லைஃப்ஸ்டைல்
கோடை காலத்தில் வியர்வை பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?

கோடை காலத்தில் வியர்வை பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?

Published On 2021-04-16 06:27 GMT   |   Update On 2021-04-16 06:27 GMT
கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வை சுரப்பிகள் துரிதமாக செயல்பட்டு தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும்.
வெயிலில் சில நிமிடங்கள் பயணம் செய்தாலே சிலரது ஆடை வியர்வை மழையில் நனைந்துவிடும். வெயிலின் உக்கிரம் அதிகமாகும்போது வியர்வை வெளியேறுவதும் அதிகமாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வியர்வை பாதிப்புக்கு ஆளாகுவார்கள். உடலின் வெப்பநிலையை சீராக பராமரிப்பதில் வியர்வை சுரப்பிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வை சுரப்பிகள் துரிதமாக செயல்பட்டு தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். அப்போது வியர்வை சுரப்பிகளின் சரும துளைகள் மீது தூசு, அழுக்குகள் படிந்திருந்தால் வியர்க்குரு உண்டாகும். சிறுசிறு கொப்பங்களாகவும், சிவப்பு நிறத்தில் திட்டுக்களாகவும் வெளிப்படும். அதனை கவனிக்காமல் விட்டு விட்டால் சருமம் எரிச்சலுக்குள்ளாகும். படை, தேமல் போன்ற தோல் வியாதிகளும் தோன்றக்கூடும்.

வியர்க்குரு பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு ஆடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். காற்று சருமத்திற்குள் ஈடுருவும் விதமான ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும். பருத்தி, கைத்தறி போன்ற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியலாம். வெயிலில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினால் உடனே குளித்து விடுவது நல்லது. அதன் மூலம் உடலில் படிந்திருக்கும் வியர்வையை நீக்கிவிடலாம்.

சருமத்தை ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக்கொள்வதும் நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கோடை கால பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட்டு வரலாம். அவ்வப்போது பழச்சாறும் பருகிவரலாம். தூங்கும் அறை காற்றோட்டம் கொண்டதாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் அவசியமானது. அது உடலில் வியர்வை படியாமல் தூங்குவதற்கு வழிவகுக்கும்.

வியர்வை பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தால் கற்றாழையின் சதைப்பகுதியை உடலில் தேய்த்து குளித்து வரலாம். சந்தனத்தை உடல் முழுவதும் தேய்த்தும் குளிக்கலாம். அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்துக்கொள்ளலாம். அது கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பை போக்க உதவும். குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலில் திரிவதை தவிர்ப்பது நல்லது.
Tags:    

Similar News