பெண்கள் உலகம்
கொரோனா காரணமாக மாணவர்களின் படிப்பில் பின்னடைவு ஏற்படும்

கொரோனா காரணமாக மாணவர்களின் படிப்பில் பின்னடைவு ஏற்படும்

Published On 2020-06-30 08:52 IST   |   Update On 2020-06-30 08:52:00 IST
கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி :

கொரோனா வைரஸ் காரணமாக, உலக அளவில் கல்வித்துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஐ.நா. சபையின் கல்வி அமைப்பான ‘யுனெஸ்கோ‘ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 154 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாணவிகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரிக்கும்.

பள்ளிகள் மூடி இருப்பதால், கல்வி ஆண்டு, ஆசிரியர்கள் கற்பித்தல் திறன், பள்ளி உரிமம், தேர்வு என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை திறந்தாலும், ஆசிரியர்கள், தொற்று அபாயம் குறித்து கவலைப்படுவார்கள். மிகக்குறைவான பள்ளிகளில்தான் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற முடியும். மொத்தத்தில், மாணவர்களின் படிப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது.

ஆன்லைன் வகுப்பு மூலம் கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அந்த வசதி கிடைக்காது. இதனால், ஆன்லைன் வகுப்பு நடத்துவது, சமூக-பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும். ஆகவே, அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய சிறப்பான கல்வி முறையை உருவாக்குவதில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News