அழகுக் குறிப்புகள்
உயரமாக தெரிய பெண்கள் ஆடை அணிவதில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

உயரமாக தெரிய பெண்கள் ஆடை அணிவதில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

Published On 2021-12-18 08:23 GMT   |   Update On 2021-12-18 08:23 GMT
உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், ஆடைகள் அணியும் விதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தங்களை உயரமானவர்களாகக் காட்ட முடியும். அதற்கான சில டிப்ஸ் இதோ...
உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், ஆடைகள் அணியும் விதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தங்களை உயரமானவர்களாகக் காட்ட முடியும். அதற்கான சில டிப்ஸ் இதோ...

1. கழுத்து, கை அளவு:

ஆங்கில எழுத்துகள் ‘வி’ மற்றும் ‘யு’ வடிவ கழுத்துப்பகுதி உள்ள உடைகள், உங்களை உயரமானவர்களாகக் காட்டும். அகலமான கழுத்து கொண்ட ஆடைகள் அணிவதைத் தவிர்க்கலாம். கழுத்துப் பகுதியில் எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட ஆடைகளை அணியலாம். முக்கால் கை அல்லது முழுக்கை அளவு ஆடைகள் உயரத்தை அதிகரித்துக் காட்டக்கூடியவை.

2. துணி வகை:

கனமான மற்றும் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த துணி வகைகளை தவிர்த்து, மெலிதான துணி வகைகளை அணியலாம். வலை துணி, ரேயான் போன்ற எடை குறைந்த துணி வகைகள் அணிவது நல்லது.

3. டிசைன்:

செங்குத்தான கோடுகள் கொண்ட ஆடைகளையோ அல்லது சிறு பூ வேலைப்பாடு நிறைந்த ஆடைகளையோ அணியலாம். கிடைமட்ட கோடுகள் மற்றும் பெரிய பூ வேலைப்பாடு கொண்ட ஆடைகளை அணியும்போது, அவை மேலும் உயரத்தைக் குறைத்துக் காட்டும். அனார்கலி வகை ஆடைகளை அணியும்போது, இடுப்புக்கு மேற்பகுதியை தனித்துக் காட்டும்படியான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு துப்பட்டாவை ஒரு பக்கமாக அணியலாம்.

4. நிறம்:

உங்கள் நிறத்துக்கு ஏற்றாற்போல ஆடை அணிவது நல்லது. குர்தி அணியும்போது, குர்தி மற்றும் கால்சட்டை ஒரே நிறத்திலும், துப்பட்டா வேறொரு நிறத்திலும் இருந்தால் நீங்கள் உயரமாகத் தெரிவீர்கள்.

5. கால்சட்டை அளவு:

எந்த ஒரு ஆடைக்கும் கால்சட்டை மெலிதாக இருப்பது அவசியம். உயரம் குறைந்தவர்கள் ‘பலாசோ’ போன்ற ஆடைகளைத் தவிர்க்கலாம். முழு கால்சட்டைக்குப் பதிலாக, சிறிது உயரம் குறைந்த உடைகளை அணியலாம்.

6. அதிக வேலைப்பாடு வேண்டாம்:

ஆடைகளில் அதிக வேலைப்பாடுகள் கொண்டதைத் தவிர்ப்பது நல்லது. சிறு சிறு வேலைப்பாடுகள் கொண்ட ஆடை வகைகள் உங்களை உயரமாகவும், அழகாகவும் காட்டும்.

7. சேலை அணிபவர் கவனத்திற்கு:

பெரிய பார்டர் கொண்ட சேலைகள் அணிவதைத் தவிர்க்கவும். மேலும் காட்டன் புடவைகளைத் தவிர்த்து, மெல்லிய துணி வகைகளை உடுத்தலாம். ரவிக்கையும் சேலையின் நிறத்திலேயே அணிந்தால் சற்றே உயரமாகத் தெரிவீர்கள்.

8. ஜீன்ஸ் அணிபவர் கவனத்திற்கு:

ஜீன்ஸ் அணிபவர்கள், மேல் சட்டையை உள்ளே சொருகி கொள்வதன் மூலம் உயரமாக தெரியக்கூடும்.

9. காலணிகள்:

பெரும்பாலும் உயரம் குறைந்தவர்கள் விரும்புவது ‘ஹை ஹீல்ஸ்’ தான். அவை ஏற்படுத்தும் பக்க விளைவுகள் அதிகம். எனவே கூடுமானவரை ‘ஹை ஹீல்ஸை’ தவிர்க்கலாம். ஆடையின் நிறத்திற்கு ஏற்றாற்போல, சற்று உயரம் குறைந்த ஹீல்ஸ் அணியும்போது நீங்கள் உயரமாகவும் கம்பீரமாகவும் தெரிவீர்கள்.
Tags:    

Similar News