லைஃப்ஸ்டைல்
வெண்டைக்காய் சூப்

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கான சூப்

Published On 2020-10-10 05:09 GMT   |   Update On 2020-10-10 05:09 GMT
வெண்டைக்காயில் கலோரி குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதனால் கொழுப்பை குறைக்க விரும்புகிறவர்களும், வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்

பிஞ்சு வெண்டைக்காய் - 7,
உப்பு - சிறிது,
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்.

அலங்கரிக்க

கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் - சிறிது,

செய்முறை

கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கிய பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

சூப்பரான வெண்டைக்காய் சூப் ரெடி.

முதுகுவலி, மூட்டுவலி, வாத நோய், உடல் சோர்வுகளுக்கு நிவாரணமாக அமைவது வெண்டைக்காய் சூப். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இது ஏற்றது. வெண்டைக்காயில் கொழுப்பு இல்லை. பெருமளவு நார்ச்சத்து இருக்கிறது. அதனால் வயதானவர்களும் இந்த சூப்பை பருகலாம்.

உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை வெண்டைக்காய் அதிகரிக்கிறது. வயிற்றுப் புண்ணால் அவதிப்படுகிறவர்கள் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட வேண்டும். கரைந்து போகாத நார்ச்சத்து வெண்டைக்காயில் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதில் இருக்கும் பீட்டாகரோட்டின் சத்தால் கண் பார்வைத் திறனும் மேம்படும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News