பொது மருத்துவம்

இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் ஆஞ்சியோ செய்தால் போதுமா?

Published On 2023-07-13 07:57 GMT   |   Update On 2023-07-13 07:57 GMT
  • தற்போது இதய நோயால் ஏராளமானோர் உயிரை இழக்கின்றனர்.
  • இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கு 3 வகையான தீர்வுகள் உள்ளன.

தற்போது இதய நோயால் ஏராளமானோர் உயிரை இழக்கின்றனர். இதய நோய் வருவதற்கு கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் அதிகமாக சாப்பிடுவதுடன், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்வது தான். இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளையும் உட்கொண்டு வர வேண்டும்.

ஆஞ்சியோ (ஆஞ்சியோகிராம்) என்பது இதய ரத்தக்குழாய் அடைப்பை கண்டறியும் ஒரு பரிசோதனை முறையாகும். ஆஞ்சியோ என்பது ஒரு சிகிச்சை முறையோ அல்லது தீர்வோ அல்ல. ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பின் அளவு, தன்மை ஆகியவற்றுக்கு ஏற்பவும், நோயாளியின் வயது, உடல்நிலை போன்றவற்றின் அடிப்படையிலும் அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை தேவை என்பதை இதய நோய் சிகிச்சை நிபுணர் முடிவு செய்வார்.

பொதுவாக இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கு 3 வகையான தீர்வுகள் உள்ளன. அவை:

1) மருந்தின் மூலம் அடைப்பை நீக்கலாம்,

2) ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்க ஆஞ்சியோபிளாஸ்ட்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் முறையை கையாளலாம். இந்த முறையில் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்க வலை போன்ற அமைப்புள்ள ஸ்டென்ட் பொருத்தப்படும். இது ரத்தக்குழாயை விரிவடையச்செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

3) இதய பைபாஸ் ஆபரேஷன். ரத்தக்குழாயில் உள்ள அடைப்பின் அளவு அதிகபட்சமாக இருப்பது, ஸ்டென்ட் பொருத்த முடியாத நிலை போன்ற சூழ்நிலைகளின் போது பைபாஸ் ஆபரேஷன் பரிந்துரைக்கப்படும்.

இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால் இந்த மூன்றில் ஏதாவது ஒரு தீர்வின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இதய நோயாளிக்கு இம்மூன்றில் எது தேவை, எந்த சிகிச்சை முறை பொருத்தமானது என்பதை இதய நிபுணர் தான் முடிவு செய்வார்.

இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ)

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News