காப்போம்...

Published On 2022-01-06 02:25 GMT   |   Update On 2022-01-06 09:11 GMT
இன்று ஒருநாள் மட்டும் வேட்டி அணிந்து ‘பவுசு’ காட்டிவிட்டு அதோடு நின்றுவிடாமல், அடிக்கடி வேட்டி கட்டுவதுதான் ‘மவுசு’ என்பதை உணர வேண்டும்.
இந்திய நாட்டின் பண்பாட்டு உடை என்றாலே அது வேட்டி-சேலை தான். என்னதான் புதுவிதமான உடைகள் அணிந்தாலும், வேட்டி கட்டி நடக்கும்போது ஆண்களிடையே தோன்றும் கம்பீரமே தனி. சட்டை அணியும் பழக்கம் வரும் முன்பாகவே நமது முன்னோர் வேட்டி அணிந்து வலம் வந்துள்ளனர். எல்லாவற்றையும் விட தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடை என்றாலே அது வேட்டி தான்.

ஆனால் நாகரிக வளர்ச்சியாலும், தொழில்நுட்ப புரட்சியாலும் வேட்டி கட்டும் வழக்கம் மங்கி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு காலத்தில் ‘பேண்ட்’ அணிந்தாலே ‘என்னப்பா... குழாய் மாட்டிகிட்டு வந்துருக்க... டவுனுக்கு போறியா’ என்று கேட்ட காலம் போய், இன்றைய சூழலில் வேட்டி கட்டி நடப்பவரை, ‘என்ன சார்... ஏதாவது பங்ஷனுக்கு போறீங்களா?’ என்று வித்தியாசமாக கேட்கும் நிலை உருவாகிவிட்டது. பண்டிகை காலங்களிலும், திருவிழாக்களிலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலுமே பார்ப்போர் கண்களுக்காக பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டியில் வலம்வர வேண்டிய நிலை இருக்கிறது.

ஒருகாலத்தில் திருமணம் என்றாலே பட்டு வேட்டி-சட்டையில் மணமகன் பட்டையை கிளப்புவார். ஆனால் இன்று கோட்டு, குர்தா என விதவிதமான உடைகளை தேர்வு செய்கிறார்கள். அதேபோல பொங்கல் பண்டிகைகளிலும் வேட்டி-சேலை அணிந்து பொங்கலிட்ட காலம் போய், பொங்கலுக்கு எந்த கடையில் புதிய டிசைன் ஆடைகள் இருக்கிறது? என்று நமது கண்கள் தேட தொடங்கிவிட்டன. கடல் தாண்டியும் பரவியிருந்த வேட்டி அணியும் கலாசாரம் மேற்கத்திய உடை கலாசாரம் மேலோங்கியதின் விளைவாக மங்க தொடங்கியது. தமிழகத்திலும் வேட்டிக்கு மவுசு குறைந்துபோய்விட்டது.ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதும் வேட்டியில்தான். இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை நமது வாழ்க்கையுடன் இரண்டற கலந்துவிட்ட வேட்டி, இன்றைக்கு அரசியல்வாதிகளின் அடையாளமாக மட்டுமே இருந்து வருகிறது. விழாக்காலங்களில் மட்டும் அந்த பழக்கத்தை இரவல் வாங்குவது போல நாமும் மாறிவிட்டோம்.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேட்டி தினத்தை ‘யுனெஸ்கோ’ அறிவித்தது. அன்று தொடங்கி ஆண்டுதோறும் ஜனவரி 6-ந் தேதி வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி கட்டுவதை ஊக்குவிக்க பல வேட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் புதுப்புது யுக்தியை கையாண்டு வருகின்றன. வேட்டி கட்ட தெரியாத இளைஞர்களுக்கு ஒட்டிக்கொள்ளும் வகையில் வேட்டி, செல்போன், பணம் வைக்க பாக்கெட் கொண்ட வேட்டி, சட்டை மற்றும் டி-சர்ட் நிறத்தில் ‘பார்டர்’ வைத்த வேட்டி என எத்தனையோ வகைகளில் வேட்டியை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனாலும் வேட்டிக்கு எதிர்பார்த்த ‘மவுசு’ கிடைக்கவில்லை.

இந்தநிலையில் சர்வதேச வேட்டி தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பணிபுரியும் அலுவலகங்களில், வீடுகளில், உறவினர் இல்லங்களில் இளம் தலைமுறையினர் கலாசாரத்தை காக்கிறோம் என்ற பெயரில் கலர் கலராக வேட்டி கட்டி வலம் வர போகிறார்கள். ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’, ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைதள பக்கங்கள், வேட்டி அணிந்த இளம் தலைமுறையினரின் புகைப்படங்களை இன்றைய தினம் சுமக்க முடியாமல் சுமக்க போகிறது. ஆனால் இது வழக்கம்போல ஒருநாள் கூத்தாக மட்டும் ஆகிவிடக்கூடாது.

தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டிக்கு பின்னால் லட்சக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரம் ஒளிந்துள்ளது. ஏற்கனவே வறுமையின் பிடியில் கிடக்கும் அவர்கள், தற்போது கொரோனா பேரிடராலும் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையின் விளிம்புக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

மானம் காத்த வேட்டியை தந்த மகத்தான நெசவாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுத்து உதவ வேண்டியது நம் அனைவரது கடமையாகும். எனவே இன்று ஒருநாள் மட்டும் வேட்டி அணிந்து ‘பவுசு’ காட்டிவிட்டு அதோடு நின்றுவிடாமல், அடிக்கடி வேட்டி கட்டுவதுதான் ‘மவுசு’ என்பதை உணர வேண்டும். புதிய ஆடைகள் வாங்கும்போது தவறாமல் ஒரு வேட்டியாவது வாங்கிட வேண்டும். வாரத்தில் ஒருநாள் அல்லது 2 நாள் வேட்டி அணிந்து பணியாற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். இப்படி நாம் வேட்டிக்கு அளிக்கும் முக்கியத்துவம் நமது பாரம்பரியத்தை மட்டுமல்ல, நெசவாளர்களின் வாழ்க்கைத்தரத்தையும் சத்தமில்லாமல் உயர்த்தும். அதனை இன்றைய தினத்தின் முக்கியமான உறுதிமொழியாக எடுத்து கொள்வோம்.

வேட்டி அணிவோம், பாரம்பரியம் காப்போம். அத்துடன் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் மீட்போம்.
Tags:    

Similar News