அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
- உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரம்புகளின் தூண்டுதலால் ஏற்படுகிறது.
- ஆசனவாய்ப் பகுதியிலும் நோய் இருந்தால் பிரச்சனை கண்டிப்பாக இருக்கும்.
மலஜலம் கழிக்கும் வயிற்று உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரம்புகளின் தூண்டுதலால் இந்த பிரச்சினை உங்களுக்கு ஏற்படுகிறது.
மலக்குடலில் ஒன்றும் இல்லாதபோதும் கூட, மலக்குடலிலுள்ள நரம்புகளை தொந்தரவு பண்ண ஆரம்பிக்கும். உடனே நரம்புகள் மூளைக்கு செய்தியை அனுப்பி மலக்குடலில் உள்ள தசைகளை சுருங்கி விரியச் செய்து மலத்தை வெளியேற்று என்று தெரிவிக்கிறது.
இதனால் தான் இந்த வயித்தைக் கலக்குவது, உடனே பாத்ரூம் ஓடுவது எல்லாமே. இது வயிற்றில் உணவுப் பாதையில் ஏதாவதொரு நாள்பட்ட நோயினால் ஏற்படும் பிரச்சனை ஆகும். இது குணப்படுத்தக் கூடிய நோய்தான்.
மொத்த ஜனத்தொகையில் சுமார் 30 சதவீதம் பேருக்கு பெருங்குடலின் கடைசி பாகத்திலும், ஆசனவாய்ப் பகுதியிலும் நோய் இருந்தால் மேலே கூறிய பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். அதீத அமிலச் சுரப்பு இந்த பிரச்சனையை உண்டாக்கும் என்பது மிகமிகக் குறைவே.
மருந்துகளின் பக்கவிளைவுகள், செரிமானப் பிரச்சனைகள், உணவு ஒத்துக்கொள்ளாமல் போகுதல், உணவுக் குடலில் நோய்கள், உணவுப் பழக்க வழக்க மாற்றங்கள், உடலில் இருக்கும் மற்ற நோய்களினால் ஏற்படும் மன அழுத்தம், திடீரென்று ஒரு குறிப்பிட்ட உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், அதிக கொழுப்பு நிறைந்த உணவைத் தொடர்ந்து பல நாட்கள் உண்ணுதல், அதிக காரம், அதிக மசாலா நிறைந்த உணவுகளை அடிக்கடி உண்ணுதல், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாமல் போகுதல், ஹைப்பர் தைராயிடிசம் பிரச்சனை உள்ளவர்கள், நாள்பட்ட சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பெருங்குடல் நோய்கள், மலக்குடலில் கட்டி, திசு வளர்ச்சி, திசு திரட்சி, மூலம், ஆசன வாயிலுள்ள ரத்தக் குழாய்களில் வீக்கம், மலக்குடல் புற்றுநோய் இன்னும் பல பெருங்குடல் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு நோய்களினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த பிரச்சனையால் மன இறுக்கம், கவலை, பதற்றம், எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபமடைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை முதலியவைகளை உண்டாக்கும்.
வேளாவேளைக்கு சாப்பிடுதல், வெளியில் சாப்பிடுவதை அறவே தவிர்த்தல், அதிக காரம் மசாலா உள்ள உணவுகளை தவிர்த்தல், உணவில் அளவுக்கட்டுப்பாடு, உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடுதல், மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், அதிக அளவில் தண்ணீர் அருந்துதல், பதற்றம், டென்ஷன், கவலை இல்லாமலிருத்தல் போன்றவைகளை கடைப்பிடித்தால் பாத்ரூமுக்கு அவசர அவசரமாக ஓடும் பிரச்சனை இல்லாமல் வாழலாம்.
பிரச்சனைக்கு மூல காரணம் என்ன என்பதை உணவு மண்டல சிகிச்சை நிபுணரை (கேஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட்) உடனடியாக சந்தித்து சிகிச்சை பெறுவது சிறந்தது.