பொது மருத்துவம்

அரிசி உணவை ஏன் தவிர்க்கக்கூடாது?

Published On 2023-11-21 10:00 IST   |   Update On 2023-11-21 10:00:00 IST
  • அரிசி, பிரீபயாடிக் பண்புகளை கொண்ட உணவு.
  • ஹார்மோன் சமநிலைக்கு வித்திடும்.

அரிசி சாதம் சாப்பிடுவது பசியை போக்கி வயிறை நிரப்பும், இதனால் எந்தவொரு ஆரோக்கிய நன்மையும் கிடைப்பதில்லை, விரைவாகவே உடல் எடை அதிகரிப்புக்குத்தான் வழிவகுத்துவிடும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த காரணத்திற்காக உணவில் அரிசியை பரிந்துரைக்காத ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர் உள்ளனர்.

மறுபுறம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் அரிசி சாதம் சாப்பிடுமாறு வலியுறுத்துகிறார். இரவு உணவில் அரிசியும், பருப்பும் ஏதாவதொரு வடிவில் கண்டிப்பாக இடம் பிடித்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்.

அரிசி, பிரீபயாடிக் பண்புகளை கொண்ட உணவு. இது உங்களுக்கு மட்டுமல்ல, உடலுக்குள் இருக்கும் பல்வேறு வகையான நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறது.

பாலீஷ் செய்யப்பட்ட அரிசியை உண்பதில்தான் பிரச்சினை இருக்கிறது என்ற நிலையில் அதற்கு மாற்றாக கைகுத்தல் அரிசியை உபயோகிக்கலாம். அந்த அரிசியில் கஞ்சி முதல் இனிப்புகள் வரை அனைத்து வகையான உணவுகளையும் சமைத்து உட்கொள்ளலாம்.

பருப்பு வகைகள், தயிர், நெய், இறைச்சி என அரிசி சாதத்துடன் மற்ற உணவு வகைகளை சாப்பிடும் விதத்தில், சரியான அளவில் உட்கொள்ளும்போது நன்மையே கிடைக்கும். குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். மருத்துவரிடம் ஆலோசித்து சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.

அரிசிக்கும் வளர்சிதை மாற்ற நோய் அறிகுறிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இரவில் மிதமான அளவில், எளிதில் ஜீரணமாகும் இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதனை அரிசி பூர்த்தி செய்துவிடும். இட்லி, தோசை என ஏதாவதொரு வடிவத்தில் உட்கொள்ளலாம். அது சீரான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ஹார்மோன் சமநிலைக்கு வித்திடும். இவை குறிப்பாக வயதானவர்கள், இளம் வயதினருக்கும் தேவைப்படுகிறது.

அரிசி சாதம் சாப்பிடுவது சருமத்திற்கும் சிறந்தது. அதிலிருக்கும் புரோ லாக்டின், சருமத்தில் தென்படும் பெரிய துளைகளை சீர் செய்யும். முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.

Tags:    

Similar News