பொது மருத்துவம்

மெட்ராஸ் ஐ: அறிகுறியும்.. தற்காப்பு முறைகளும்..

Published On 2022-11-30 07:34 GMT   |   Update On 2022-11-30 07:34 GMT
  • சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை.
  • ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது.

மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, 'மெட்ராஸ் ஐ'. கண் வெண்படல அழற்சி எனப்படும் இந்த கண் நோய், வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. சில சமயங்களில் பாக்டீரியா தொற்றாகவும் பரவும். சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. கண் பார்வை திறனை கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டவை. எனவே மெட்ராஸ் ஐ தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எப்படி பரவும்?

மெட்ராஸ் ஐ பாதிப்புக்குள்ளானவர் உபயோகிக்கும் பொருட்களை மற்றவர்கள் தொடுவது, பயன்படுத்துவது, நோய்த்தொற்றுக்கு ஆளானவர் கைகளால் தொட்ட இடங்களை தொடுவது போன்றவை மூலம் இந்த கண் நோய் பரவக்கூடும்.

நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் டவல்கள், தலையணை உறைகள், ஒப்பனைப் பொருட்கள் போன்றவற்றை தொடுவதையோ, பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

வீட்டில் யாருக்கேனும் நோய்த்தொற்று ஏற்பட்டால் மற்றவர்களும் அடிக்கடி கை கழுவ வேண்டும். அவர்களுக்கு மருந்து போட்டால் உடனே கைகளை கழுவி விட வேண்டும்.

மெட்ராஸ் ஐ வருவதற்கு காரணங்கள்?

வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்டாலும் இந்த வைரஸ் தொற்றுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வேறுபாடுகள் உள்ளன. இவற்றுள் ஒரு சில வைரஸ் மாறுபாடுகள்தான் கருவிழியை பாதிக்கும் தன்மை கொண்டவை.

ஒரு சிலருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டதுமே கண்கள் மங்கலாக தொடங்கிவிடும். சிலருக்கு வாரக்கணக்கில் நீடிக்கும். முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது.

வைரஸ்கள் மாறுபாடு கொண்டவை என்பதால் கடைகளில் விற்கப்படும் கண் சொட்டு மருந்துகளை உபயோகிக்கக்கூடாது. மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மெட்ராஸ் ஐ-க்கான அறிகுறிகள்:

கண் சிவப்பு நிறத்துக்கு மாறுதல், கண்களில் உறுத்தல் ஏற்படுதல், கண் எரிச்சல், கண்களில் பூழை ஏற்படுதல், கண்களில் நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற அறி குறிகள் தென்படும். வைரஸ் தொற்று தீவிரமாக இருந்தால் கண்களில் வீக்கம், பார்வை மங்குதல், வெளிச்சத்தை பார்ப்பதற்கு சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் அதிகமாக தென்படும்.

எப்போது குணமாகும்?

ஒருவருக்கு மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் நான்கு முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் முழுமையாக வெளிப்படும். முறையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டால் இரண்டு முதல் மூன்று வாரத்துக்குள் சரியாகிவிடும்.

கணினியில் வேலை பார்ப்பது உள்பட வழக்கமான வேலைகள் அனைத்தையும் பார்க்கலாம். ஆனால் சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்வது பாதுகாப்பானது. அது மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

ஒருசில அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே கண் மருத்துவரை அணுகி பரிசோதித்துவிட வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை உபயோகித்தால் சாதாரண தொற்று ஒரு வாரத்துக்குள்ளேயே சரியாகிவிடும். வைரஸ் தொற்று கடுமையாக இருந்தால் கண் இயல்புக்கு திரும்புவதற்கு இரண்டு முதல் நான்கு வாரங்கள் ஆகக்கூடும்.

Tags:    

Similar News