பெண்கள் உலகம்

சூப்பரான மட்டன் உருளைக்கிழங்கு சால்னா

Published On 2016-11-10 10:42 IST   |   Update On 2016-11-10 10:43:00 IST
மட்டன் உருளைக்கிழங்கு சால்னா சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், பரோட்டா அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

மட்டன் - 1 கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி -  1/2 கிலோ
பச்சை மிளகாய் - 8
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
த‌னியா தூள் - 1/2  தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் - 1/4 தேக்க‌ர‌ண்டி
த‌யிர் - 1 கப்
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்க‌ர‌ண்டி
கொத்தம‌ல்லி த‌ழை - அரை கட்டு
புதினா - கால் கட்டு
தேங்காய் - கால் கப்
முந்திரி - 25 கிராம்
க‌ச‌க‌சா  - 2 தேக்க‌ர‌ண்டி
எலுமிச்சை ப‌ழ‌ம் -  1 (சிறியது)
ப‌ட்டை - இர‌ண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3

செய்முறை :

* ம‌ட்ட‌னை நன்றாக சுத்தம் செய்து 5 அல்லது 6 முறை த‌ண்ணீரில் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக‌ட்ட‌வும்.

* வெங்க‌யாம், த‌க்காளியை பொடியாக நறுக்கி வைக்க‌வும்.

* கொத்தம‌ல்லி, புதினாவை ஆய்ந்து, க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்கவும்.

* முந்திரி, தேங்காய், க‌ச‌கசா சேர்த்து மையாக‌ அரைத்து வைக்க‌வும்.

* உருளைக்கிழ‌ங்கை தோலை உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள‌வும்.

* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் அதனுடன் வெங்காயத்தை போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கவும்.

* அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு, இஞ்சி பூண்டின் வாசனை அடங்கி நிறம் மாறும் வரை சிம்மில் வைக்கவும்.

* கொத்தமல்லி, புதினாவில் முக்கால் பாகத்தை சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும்.

* பிற‌கு மிள‌காய் தூள், த‌னியாதூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ம‌சாலா ந‌ன்கு தக்காளியோடு சேரும் வ‌ரை கிள‌றி அதில் ம‌ட்ட‌ன் மற்றும் த‌யிர் சேர்க்க‌வும். தீயை குறைத்து வைத்து கிளறி எல்லா ம‌சாலா வ‌கைக‌ளும் க‌றியில் சேரும்படி ஐந்து நிமிட‌ம் விடவும்.

* கறி மசாலா கலவையில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.

* நறுக்கி வைத்திருக்கும்‌ உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு முறை கிள‌றி இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து குக்கரை மூடி தீயை மித‌மாக‌ வைத்து 8 விசில் விட்டு இறக்க‌வும்.

* குக்க‌ர் ஆவி அட‌ங்கிய‌தும் திற‌ந்து வெந்த‌ சால்னாவை வேறு ஒரு வாய‌க‌ன்ற‌ பாத்திரத்திற்கு மாற்றி அரைத்து வைத்துள்ள‌ தேங்காய் முந்திரி க‌ல‌வையை ஊற்ற‌வும். ந‌ன்கு‌ தேங்காய் வாசனை அட‌ங்கும் வ‌ரை கொதிக்க‌ விட்டு கடைசியாக மீதி உள்ள‌ கொத்தம‌ல்லி, புதினாவை சேர்த்து இற‌க்க‌வும்.

* சுவையான‌ மட்டன் உருளைக்கிழங்கு சால்னா ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News