சமையல்

இனி வீட்டிலேயே செய்யலாம் கேசர் பாதாம், பிஸ்தா குல்பி

Published On 2024-03-27 09:29 GMT   |   Update On 2024-03-27 09:29 GMT
  • ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது.
  • வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம்.

ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. மனிதர்கள் மட்டுமல்ல இதர உயிரினங்களும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்போம். வீட்டில் ஐஸ்கிரீமை தயார் செய்தால் அது பிராண்டட் நிறுவனங்கள் தயாரிக்கும் சுவையில் இருக்காது. ஆனால் குல்ஃபி அப்படி அல்ல. வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம். விடுமுறை நாட்களில் இந்த குல்ஃபியை தயார் செய்து உங்கள் மனதிற்கு பிடித்தமான நபருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாதாம், பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை எளிமையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பிரெட்- 3

பால் - ஒரு லிட்டர்

பாதாம், பிஸ்தா, முந்திரி- தலா 2 ஸ்பூன்

குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

சர்க்கரை- 100 கிராம்

மில்க்மெய்டு- 50 கிராம்

ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை எல்லாம் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் காய்ந்தவுடன் அதில் சர்க்கரை, பொடித்த பிரெட் மற்றும் பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி கலவை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.

பின்னர் குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள் மற்றும் மில்க்மெய்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறினால் அந்த கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு குல்பி மோல்டு அல்லது சிறிய கிண்ணங்கள் அல்லது, டம்ளர் ஆகியவற்றை ஊற்றி அதனை ஒரு அலுமினிய பேப்பர் கொண்டு மூடி ஃப்ரிட்ஜில் ஃபிரீசரில் 6 மணிநேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு எடுத்து பரிமாறலாம்.

Tags:    

Similar News