பொது மருத்துவம்

பார்வை குறைபாடு... மெத்தனமாக இருக்காதீர்கள்

Published On 2025-05-22 08:52 IST   |   Update On 2025-05-22 08:52:00 IST
  • பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு முதலிய அனைத்துமே மனதைப் பாதித்து கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
  • எப்பொழுது உங்கள் கண் பார்வை மீது உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

கண் பார்வை சிறிது சரியாக இல்லை என்றால் கூட பயம் வந்துவிடும் என்பது உண்மைதான். பார்வை பிரச்சனை இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது நம்பிக்கை இழந்து நடக்கவே பயப்படுவதுண்டு. 50 வயதைத்தாண்டிய பலபேருக்கு இந்தப்பிரச்சனை இருக்கிறது. 40 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு வரும் வெள்ளெழுத்து பிரச்சனை என்பது சரிசெய்யக்கூடியது. 50 வயதுக்கு மேல் வரும் பார்வைக் குறைபாடு பெரும்பாலும் கண்புரை நோய் (கேட்டராக்ட்) பிரச்சனையாக இருக்கக்கூடும்.

இதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு முதலிய அனைத்துமே மனதைப் பாதித்து கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். சாதாரணமாக நாம் செய்யும் அன்றாடக் காரியங்களில் கூட தடுமாற்றம் காணப்படும். கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயமும், வேறு ஏதாவது பொருட்கள் மீது மோதி விடுவோமோ என்ற பயமும் வந்துவிடும்.

இதனால் உங்கள் அன்றாட செயல்கள் குறைந்துவிடும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயக்கம் ஏற்படும். பயத்தினால் சரிவர நடக்காததினால் தினமும் நடக்க வேண்டிய நடை குறைந்துவிடும். இதனால் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். பெண்களைப் பொறுத்தவரை அன்றாட வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் தடைபடும். இதனால், தனக்கு உதவிக்கு யாரும் இல்லையே என்ற அச்சமும் மற்றவர்களை நம்பித்தான் வாழவேண்டுமோ என்ற கவலையும் அதிகமாக வந்துவிடும்.

இதற்கு தீர்வு: எப்பொழுது உங்கள் கண் பார்வை மீது உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும். அவர் சொல்லும் பரிசோதனைகளை உடனே செய்ய வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்ளச் சொன்னால் உடனே செய்ய வேண்டும். கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னால் அதற்கும் உடனடியாக தயாராக வேண்டும்.

கண் மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை உடனடியாக செய்தால் தான் மறுபடியும் பார்வை பழைய நிலைக்கு வரும். அப்பொழுதுதான் எந்த வேலையையும் மிகச் சாதாரணமாக செய்து முடிக்கலாம் என்ற துணிவு வரும். பார்வை குறைபாடு தானே என்று மெத்தனமாக இருக்காதீர்கள்.

Tags:    

Similar News