சமையல்

எலும்புகளுக்கு வலிமை தரும் ராகி சிமிலி

Published On 2022-06-22 05:46 GMT   |   Update On 2022-06-22 05:46 GMT
  • கேழ்வரகில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன.
  • கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.

ராகி எனும் கேழ்வரகு தென்னிந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன. கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். சரும ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, முடி வளர்ச்சி போன்றவற்றுக்கும் கேழ்வரகில் உள்ள சத்துக்கள் பயன்படுகின்றன. கேழ்வரகைக் கொண்டு பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் 'ராகி சிமிலி' செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 200 கிராம்

வெல்லம் - 100 கிராம்

வேர்க்கடலை - 100 கிராம்

எள் - 4 தேக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

நெய் - தேவையான அளவு

உப்பு - ¼ தேக்கரண்டி

செய்முறை:

பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, நெய் ஊற்றி சப்பாத்திகளாக சுட்டுக்கொள்ளவும்.

பின்னர் வாணலியில் எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.

வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி பொடித்துக்கொள்ளவும்.

கேழ்வரகு சப்பாத்தி ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் வெல்லம் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசையவும். கலவை கையில் ஒட்டும் பதத்தில் வரும்போது உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.

இப்பொழுது சுவையான மற்றும் சத்து மிகுந்த 'கேழ்வரகு சிமிலி' தயார்.

Tags:    

Similar News