லைஃப்ஸ்டைல்
இஞ்சி பூண்டு லேகியம்

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பூண்டு லேகியம்

Published On 2020-11-11 05:23 GMT   |   Update On 2020-11-11 05:23 GMT
வாய்வுத்தொல்லை குணமாக, குடல் புண் உடனே குணமாக தினமும் இந்த லேகியத்தை 1 டீஸ்பூன் சாப்பிடலாம். இன்று இந்த லேகியம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உரித்த பூண்டு - 200 கிராம்
துருவிய தேங்காய் - ஒன்று (அரைத்து பால் எடுத்து வைக்கவும்)
கருப்பட்டி - கால் கிலோ
இஞ்சி - 75 கிராம்
கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
நல்லெண்ணெய் - 200 மில்லி
பசு நெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைத் தோல் நீக்கி நன்கு கழுவி, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி, அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு தெளிந்த இஞ்சிச் சாற்றை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

கருப்பட்டியைப் பொடித்துக்கொள்ளவும். பிறகு கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியைச் சேர்த்து அடுப்பில் வைத்து கரையும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும்.

 பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து உரித்த பூண்டு, பெருங்காயம், தெளிந்த இஞ்சிச் சாறு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து ஆற விட்டு, நன்றாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த விழுதுடன் தேங்காய்ப்பால், கருப்பட்டி பாகு சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டவும்.

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு பூண்டு-கருப்பட்டிக் கலவையைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு சுருள கிளறவும்.

இத்துடன் பசு நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கி ஆறவிட்டு, சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒன்றரை மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News